பொது பெயர்: புங்க மரம், கரஞ்சி மரம்,derris indica
அறிவியல் பெயர்; Milletia pinnata, Pongamia pinnata
பட்டாணி ,உளுந்து, நிலக்கடலை வகையை சேர்ந்த லெகூம் (legume)குடும்பத்தினை சேர்ந்தது, எனவே காற்றில் உள்ள நைட்ரஜனை மண்ணில் நிலை செய்யும் வேர் முடிச்சுகளை (root nodules)கொண்ட வெகு சில மரங்களில் புங்கை மரமும் ஒன்று.
பரவலாக ஆசியா,ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள் பிரதேசங்களில் காணப்படும் மித மற்றும் வறண்ட(arid and semi arid) நில தாவரம் ஆகும்.
கோடையில் மிக சிறிதளவே இலையுதிரும் ,பசுமை மாறா மரம், 3-4 நான்கு ஆண்டுகளில் முதிர்ச்சி அடையக்கூடிய மிதமான கடின மரம்(semi hard wood) ஆகும்.
இதன் விதைகளில் 25-40% எண்ணை இருப்பதே இதனை முக்கியமான மாற்று எரிபொருள் மரமாக கருதக்காரணம். ஏற்கனவே இதன் எண்ணை சோப்பு, விளக்கெரிக்க, பெயிண்ட்கள், ஆயுர்வேத மருந்து,இயற்கை பூச்சிக்கொல்லி ஆகியனத் தயாரிக்க பயன்ப்படுத்தப்பட்டு வருகிறது. கசப்பு தன்மை கொண்ட எண்ணை என்பதால் சமையலுக்கு பயன்ப்படுத்துவதில்லை.
இம்மரம் இந்தியா முழுவதும் சாலையோரங்களிலும், பொது நிலங்களிலும்,வாய்க்கால்,வரப்பு என தானாகவே வளர்ந்து இருப்பதைக்காணலாம்.
நிழல் தரக்கூடிய, எளிதில் அதிக பராமரிப்பு இன்றி வளரக்கூடிய மரம் என்பதால் நெடுஞ்சாலைத்துறையினராலும் சாலை ஓரங்களில் நடப்பட்டுள்ளது.
புங்க (அ) புங்கை மரம் என்னும் இத்தாவரம் பட்டாணி சார்ந்துள்ள பேபேசியேக் குடும்பத்தைச் சார்ந்தது. இது வெப்பமண்டலப் பகுதிகளான ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது.
புங்கை மரத்தின் தாயகம் இந்தியா. குறிப்பாக தென்னிந்தியாவில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலேயே இவை தோன்றியிருக்க வேண்டும் என்று தாவரவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவிலிருந்து இந்த மரம் தென்கிழக்கு ஆசியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும், ஹவாய்க்கும், அமெரிக்காவில் உள்ள புளோரிடாவிற்கும் இந்த மரம் பரவியிருக்கிறது.
ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்து புங்க மரம்தான். எந்தப் பகுதியிலும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடியவை. அதிக நிழலை தரக்கூடியது. பசுமை படர்ந்த மரமாக காட்சியளிக்கும்.
இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படும். சாலை ஓரங்களில் நிழல் தரவும், மண் அரிப்பைத் தடுக்கவும் புங்கை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. புவி வெப்பமயமாதலை தடுக்கும் தன்மையுள்ள மரங்களில் புங்க மரமும் ஒன்று.
வெப்பத்தின் தன்மையை உறிஞ்சி சீரான சீதோஷ்ண நிலையை ஏற்படுத்தும் குணம் இதற்கு உண்டு. புங்கை மரத்தின் மலர்கள், விதைகள், இலைகள், பட்டை,வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
விதை, எண்ணெய், மலர்கள்,இலைகள், தண்டுப்பட்டை, ஆகியவற்றில் இருந்து பல ரசாயனப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.
கருஞ்சின்,பொன்காப்பின்,பொன்காக்ளாப்ரோன்,பொன்கால்,கரஞ்சாக்ரோமின்,கனுகின்,நீயோக்ளாப்ரின் போன்றவை. நோய் எதிர்ப்பு சக்தி புங்கன் கிருமிகளை அகற்றி உடலைத் தேற்றும் குணம் உடையது.
புங்கன் இலையைக் குடிநீரிட்டு குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்த கணத்திற்குக் கொடுக்கலாம். புங்கன் இலையை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து அதை குளித்து வந்தாலும் அல்லது ஒற்றடமாக கொடுத்து வந்தாலும் கீல் வாத நோய்கள் கட்டுப்படும்.
புங்கன் இலைச்சாற்றை வயிறு பொருமலுக்கும், கழிச்சலுக்கும் குறிப்பிட்ட அளவு உள்ளுக்குக் கொடுக்க குணம் தெரியும்.
புங்கன் இலையை அரைத்து ரத்த மூலத்திற்குப் பற்றிடலாம். இலைகளின் சாறு, இருமல், வாயுக்கோளாறு, அஜீரணம்,பேதி ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாகும்.கஷாயம் பெரி-பெரி நோயை குணப்படுத்தும்.
புங்கமரத்தின் பால் புண்களையும், வாய்வையும் நீக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு பொன்போன்ற நிறத்தைக் கொடுக்கும். இந்த பாலை புண்களுக்குப் போட்டு வந்தால் விரைவில் அவை ஆறும்.
நீரிழிவை குணமாக்கும் மலர்கள் மலர்கள் நீரிரிழிவு நோய்க்கு மருந்தாகும். நீரிழிவு நோயினருக்கு அதிக தாகம் ஏற்படும். இதற்கு புங்கம் பூவை கசாயமிட்டு அருந்தி வரலாம்.
புங்கன் பூவை தேவையான அளவுஎடுத்துக் கொண்டு சிறிது நெய் விட்டு வறுத்து இடித்துப் பொடிசெய்து 500 மி.கி. முதல் 1 கிராம் வீதம் உண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மேக நோய்கள் குணமாகும் புளிப்பு, வாயு பதார்த்தங்களை இச்சமயம் நீக்க வேண்டும்.
பூவை நிழலில் உலர்த்தி நெய்யில் வறுத்துப் பொடி செய்து 1 சிட்டிகை காலை, மாலை 2 அல்லது 3 மண்டலம் தேனில் கொள்ள மதுமேக ரணங்கள் தீரும்.
புகை, போகம், புளி, மீன் கருவாடு நீக்கவும். புண்களை ஆற்றும் விதைகள் விதைகளின் பொடி கக்குவான் இருமலுக்கு நல்லது.
எண்ணெய் அஜீரணத்துடன் கூடிய ஜுரத்தை குணப்படுத்தும். தோல் நோய்களுக்கு புறப்பூச்சு மருந்தாகப் பயன்படும்.
புழுவைத்த புண்களை ஆற்றும். புங்கம் விதையிலிருந்து குழித்தைல முறைப்படி எடுக்கப்பட்ட எண்ணெயை குறிப்பிட்ட அளவு உள்ளுக்கும், மேலும் பூசி வர மேகம், பாண்டு முதலிய நோய்கள் குணமாகும்.
நரை,திரை,மூப்பு நீங்கி இளமையோடு நீண்ட காலம் வாழலாம். சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் இருமலுக்கு புங்கன் விதைப் பொடியை தேனுடன் கலந்து 1 முதல் 5 அரிசி எடை அளவு கொடுக்க குணம் தரும்.
இதையே தேள் கடி நஞ்சுக்கும் உண்டால் அவ்விஷம் முறியும். வேரில் எடுக்கப்படும் சாறு ஆழமான புழுவைத்த புண்களை ஆற்றும், பற்களை சுத்தப்படுத்தவும்,ஈறுகளை வலுப்படுத்தவும் பயன்படும்.
புங்கன் வேரை காடியில் அரைத்து விதை வீக்கத்திற்கு பற்றிட்டு வர வீக்கம் குறையும். புங்கன் வேர்ப் பட்டையைப் பொடி செய்து 500 மி.கி. வீதம் மூன்று வேளை உட்கொண்டு வந்தால் இருமல், ஈளை முதலியவை குணமாகும்.
பயோடீசலாகும் விதை புங்கன் எண்ணெயிலிருந்து தற்பொழுது பயோடீசல் தயார் செய்து வாகனம் மற்றும் ஆயில் இஞ்ஜின்களுக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள். இந்த ஆயிலைப் பிரிக்கும் போது கிளசரின் மற்றும் மெத்தனால் கிடைக்கின்றது.
இந்த ஆயில் சோப்பு செய்யப் பயன்படுத்தப் படுகிறது. அதன் புண்ணாக்கு பயிர்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுத்துகிறார்கள்.
இயற்கையின் அருட்கொடைகள் தான் மரங்கள், செடி, கொடிகள். இவை ஒவ்வொன்றுமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.
மேலும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படும் பிராண வாயு அதாவது ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் மரங்கள். மழையை வருவிக்கும் வருணபகவானாக மரங்களும், செடிகளும் உள்ளன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் பல வகைகள் உள்ளன. இந்த மரங்களில் புங்க மரத்தின் மருத்துவப் பயன்களை அறிந்து கொள்வோம்.
ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்து புங்க மரம்தான். எந்தப் பகுதியிலும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடியவை. அதிக நிழலை தரக்கூடியது.
பசுமை படர்ந்த மரமாக காட்சியளிக்கும். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படும். சாலை ஓரங்களில் நிழல் தரவும்,, மண் அரிப்பைத் தடுக்கவும் புங்கை மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
புவி வெப்பமயமாதலை தடுக்கும் தன்மையுள்ள மரங்களில் புங்க மரமும் ஒன்று.
வெப்பத்தின் தன்மையை உறிஞ்சி சீரான சீதோஷ்ண நிலையை ஏற்படுத்தும் குணம் இதற்கு உண்டு.
புங்க மர விதையிலிருந்து பயோடீசல் (Biodisel) உருவாக்கும் திட்டத்தைப் பற்றி மஹாராஷ்டிர அரசு ஆலோசனை செய்து வருகிறது. இந்த விதைகளிலிருந்து 30 – 40 சதவீத எண்ணெய்ச் சத்து உள்ளதாக கண்டறிந்துள்ளனர்.
மருத்துவப் பயன்கள்
இலைகளின் சாறு – இருமல், சளி, பேதி, வயிற்றுப் பொருமல், பசியின்மை போன்றவற்றைப் போக்கும்.
விதைகள்:- தோல் வியாதிகளை அகற்றும்.
வேர்கள்:- பற்கள் மற்றும் ஈறு சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும்.
மரப்பட்டை:- மூல வியாதிக்கு சிறந்த மருந்து.
பூக்கள்:- உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
விதையின் பொடி:- காய்ச்சல், இருமல், நெஞ்சுச் சளியைப் போக்கும்.
வித்துகளில் உள்ள எண்ணெய் வாத வியாதிகளுக்கும், மூட்டு வலிக்கும் இந்திய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
புங்க மரத்தின் இலை, பூ, வேர், விதை, எண்ணெய் அனைத்துமே மருத்துவப் பயன் கொண்டது. இதற்கு புன்கு, பூந்தி, கரஞ்சகம், கரஞ்சம் என்ற வேறு பெயர்களும் உண்டு.
புங்கின்விதை காற்கிரந்த புண்கரப்பான் காதெழுச்சி
அங்கசன்ன கண்ணோய்க்கும் ஆம்பேதி-யுங்கட்கும்
காட்டுப்புங் கின்விதைக்கு கண்டதே மற்சொறிமேய்ப்
பூட்டுப்பங் கின்வாய்வும் போம்
(அகத்தியர் குணபாடம்)
புங்கன் இலை, புளியிலை, நொச்சியிலை, மாவிலை, வேப்பிலை, பொடுதலை, உத்தாமணி, கறிவேப்பிலை, நாரத்தை இலை, சங்கச்செடி இலை, அவுரி இலை, பொன்னாவாரை இலை இவைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நீர்விட்டு கொதிக்க வைத்து அதில் கடுகுரோகிணி, இந்துப்பு இவற்றை துணியில் சிறு பொட்டலங்களாகக் கட்டி கொதிக்க வைத்த நீரில் போட்டு நன்றாக சாறு இறங்கியவுடன் வடிகட்டி மாந்த நோய்களுக்கு கொடுத்து வந்தால் மாந்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும்.
புங்கம் பூ எடுத்து நெய்விட்டு வதக்கி தூளாக செய்து தினமும் 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் மேக நோய்கள் வராது.
மேலும் மேக நோயின் பாதிப்புகள் முற்றிலும் நீங்கும். இதைத் தொடர்ந்து ஒரு மண்டலம் உண்டு வருவது நல்லது. இக்காலங்களில் புளி, புகை வாயுவை அதிகரிக்கும் உணவுகள் முதலியவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
புங்கம் பூ, புளியம்பூ, வசம்பு, சின்ன வெங்காயம், சீரகம், வெட்பாலை அரிசி, நன்னாரி என வகைக்கு 35 கிராம் எடுத்து 3/4 லிட்டர் பாலில் கொதிக்க வைத்து 1 லிட்டர் புங்க எண்ணெய் விட்டு காய்ச்சி கரப்பான், நாள்பட்ட ஆறாத புண்கள் மீது தடவினால் அவை எளிதில் குணமாகும்.
தீக்காயம், நாள்பட்ட ஆறாத புண்கள், வடுக்கள், தழும்புகள், கரப்பான் நோய்கள், சொரி, சிரங்கு இவற்றிற்கு புங்க எண்ணெயை லேசாக சூடாக்கி அவற்றின் மீது பூசி வர மேற்கண்ட நோய்கள் அனைத்தும் தீரும்.
புங்க வேரின் தோலை நீக்கி, மெல்லியதாக சீவி சாறு பிழிந்து அதற்கு சமமான அளவு தேங்காய்பால் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு, ஒரு மெல்லிய துணியில் நனைத்து, பிளவை, ஆறாத புண்கள், பால்வினை நோய்களால் ஏற்பட்ட புண்கள் மீது தடவிவந்தால் புண்கள் எளிதில் ஆறும்.
புங்க எண்ணெய் சருமத்தை பாதுகாப்புடன் பளபளக்கச் செய்யும். தினமும் உடலில் புங்க எண்ணெய் தடவி வந்தால் சரும நோய்கள் ஏதும் அணுகாது.
புங்க எண்ணெய் , வேப்ப எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், புன்னை எண்ணெய் இவைகளை வகைக்கு 700 மி.லி. எடுத்து அதனுடன் சின்ன வெங்காயம், வசம்பு, பெரிய வெங்காயம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், கிராம்பு, சதகுப்பை, கடுகுரோகிணி, சித்திரமூலம் வகைக்கு 17.0 கிராம் எடுத்து இவைகளை காடி நீர்விட்டு அரைத்து மேற்கூறிய எண்ணெய்களுடன் கலந்து, மேலும் சிறிது காடி நீர் சேர்த்து அடுப்பேற்றி எரித்து மெழுகு பதத்தில் இறக்கி வைத்துக்கொண்டு சருமத்தில் தடவி வந்தால் மேக நோய், சூலைநோய், இசிவி சூதக வலி போன்ற நோய்கள் தீரும்.
புங்க இலையை வதக்கி வீக்கங்களுக்கு கட்டலாம்.
புங்கமரத்தின் பால் புண்களையும், வாய்வையும் நீக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு பொன்போன்ற நிறத்தைக் கொடுக்கும்.
புங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் பல வகைகளில் மருத்துவக் குணம் கொண்டவை. தீப் புண்களை ஆற்றும் சக்தி புங்கை மரத்தின் பட்டைக்கு உள்ளது.
புங்கை மரத்தின் பட்டை, ஆலம்பட்டை, பழுத்த அத்தி இலை -இவை மூன்றையும் நன்கு அரைத்து புங்கன் எண்ணெய் விட்டுக் காய்ச்சி வடிகட்டிய தைலத்தை தீ சுட்ட புண்களின் மீது தடவி வர புண்கள் வெகுவாக ஆறும்.
புங்கை மரப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர மூல நோய் தீரும்.
பல் துலங்க புங்கை மரத்தின் குச்சிகளைப் பயன்படுத்தினார்கள்.
புங்கம் வேர், மிளகு, திப்பிலி, சீந்தில் இலை, மகிழவேர் இவற்றை சம அளவு எடுத்து கற்றாழை சாற்றால் அரைத்து சிறு உருண்டையளவு உட்கொள்ள எலி கடியினால் ஏற்படும் விஷம் முறியும்.
புங்கை இலைக்கு அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்ணை போக்கும் சக்தி உள்ளது. புங்கன் மர இலையை இடித்து சாறு பிழிந்து 30 முதல் 60 மில்லி அளவு குடித்து வர வயிற்றுப்புண் மற்றும் அதனால் ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.
புங்கன் இலையை தூளாக்கி விளக்கெண்ணெய் விட்டுக் காய்ச்சி, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து தடவி வர காயம் ஆறும்.
இதில்லாமல், புங்கன் இலையை பச்சையாக அரைத்து வைத்துக் கட்டினாலும் வெட்டுக்காயம் விரைவில் ஆறும்.
புங்கன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கத்தின் மீது வைத்து கட்டி வர வீக்கம் குறையும்.
புங்க மரத்தின் பயன்கள் ஏராளம். அதன் பயனை முழுமையாக அடைய நிறைய மரங்களை நாமும் நட்டு வளர்த்து பயன் பெறுவோம்.
மரம் வளர்க்க பெரிய அளவில் பராமரிப்பு தேவை இல்லை, இலைகள் கசப்பு தன்மை கொண்டவை என்பதால் கால்நடைகளும் அதிகம் மேயாது.
வறட்சி தாங்கவல்லவை எனவே குறைவான நீரை மரக்கன்று நடும் காலத்தில் வாரம் ஒரு முறை என சுமார் ஆறு மாதங்கள் பாய்ச்சினால் போதும் , வேர் நன்கு ஊன்றியதும் ,மரமே தனக்கான தண்ணீர் தேவையை பார்த்துக்கொள்ளும்.
வேர்கள் ஆழத்தில் மட்டும் அல்லாமல் பக்க வாட்டிலும் வலைப்போல பரவும் தன்மை கொண்டவை என்பதால் மண் அரிப்பு உள்ள இடங்களில் ,மண் பாதுகாப்பிற்காகவும் நடப்படும் ஒரு மரம்.
மேலும் வேர் முடிச்சுகள் வளி மண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைப்படுத்துவதால் ஊட்ட சத்து இல்லாத நிலமும் வளமடையும், எனவே மரங்களுக்கு இடையே ஊடு பயிர் செய்தால் நல்ல விளைச்சலும் லாபமும் கிடைக்கும்.
இதனால் இந்திய வேளாண் துறை மற்றும் பயனற்ற நில அபிவிருத்தி கழகம்(National Wasteland Development Board) ஆகியவை நில வளப்படுத்துதல் திட்டத்தின் கீழ் பல இடங்களில் புங்கை மரத்தினை நட்டும் வருகிறார்கள்.
நிலப்பரப்பு கையிருப்பு:
அரசின் புள்ளிவிவரப்படி இந்தியாவில் பயிரிட தகுதியற்ற ஊட்டச்சத்தில்லாத,வறண்ட ,தரிசு நிலத்தின் அளவு சுமார் 38.4 மில்லியன் ஹெக்டேர் முதல் 187 மில்லியன் ஹெக்டேர் வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு கணக்கு கூட துல்லியமாக எடுக்கமாட்டாங்க போல. வறுமைக்கோட்டுக்கு கீழ் எத்தனைப்பேர் இருக்காங்க கேட்டாலும் சரியான கணக்கு இல்லைனு சொல்லுறவங்க தானே :-))
National Wasteland Development Board இன் கணக்குப்படி 123 மில்லியன் ஹெக்டேர் நிலம் பயனற்றது. எனவே நம் நாட்டில் நிறைய இடம் காலியாக சும்மா கிடக்கிறது என்பது புலனாகிறது.
எனவே பயோ டீசலுக்கு மரம் வளர்க்க இடம் இல்லைனு சொல்ல முடியாது முயற்சி எடுத்து வளர்த்தால் ஏகப்பட்ட அன்னிய செலவாணி மிச்சம் செய்யலாம், மேலும் கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.
இவ்வளவு பயனற்ற/தரிசு நிலங்களும் இந்தியாவில் 19 மாநிலங்களில் 146 மாவட்டங்களில் பரவி கிடக்கிறது. அதிக பயனற்ற நிலப்பரப்பில் ஆந்திரா முதலிடத்திலும் பின்னர் வரிசையாக குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா,மத்திய பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான் ,மற்றும் தமிழ் நாடு ஆகிய மாநிலங்களில் மொத்த தேசிய பயனற்ற நிலப்பரப்பில் 83% நிலம் இருக்கிறது.
தற்போதைய புங்க மர சாகுபடி நிலை:
மத்திய ,மாநில அரசுகள் ஒருங்கிணைந்த்து பயோ டீசலுக்காக புங்கை மரம் வளர்க்க திட்டமிடலாம், இது வரை சிறிய அளவிலே அரசு புங்க மரம் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறது,அதுவும் மண் அரிப்பை தடுக்கவும்,சாலையோர நிழல் மரம் அமைக்கவும் மட்டுமே.
பெருமளவில் முறையாக யாரும் புங்க விதைகளை சேகரித்து பயோ டீசல் தயாரிக்க முயலவில்லை. சில தன்னார்வ மற்றும் சுற்று சூழல் அமைப்புகள் மட்டும் சிறிய அளவில் விதைகளை சேகரித்து பயோ டீசல் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்தியாவில் பயனற்ற இடங்கள் எல்லாம் அரசின் பொறுப்பில் உள்ளதால் அவர்கள் ஆப்பிரிக்க நாடுகளில் கூட நில குத்தகைக்கு எடுத்து புங்க மரம் பயிரிட முயற்சித்து வருகிறார்கள்.
Himalayan Institute of Yoga Science and Philosophy என்ற தன்னார்வ அமைப்பு இந்தியாவில் 20 மில்லியன் புங்க மரத்தினை 45,000 விவசாயிகள் மூலம் நட்டுள்ளது. மத்திய அரசின் உதவியாக வேலைக்கு உணவு என விவசாயிகளுக்கு 5,000 டன் அரிசி வழங்கியுள்ளது. ஆப்பிரிக்க நாடான உகாண்டா, கேமரூனிலும் குத்தகை அடிப்படையில் புங்க மரம் பயிரிட்டுள்ளார்கள்.
பயிரிடும் முறை:
வழக்கம் போல விதைகளினை நாற்றாங்காலில் நட்டு வரும் மரக்கன்றையும் பயன்ப்படுத்தலாம் அல்லது ஒட்டுக்கன்றையும் பயன் படுத்தலாம்.
ஒட்டுக்கன்று:(grafting)
இளம் மரக்கன்றினை எடுத்துக்கொண்டு அதன் மேல் புற தண்டில் பாதியை வெட்டி எடுத்துவிட்டு அதில் செங்குத்தாக பிளவினை ஆங்கில V வடிவில் உருவாக்கவும். இப்படி செய்யப்படும் அடிப்பாகத்திற்கு ரூட் ஸ்டாக் (root stock)என்று பெயர்.
பின்னர் ஏற்கனவே நன்கு முற்றிய ,விளைச்சல் தரும் புங்க மரத்தின் சிறு கிளையை எடுத்துக்கொண்டு அதன் அடிப்பாகத்தினை உளி/ஆப்பு போல சீவி விடவும்,இந்த மேல் பாகத்திற்கு சியான் (scion)என்று பெயர்.
பின்னர் மேல் பாகத்தினை V வடிவ பிளவில் செறுகி ,இதற்கென விற்கப்ப்படும் துணிப்பட்டை / பாலித்தீன் டேப் கொண்டு சுற்றிக்கட்டி விட வேண்டும்.(பழைய துணிகளையும் கிழித்துப்பயன்ப்படுத்தலாம்)
இப்படி செய்வதன் மூலம் இளமரக்கன்றுக்கு முதிர்ந்த மரக்கன்றின் முதிர்ச்சியும், காய்ப்பு திறனும் கிடைக்கும். எனவே விரைவில் காய்க்க துவங்கும்.
இப்படியான ஒட்டு முறைக்கு “grafting”என்று பெயர், இம்முறையில் தான் ஒட்டு மாங்காய், பலா மரக்கன்று என பல மரக்கன்றுகள் ,பூச்செடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
நடவு:(planting)
தொழு உரம் இட்டு உழுத நிலத்தினை 4 மீட்டர் இடைவெளியில் பாத்திகளாக பிரித்துக்கொள்ளவும் அல்லது சம தரையிலும் அமைக்கலாம்.
எப்படி இருப்பினும், நான்குக்கு நான்கு மீட்டர் என்ற இடைவெளியில் சுமார் இரண்டு அடி ஆழம்,அகலம்,நீளம் என்ற அளவில் பள்ளம் வெட்டிக்கொண்டு வழக்கமான முறையில் 1:3 என தொழு உரம் ,மண்,மணல் கலந்த கலவையினை நிரப்பி மரக்கன்றினை நட வேண்டும்.
இடைவெளி: 4 மீ X4 மீ
குழி ஆழம்: 2 X2X2 அடி.
இப்படி அமைத்தால் ஒரு ஏக்கர் பரப்பில் சுமார் 250 மரக்கன்றுகள் நடலாம்.
இடைப்பட்ட பகுதிகளில் ஊடு பயிராக மண்ணின் வளத்திற்கும், நீரின் அளவுக்கும் ஏற்ப எந்த பயிரினையும் சாகுபடி செய்யலாம்.ஊடு பயிராக சீதா,நெல்லி,சப்போட்டா போன்ற பழ மரங்களும் நடலாம்.கிடைக்கும் நீராதாரம் பொறுத்தே.
மரக்கன்று நடும் போது தான் செலவு கொஞ்சம் ஆகும் பின்னர் அதிகம் பராமரிப்பு தேவை இல்லை.
செலவு:(cost of cultivation)
முதல் ஆண்டு:
நிலத்தயாரிப்பு மற்றும் மரக்கன்று நட=7246 ரூ
பராமரிப்பு, பாசனம்=2,400 ரூ
இரண்டாம் ஆண்டு= 1410 ரூ
மூன்றாம் ஆண்டு=1,383 ரூ
மொத்தம்= 12,439 ரூ
முதல் ஆண்டு மட்டுமே பராமரிப்பு ,நீர்ப்பாசனம் என கொஞ்சம் செலவு வைக்கும் பின்னர் வெகு சொற்பமே.
மூன்றாம் ஆண்டு முதல் காய்ப்பு துவங்கிவிடும்,5-6 ஆண்டுகளில் முழு திறனில் காய்க்க துவங்கிடும்.
உற்பத்தி மற்றும் வருமானம்:(economics of cultivation ,yield &income)
ஒரு மரம் ஆரம்பத்தில் குறைவாக காய்க்க துவங்கினாலும் முதிர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ப சராசரியாக 90 கி.கி அளவுக்கு விதைகள் கொடுக்கும்.
ஒரு ஏக்கருக்கு 250 மரம் எனில்
250X90=22,500 கிலோ விதைகள் கிடைக்கும்.
இது ஒரு சராசரி அளவு , நிலத்தின் தன்மை, பாசனம் பொறுத்து உற்பத்தி கூடவோ ,குறையவோ செய்யலாம்.எப்படிப்பார்த்தாலும் அதிக செலவில்லாமல் 10,000 கிலோவுக்கு குறையாமல் விதைகள் கிடைக்க வாய்ப்புண்டு.
25-40 % எண்ணை பிழி திறன் உள்ளது ,குறைந்த பட்சம் 25% என வைத்துக்கொண்டாலும் ஒரு கிலோ விதைக்கு கால் லிட்டர் எண்ணை கிடைக்கும்.
எனவே குறைந்த பட்சம் 10,000 கிலோ விதை எனக்கொண்டாலும் 2,500 லிட்டர் எண்ணை ஒரு ஏக்கரில் கிடைக்கும்.
ஒரு லிட்டர் எண்ணை 30 ரூ என வைத்தாலும்
2,500X30=75,000 ரூ
வறண்ட, வளம் இல்லாத நிலத்தில் 75,000 ரூ ஒரு ஏக்கருக்கு வருமானம் கிடைப்பது பெரிய காரியம் அல்லவா.மேலும் ஊடு பயிர் வருமானமும் உள்ளது.மேலும் எண்ணை பிரித்த பின் கிடைக்கும் பிண்ணாக்கு சிறந்த இயற்கை உரம் ஆகும்.
இதில் விதை சேகரிப்பு ஆட்கூலி, எண்ணை ஆட்டும் செலவு சேர்க்கப்படவில்லை. ஆனாலும் வேலை வாய்ப்பு அற்ற சூழலில் குறைவான முதலீட்டில் வருமானம் ஈட்ட நல்ல வழி புங்க மரம் வளர்ப்பு. இந்த விதைகளில் இருந்து எண்ணை எடுத்து பயன்ப்படுத்த அரசு முன்வந்தால் மட்டுமே இத்திட்டம் சாத்தியமடையும்.
புங்க எண்ணை இயல்பு:(pongamia oil nature)
ஜெட்ரோபா எண்ணைப்போல டிஸ்டில்லேஷன் அல்லது டிரான்ஸ் எஸ்ட்ரிபிகேஷன் செய்யாமல் அப்படியே புங்க எண்ணையை டீசல் எந்திரங்களில் பயன்ப்படுத்த முடியும் ,சிறிது கரி படியும் என்பதால் 20% வரைக்கும் பெட்ரோலிய டீசலில் கலந்து பயன்ப்படுத்துகிறார்கள்
ஏன் எனில் இதன் இயல்பிற்கும் ,பெட்ரோலிய டீசல் இயல்பிற்கும் மிகச்சிறிய அளவிலே வித்தியாசம் உள்ளது.
புங்க எண்ணை இயல்பு:(அடைப்புக்குள் டீசலின் இயல்பு)
விஸ்காசிட்டி= 5.51(3.60)
அடர்த்தி =0.917(0.841)
பிளாஷ் பாயிண்ட் வெப்பம்= 110(80)
டிஸ்டில்லேஷன் வெப்பம்= 285-295(350)
கந்தக உமிழ்வு= 0.13-0.16(1.0)
சீட்டேன் மதிப்பு=51(47.8)
மேற்கண்ட ஒப்பீடுகளில் இருந்து அறிய பெறுவது என்னவெனில்
டீசலை விட விஸ்கோசிட்டி, அடர்த்தி, ஃப்ளாஷ் பாயிண்ட் சற்றே கூடுதலாக இருப்பது ஒரு பின்னடைவு எனவே தனியாக பயன்ப்படுத்துவதை விட டீசலுடன் கலந்து பயன்ப்படுத்துவது சிறப்பான பலனை தரும்.
எப்படி எனில் இதன் சீட்டேன் மதிப்பு(ஆக்டேன் மதிப்பு போன்றது)அதிகமாகவும், கந்த உமிழ்வு குறைவாகவும் உள்ளது .
கந்தகம் சூழலை மாசுப்படுத்தும் என்பதாலேயே தற்போது பிரிமியம் டீசலில் கந்தமில்லாத வகை விற்கிறார்கள்.
மேலும் சீட்டேன் (cetene)மதிப்பு என்பது எஞ்சின் சிலிண்டரில் கம்ப்ரெஷன் ரேஷியோ கணக்கின் படி எஞ்சினை வடிவமைக்க உதவுவது. கம்ப்ரஷன் ரேஷியோ அதிகம் இருந்தால் அதிக திறனுள்ள எஞ்சினை வடிவமைக்கலாம். அதிக கம்ப்ரஷன் ரேஷியோ உள்ள எஞ்சினில் அதிக ஆக்டேன் மதிப்புள்ள எரிப்பொருளை பயன்ப்படுத்த வேண்டும்.
டீசலை விட ,புங்க எண்ணையின் சீட்டேன் மதிப்பு கூடுதலாக இருப்பதால் கலந்து பயன்ப்படுத்தும் போது அதிக ஆற்றல் கிடைக்கும்.
சீட்டேன் மதிப்பு என்பதும் ஆக்டேன்(octane) மதிப்பு என்பதும் ஒன்று தான்.இந்தியாவில் தான் ஆக்டேன் மதிப்பை எல்லாம் எண்ணை நிறுவனங்கள் வெளியில் சொல்வதில்லை. வெளிநாட்டில் ஆக்டேன் மதிப்புக்கு ஏற்ப பெட்ரோல் பங்கில் கலர் கோட் வைத்திருப்பர்கள்,அதிக ஆக்டேன் மதிப்புள்ள எரிபொருள் அதிக விலை. அதிக வேகமும் ,திறனும் உள்ள வாகனத்திற்கு அதிக ஆக்டேன் எரிப்பொருளை தான் நிரப்ப வேண்டும், குறைவான ஆக்டேன் எரிபொருளை நிரப்பினால் எஞ்சின் சேதமடையும்.
இந்தியாவில் ஆக்டேன் எண்ணை வெளியில் சொல்லாமல் பிரிமியம், ஸ்பீட் என்ற பெயரில் கூடுதல் விலையில் விற்கிறார்கள் ஆனால் அவற்றின் ஆக்டேன் எண்ணும் மிக குறைவே.
புங்கை மரம் சாகுபடி பலன்கள்:
#தரிசு நிலப்பயன்ப்படு உயரும், நிலம் வளமடையும்.
#மண் அரிப்பு தடுக்கப்படும்.
#ஊரக வேலை வாய்ப்பு & பொருளாதாரம் பெருகும்.
#விதைகள் மட்டுமே சேகரித்துப் பயன்ப்படுத்தப்படுவதால் மரங்களின் அடர்த்தி அதிகமாகும் , அதிக கரியமில வாயு(co2) கிரகிக்கப்பட்டு ,புவி வெப்பமாதல் குறையும்.
#பெரிய அளவில் புங்க மரம் பயிரிடும் போது அதனை வைத்து கார்பன் கிரெடிட் டிரேடிங்க் மூலமும் வருமானம் ஈட்டலாம்.
# சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விளைவிக்காத பசுமை எரிப்பொருள் கிடைக்கும்.
#அன்னிய செலவாணி சேமிப்பாகும்.
புங்க எண்ணையின் மகத்துவம் அறிந்து அமெரிக்க எரிசக்தி துறை புங்க விதைகளை இறக்குமதி செய்து ஆய்வு செய்துள்ளது, இப்போது அமெரிக்காவிலும் பயிரிட ஆலோசனைகள், முன்னோடி(pilot project) திட்டங்கள் போட்டுள்ளதாக செய்தி.
எனவே மெத்தனமாக செயல்படும் நமது அரசு எந்திரம் சோம்பல் களைந்து புங்க மரம் வளர்ப்பினை ஊக்குவித்தாலே பல தன்னார்வ அமைப்புகள், மகளீர் சுய உதவிக்குழுக்கள், விவசாயிகள் ஆர்வத்துடன் புங்க மர வளர்ப்பில் ஈடுபடுவார்கள். இதனால் கிராமப்புற வேலைவாய்ப்பு பெருகும், பொருளாதாரம் பெருகும்.