Home » படித்ததில் பிடித்தது » பதினெட்டுச் சித்தர்கள் ஜீவ சமாதிகள்!!!
பதினெட்டுச் சித்தர்கள் ஜீவ சமாதிகள்!!!

பதினெட்டுச் சித்தர்கள் ஜீவ சமாதிகள்!!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜீவசமாதிப் பீடங்கள் உள்ளன.

” ஜீவ சமாதியை” பற்றி படித்து இருந்தேன். சித்தர்களின் ஜீவ சமாதியைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன், நீங்கள் அதை தெரிந்து கொண்டு மேலே படித்தல் நலம் .

ஆங்கிலேயர் காலத்தில் , நாடெங்கும் ரயில் தண்டவாளம் போட்டுக் கொண்டு இருந்த காலம். கர்நாடக மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவம் இது. இஞ்சினியர் ஒருவரின் மேற்பார்வையில் , அவர் கூறிய வரைபட அளவுகளின்படி ,ரயில்வே track போட்டு , அவைகளை ஒன்றன் பின் ஒன்றாய் இணைத்துக் கொண்டு கூலியாட்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். பொழுது அடையும் நேரம் . வேலையை அப்படியே விட்டு விட்டு , சரி , நாளை வந்து தொடர்வோம் என்ற சென்று விட்டனர்.

மறுநாள் வந்து பார்த்தபோது , அவர்களுக்கு ஒரு ஆச்சர்யம் காத்து இருந்தது. அவர்கள் போட்டு இருந்த பாதைக்கு சுமார் பதினைந்து , இருபது அடி தள்ளி , அந்த தண்டவாளம் தள்ளிப் போடப்பட்டு இருந்தது. அவர்களால் நம்ப முடியவில்லை .

ஒரு பெரிய கிரேன் அல்லது முப்பது , நாப்பது பேர் வந்து தூக்கி இருந்தால் ஒழிய இது சாத்தியமே இல்லை. அவர்களுக்கு தெரிந்து வேறு எந்த கூலி ஆட்களும் அருகில் இல்லை. பிறகு எப்படி ? சரி விடு. என்று அதை திரும்ப எல்லோரும் , குழுவாக சேர்ந்து பழைய இடத்தில் போட்டுவிட்டு , மேலே வேலை பார்க்க ஆரம்பித்தனர்.

இருட்ட ஆரம்பித்ததும், வேலையை அப்படியே விட்டுவிட்டு , மறுநாள் வந்து பார்த்தால், திரும்பவும் அதே கதை. சரியாக அதே இடத்தில், தண்டவாளம் தூக்கி வீசப்பட்டு இருந்தது.

அந்த இஞ்சினியரும் சரி, கூட இருந்த வேலையாட்களும் சரி மிரள ஆரம்பித்து விட்டனர். அன்றைய வேலையை தொடரவே இல்லை.

அன்றைய தினம் இரவில் அந்த குழுவில் இருந்த ஒருவரின் கனவில் , ஒரு துறவி / சித்தர் தோன்றி சொன்னாராம்.” ஏன்பா, எவ்வளவு இடம் இருக்கு ? கொஞ்சம் தள்ளிப் போட்டுக்கோங்களேன்பா..என் மேலதான் போட்டு ஆகணுமா? நான் தூக்கிப் போட்டாலும், திரும்ப ஏன் மேல மேல போடுறீங்க ? ” அவருக்கு ஒரே ஆச்சர்யம்.

தூக்கம் கலைந்துவிட்டது. கூட இருந்தவர்களை எழுப்பி , விஷயத்தை சொல்ல – அவர்கள் அனைவரும் அதிகாலையிலேயே சென்று – அந்த இடத்தை , நன்றாக சுத்தம் செய்து , குழி தோண்டிப் பார்க்க – அங்கே ஒரு அற்புத மகானின் ஜீவ சமாதி தெரிய ஆரம்பித்து இருக்கிறது.

அதன் பிறகு அங்கே அந்த சித்தரின் ஜீவ சமாதிக்கு – சிறு ஆலயம் எழுப்பி , இன்றும் அவரது அருளைப் பெற்றுக் கொண்டு இருக்கின்றனர்.

அந்த இடத்தில் , அந்த தண்டவாளம் சம்பந்தமே இல்லாமல் , கொஞ்ச தூரம் வளைந்து செல்வதை இன்றும் காணலாம்.

ஒரு தண்டவாளத்தை தூக்கி எறியக் கூடிய சக்தி போல பலப்பல மாபெரும் சக்திகளை தன்னகத்தே கொண்டவர்கள் தான் சித்த மகா புருஷர்கள். அவர்கள் ஜீவ சமாதியில் அவரது அருள் அலைகள் இன்றும் வெளிப்படும்.

உங்கள் நிறை, குறைகளை குறித்து மனம் உருக வேண்டினால் , அவர்கள் உங்களுக்கு தக்க வழி காட்டுவர். இந்த இடங்களில் சென்று தியானம் பண்ண முயற்ச்சித்தாலே போதும். உங்கள் மனது எளிதில் அடங்கி உங்கள் வசப்படும். இது ஒன்றே, ஜீவ சமாதியின் உன்னதத்துக்கு போதுமான சாட்சி.

 

உதாரணமாக சென்னையில் திருபொற்றீஸ்வரர் ஆலயம். அங்கேயே அருகில் பட்டினத்தார் ஆலயம். தண்டையார்பேட்டை திருவருள் குணங்குடி மஸ்தான் தர்க்கா, மைலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம், முண்டகக் கண்ணியம்மன் ஆலயம், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம், கொரட்டூர் ஜம்புகேஸ்வரர் ஆலயம், திருமுல்லைவாசல் மாசிலாமணீஸ்வரர் ஆலயம், பூந்தமல்லி அருகில் திருமழிசையாழ்வார் ஆலயம், அரக்கோணம் அருகில் திருவாலங்காடு திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம், மாங்காடு ஆலயம் மற்றும் அருகில் திருத்தணி, காளகத்தி, திருப்பதி இவை யாவும் சித்தர்கள் அடங்கி அருளும் சிறப்புமிகு தலங்கள்.

இன்னும் சென்னையிலும் அதைச் சுற்றிலும் பல ஜீவ சமாதிகள் உள்ளன.

ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீராமானுஜரும், சீர்காழி, ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் சட்டமுனியும் (சீர்காழி சட்டநாதர்), சிதம்பரம், திருவாவடுதுறை முதலிய இடங்களில் திருமூலரும் இருந்து அருள்புரிகின்றனர்.

திருவாவடுதுறை நரசிங்கம்பேட்டைக்கு அருகில் (மயிலாடுதுறை – கும்பகோணம் மார்க்கம்) உள்ளது. இங்குதான் சிறப்புமிகு திருவாவடுதுறை ஆதீனம் அமைந்துள்ளது. இங்கே ஸ்ரீசமாதி பீடமும் உள்ளது. இதற்கு அருகிலேயே திருவிடைமருதூர் உள்ளது. இங்கு ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு ரோமரிஷி, நாரதர் ஜீவசமாதியில் இருந்து அருள்கின்றனர். இங்கு தல விருட்சமாக உள்ள மருத மரத்தினருகில் இருந்து வாசி லயம் செய்தால் உணரலாம். இங்கிருந்து 10 கி.மீ. தூரத்தில் கும்பகோணம் உள்ளது. இங்கே கும்பேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு அகத்தியப் பெருமான் அருளுகின்றார். இதற்கு அருகிலேயே சாதார வீதி என்று இருக்கிறது. இங்கே சிவவாக்கியராக இருந்த திருமழிசை ஆழ்வாராகிய பெருமான் ஜீவ சமாதி கொண்டுள்ளார்.

குடந்தைக்கு அருகில் உள்ள திருப்பனந்தாள் ஆதீன மடாலயத்திலும் சித்தர்கள் ஜீவ சமாதியிலிருந்து அருள்கிறார்கள். இதற்கு அருகில் திருபுவனம் இருக்கிறது. இங்கு விராலிமலைச் சித்தர்கள் ஜீவசமாதியுள்ளது.

திருவிடைமருதூருக்கு அருகிலிருப்பது கோவிந்தபுரம். இங்கு ஸ்ரீ போதேந்திராள் ஜீவ சமாதியுள்ளது. ஆடுதுறை, குத்தாலம் கதிராமங்கலத்தில் வன துர்க்கை ஆலயமுள்ளது. இங்கு அகத்தியர் அருள்கிறார். மயிலாடுதுறையில் மயூரநாதர் ஆலயத்தில் காளங்கி நாதரும் மற்றும் பல சித்தர்களும் ஜீவ சமாதி ஆகியுள்ளார்கள். திருக்கடையூரிலும் காளங்கிநாதர் அருள்கின்றார்.

மாயவரம், சீர்காழி மார்க்கத்தில் வைத்தீஸ்வரன் கோவில் மருந்தீஸ்வரர், முத்துக்குமாரசுவாமி ஆலயம் இருக்கிறது. இங்கே தல விருட்சமாகிய வேப்ப மரத்தினடியில் தன்வந்தரியின் ஜீவ சமாதியும், ஆலயத்தினுள் வசிஷ்டரின் ஜீவ சமாதியும் அமைந்து அருள் ஒளி பாய்ச்சுகின்றது.

சீர்காழி, சிதம்பரம் மார்க்கத்தில் கொள்ளிடத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் ஆச்சாள்புரம் உள்ளது. இங்கே சத்குரு ஸ்ரீகாகபுஜண்டர் அருள்கின்றார். திருஞானசம்பந்தர் ஜோதியில் கலந்த ஆலயம் இங்குள்ளது. வடலூரிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் மேட்டுக்குப்பம் உள்ளது. இங்கே அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் ஜோதியில் கலந்த சித்தி வளாகம் தவறாது கண்டுகளித்து அருள்பெற வேண்டிய இடம்.

நெய்வேலிக்கு அருகில் விருத்தாசலம் இருக்கிறது. இங்கே பாம்பாட்டிச் சித்தர் ஜீவ சமாதி இருக்கிறது. திருவாரூர், நாகை சாலைக்கு அருகில் எட்டுக்குடி ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் தல விருட்சத்தின் அருகில் வால்மீகி ஜீவசமாதியும், இதனருகில் சிக்கல் சிங்கார வேலன் சன்னதியில் ஸ்ரீ போகநாதரும், வசிஷ்டரும் மற்றும் பல சித்தர்களும் அருளாட்சி செய்கிறார்கள்.

அகப்பேய் சித்தர் எட்டுக்குடி, தஞ்சைக்கு அருகில் திருவையாற்றில் அருள்புரிகின்றார். திருச்சியை அடுத்த கரூரில் கருவூரார் எனப்படும் கருவூர்த்தேவரும், திருச்சி திருவானைக்காவலில் ஸ்ரீகாகபுஜண்டரும், நாகப்பட்டினத்தில் நாகைநாதர் ஆலயத்தில் அழுகண்ணரும், காசிபரும், வரதரும் அருள்புரிகின்றனர்.

நாகைக்கு அருகில் பொய்கை நல்லூரில் ஸ்ரீகோரக்க நாதரும், அருகில் புஜண்டவனத்தில் ஸ்ரீ காகபுஜண்டரும், நவநாதாக்களும் அருள்புரிகின்றனர். நாகப்பட்டினம் அருகில் நாகூர் மீரான் சாகிப், முகைதீன் ஆண்டவர் தர்க்கா இருக்கிறது.

மதுரையில் ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்தில் சுந்தரானந்தர் அகத்தியரும், அருகிலே அழகர்மலையில் பதஞ்சலியும், இராமதேவர், யாக்கோப்பு என்ற தேரையரும், பழமுதிர்ச்சோலையில் ஸ்ரீபோகநாதர், கமலமுனியும், மதுரைக்கு அருகில் திருப்பரங்குன்றத்தில் ஸ்ரீபோகநாதரும், மலை உச்சியில் மச்சமுனியும், சிக்கந்தர் பாத்ஷா ஒலியுல்லாவும் அருள் புரிகின்றனர்.

திருச்செந்தூரில் புண்ணாக்கீசர், காசிபர் ஆகியோர் திருவருள் புரிகின்றார்கள். இங்கே எம்பெருமான் சுப்ரமண்யர் சன்னதிக்கு அருகில் இடதுபுறத்தில் சிறிய கதவுண்டு. இதன் வழியே உள்ளே சென்றால் குகையினுள் பஞ்சலிங்க வடிவாக ஐந்து சித்தர்கள் இருப்பதையும், அக்குகைக்குள் சூரிய ஒளி உள்ளே புகுவதையும் கண்ணாரக் கண்டு அருள் பெறலாம்.

திருச்செந்தூருக்கு அருகில் காயல்பட்டினம் உள்ளது. இங்கு பல சித்தர்களும் அருள் வழங்குகின்றனர். கன்னியாகுமரிக்கு அருகில் சுசீந்திரத்தில் விஸ்வாமித்திரர், வசிஷ்டர், பிருகு முனிவர் ஆகியோரும் அருள் புரிகின்றனர். பழனியில் உள்ளது போல் இங்கு நவபாஷாணத்தால் உள்ள சிவலிங்கம் உள்ளது. சுசீந்திரத்திற்கு அருகில் மருந்து மலை உள்ளது. இங்கு காகபுஜண்டரும், நவநாதாக்களும் அருள்புரிகின்றனர்.

நாகர்கோயிலுக்கு அருகில் 11 கி.மீ. தூரத்தில் திருவனந்தபுரம் செல்லும் சாலையில் தக்கலை உள்ளது. இங்கு கேட்டதை வழங்கும் இறைவள்ளல் பீர் அப்பா எனப்படும் பீர் முகமது தர்க்கா உள்ளது. இரவு – பகல் தங்கித் தொழுது கண்கூடாய் அருள் பெறலாம்.

இராமேஸ்வரத்தில் பதஞ்சலி முனிவர் அருள்கிறார். இங்கிருந்து இராமநாதபுரம் செல்லும் சாலையில் 12 கி.மீ. தூரத்தில் கோசமங்கை உள்ளது. இங்குள்ள தலவிருட்சம் இலந்தை மரத்தடியில் காகபுஜண்டர் ஜீவ சமாதியும் மற்றும் திருக்கழுக்குன்ற ஆலயத்தில், உச்சியில் ஸ்ரீ கோரக்கரும், காஞ்சிபுரத்தில் கடுவெளிச்சித்தர், காளங்கிநாதர் மற்றும் பல சித்தர்களும் இருந்து ஞானச் செல்வத்தை வாரி வழங்குகின்றனர்.

திருவாரூரில் கமலமுனி, சுந்தரானந்தர், இடைக்காடரும், திருவண்ணாமலையில் தேரையர், இடைக்காடர், கௌத மகரிஷி, நந்தீஸ்வரர், சுப்ரமணியர், அகப்பேய்ச்சித்தர் மச்சமுனி, குகை நமச்சிவாயர் மற்றும் எண்ணிடலங்கா சித்தர்களும் ஜீவ சமாதியில் இருந்து அருள்புரின்றனர்.

திருவண்ணாமலைக் கார்த்திகை மாதப் பௌர்ணமியன்று உள்ளன்போடு சென்றால், மானிட வடிவில் வந்து இன்றும் சித்தர்கள் காட்சி கொடுத்துக் காத்து இரட்சிக்கின்றனர். சத்குருநாதர் ஸ்ரீ காகபுஜண்டரின் ஜீவ சமாதிகள் பல்வேறு இடங்களில் இருக்கின்றன.

சேலம், நாமக்கல் (வழி சேந்தமங்கலம்) சாலைக்கு அருகில் கொல்லிமலை என்னும் சதுரகிரி அமைந்துள்ளது. தென்காசிக்கு அருகில் திருக்குற்றாலமலை அமைந்துள்ளது. பாபநாசத்திற்கு அருகில் பொதிகைமலை அமைந்துள்ளது. மதுரை ஸ்ரீவில்லிபுத்தூர் சாலைக்கு அருகில் (தானிப்பாறை வழி) சுந்தரமகாலிங்கம் என்னும் சதுரகிரி அமைந்துள்ளது. பக்தியோடு, உள்ளுணர்வோடு இம்மலைகளுக்குச் சென்று தங்கி வந்தால் சித்தர்களின் அருளையும், சிவனருளையும் முழுமையாகப் பெறலாம்.

கொல்லிமலையில் ஸ்ரீ அறைப்பள்ளீஸ்வரர் ஆலயம் (குகையில் குடிகொண்ட ஈசன்), பெரியண்ணசாமி ஆலயம், சோரமடையான் ஆலயம், எட்டுக்கை அம்மன் ஆலயம் முதலிய ஆலயங்களும், காகபுஜண்டர் குகை, அகத்தியர் குகை, பாம்பாட்டிச் சித்தர், புலிப்பாணி குகை, காளங்கிநாதர் குகை, கன்னிமார் குகை, கோரக்கர் குன்றம் முதலிய இடங்கள் சித்தர்கள் வழி செல்லும். நாமும் தரிசித்து தங்கியிருந்து அருள்பெற வேண்டிய இடங்களாகும்.

குற்றாலமலையில் அருள்மிகு செண்பகாதேவி ஆலயமும், வாலைக்குகை என்று வழங்கும் தெட்சிணாமூர்த்தி குகை, (பொதிகையில்) அகத்தியர் குகை, ஔவையார் குகை, கோரக்கர் குகை, புஜண்டர் குகை (தேனருவியில் உட்புறத்தில் உள்ளது), பரதேசிப்பாறை முதலியவை தரிசித்துத் தங்கி அருள்பெற வேண்டிய இடங்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top