நான் பயந்ததாக யாரும் நினைக்கக் கூடாது – மாவீரன் நெப்போலியன் !
தன் அசாத்திய துணிச்சலால் ஐரோப்பிய கண்டத்தில் தன் பேரரசை நிறுவிய மாவீரன் நெப்போலியன் பயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்.
அதற்கு அவருடைய சிறு வயதில் நடந்த ஒரு சம்பத்தையே உதாரணமாகக் கூறலாம்.
நெப்போலியன் பிரான்சில் உள்ள ராணுவப் பள்ளியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார். அப்போது விடுதியில் தங்கியிருந்த சக மாணவனின் அழகிய பை ஒன்று காணாமல் போய்விட்டது.
உயர் அதிகாரியிடம் அந்த மாணவன் புகார் தெரிவித்தான்.
“ யார் மீதாவது உனக்குச் சந்தேகம் இருக்கிறதா?” என்று அதிகாரி கேட்டார்.
“ஆமாம், எனக்கு நெப்போலியன் மீதுதான் சந்தேகம்” என்றான் அந்த மாணவன்.
உடனே நெப்போலியனை அந்த அதிகாரி தன் அறைக்கு அழைத்தார். உள்ளே நுழைந்த நெப்போலியனிடம் கேள்வி எதுவும் கேட்குமுன்பே, கண்மண் தெரியாமல் அடித்தார்.
“ஏன் திருடினாய்… இனி செய்வாயா?” எனக் கேட்டு நல்ல உதை, அடி. அத்தனையையும் வாங்கிக் கொண்டு அமைதியாக இருந்தார் நெப்போலியன்.
சில நாட்கள் கழிந்தன. புகார் கொடுத்த சக மாணவன் அந்த அதிகாரியிடம் ஓடி வந்தான்.
“ஐயா, என் பொருளைத் திருடியது நெப்போலியன் அல்ல. இன்னொருவன். என்னை மன்னியுங்கள்” என்றான்.
அதிகாரிக்கு வியப்பு. நெப்போலியனை அழைத்தார்.
“ நீ என்ன முட்டாளா? அந்த அடி அடித்தேனே! உண்மையைச் சொல்ல வேண்டியதுதானே” என்று கேட்டார்.
நெப்போலியன் அமைதியாக இப்படிக் கூறினார்…
“ஐயா! நீங்கள் என்னை அடிக்கும் முன்பு கேட்டிருந்தால் சொல்லியிருப்பேன். அடித்துக்கொண்டே கேட்டீர்கள்.
அப்போது நான் இல்லை என்று சொன்னால், அடிக்குப் பயந்து கொண்டு நான் சொல்வதாக நீங்கள் நினைத்திருப்பீர்கள். நான் பயந்ததாக யாரும் நினைக்கக் கூடாது.
அதைவிட அடி வாங்குவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை!” என்றார்.