அடுத்த பத்து ஆண்டுகளில் பல லட்சக்கணக்கான உயர்ந்த இன கறவைப் பசு, எருமைகள் அபிவிருத்தி செய்யப்பட்டன. பால் உற்பத்தி ஆண் டுக்கு பல கோடி லிட்டர் அதிகமாகக் கிடைத்தது.
அதற்கு முன்னர் வெறும் தலைச் சுமையாகவோ, அல்லது மிதி வண்டியிலோ கொண்டு போய் பால் விற்பனை செய்யப்பட்ட நிலைமை மாற்றம் பெற்று டேங்கர் லாரிகளில் சேகரிக்கப்பட்டு விநியோகம் செய்யப் பட்டது. அதன் பின்னரே ஆவின் பால் உற்பத்தி நிறுவனம் உருவானது.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் இலட்சோபலட்சம் கல்வி நிலையங் களுக்கும் கல்வியாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பட்டதாரி களுக்கும் பின்னால் எப்படி பெருந் தலைவர் காமராசரின் ஆழ்ந்த சிந்தனையும் கடுமையான உழைப்பும் இருந்ததோ அதைப்போலவே இந் தத் தமிழ்நாட்டு மக்கள் அன்றாடம் அருந்தும் தேநீருக்கும் காப்பிக்கும் இதர பால் பொருள்களுக்கும் தேவை யான பால் உற்பத்திகூட அவரின் ஆழ்ந்த சிந்தனையாலும் கடுமை யான உழைப்பாலும், சீரான வழி காட்டுதலாலும் உருவாக்கப்பட்டது என்கிற உண்மையை நன்றி உணர் வோடு நினைத்துப் பார்க்க வேண்டும்.
1961 ஆம் ஆண்டு சென்னையில் பிரதமர் நேரு உரையாற்றும் போது சொன்னார்:
ஒரு உண்மையான தலைவருக்கு நேரடியான உதாரணம் காமராசர். பொதுமக்களின் மத்தியில் சாதாரணமான நிலையிலிருந்து வந்து அவர்களுக்குத் தலைவராகும் தகுதியைப் பெற்றவர்.
தனக்குக் கொடுத்த பொறுப்பை எப்பாடுபட்டும் நிறைவு செய்யும் ஆற்றலைப் பெற் றவர். உயிரோடு இருப்பவர்களுக்குச் சிலை வைப்பதை நான் விரும்புவ தில்லை. ஆனால் காமராசரைப் போன்ற மக்கள் ஏற்றுக் கொண்ட தலைவருக்கு அமைக்கப்பட்ட இந்தச் சிலையைத் திறந்து வைப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன் என்று.
இவை தமிழ்நாட்டு மக்களின் நெஞ் சங்களில் என்றென்றும் நிலைத்து நிற்பதாகும். 1963 ஆம் அண்டு ஜனவரியில் ஒரிசா மாநிலத்தில் உள்ள புவனேசுவரத்தில் காங்கிரஸ் மகாசபைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது புதிய தலைவராக காம ராசர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
1963 இல் காமராசர் முதல் மந்திரி பதவியை விட்டு விட்டு, அகில இந்தி யக் கட்சிப் பணிக்குச் சென்றபோது தந்தை பெரியார் காமராசருக்குத் தந்தி ஒன்றையும் கொடுத்திருந்தார்.
அதன் வாசகம், தாங்களாகவோ, பிறரின் ஆலோசனையின் பேரிலோ தமிழ்நாட்டு முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதானது, தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும், தங்களுக்கும் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பாகும் – Either on your own accord or on the advice of others, your resignation of Chief Ministership will be suicidal of Tamilians, Tamilnadu and yourself” என்று அவர் பதவி விலக எத்தனித்த போது, பதவி விலகும் முன்பாகவே தந்தி கொடுத்திருந்தார். அதுதான் கல்வெட்டுப் போன்ற உண்மையாய் நிலைத்தது.
ஜவகர்லால் நேரு அவர்கள் 1964 மே 27 ஆம் நாள் முடிவு எய்தியபோது காமராசர் கண் கலங்கினார். புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் பணி யில் மூன்று நாட்கள் இரவு பகலாகக் கண்விழித்து, இந்தியாவின் பல மாநில முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சி பிரமுகர்கள் அனைவரையும் சந்தித் துப் பேசினார்.
தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் சரளமாக உரையாடும் ஆற்றலைப் பெற்ற காமராசருக்கு இந்தியாவின் புதிய தலைவரைத் தேர்வு செய்வதில் அவரது தீர்க்க சிந்தனை, கூர்ந்த மதி நுட்பம் உலகம் வியக்கத் தக்கதாக இருந்தது.
இந்திய நாடாளுமன்றத்தின் மய்ய மண்டபத்தில் 02-06-1964 இல் ஆற்றிய உரையைக் கேட்க பல வெளி நாட்டுத் தூதர்களும், பல மாநில முதல்வர்களும் அரசியல் நோக்கர் களும் கூடியிருந்தபோது அவர் ஆற்றிய பேருரை.
நேரு அவர்களின் இடத்தை நிரப்புவது என்பது சாத்தியமில்லை. எனவே நமக்குள் ஒரு கூட்டுத் தலைமை தேவைப்படுகிறது. கூட்டுப் பொறுப்பும் அவசியமாகிறது. பிரத் தியேகமான வழியில் அதை நாம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய வர்களாக இருக்கிறோம்.
நாம் அனைவரும் நேரு என்ற குடையின் கீழ் இருந்தோம். அவர் இருந்தவரை அவருடைய துணிச்சல் நமக்குத் துணை நின்றது. நமது தவறுகள் அனைத்தையும் திருத்த, மன்னிக்க அவர் இருந்தார்.
இப்போது அவர் இல்லை. ஆகவே நாம் அனைவரும் இந்த நாட்டின் எதிர்காலத்தின் மீது அக் கறை கொண்டு எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும் என்றார்.
அவர் பேசி முடித்ததும் அப்போதைய இடைக்காலப் பிரதமர் குல்சாரிலால் நந்தா எழுந்து லால்பகதூர் சாஸ் திரியின் பெயரை முன்மொழிந்தார். தொடர்ந்து மொரார்ஜி தேசாய் வழி மொழிந்தார். சாஸ்திரி பிரதமர் ஆக்கப்பட்டார்.
எல்லோரும் எழுந்து நின்று கையொலி எழுப்பினார்கள். நாம் சமதர்ம இலட்சியத்தில் உண்மையாக உறுதியாக இருந்தால் வெற்றி பெறு தல் நிச்சயம் என்பதை நிரூபித்துக் காட்டினார். உலகம் வியந்து பாராட் டியது.
உருவத்தில் குள்ளமாக இருந்த சாஸ்திரி அவர்கள் பாகிஸ்தான் போரின்போது விசுவரூபம் எடுத்தது போல் பாகிஸ்தானை விரட்டி அடிக்க இந்திய ராணுவத்துக்கு ஆணை யிட்டார். பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் பின் வாங்கி ஓடினார்கள்.
இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து வெற்றி வாகை சூடிக் கொண்டிருந்தபோது நேச நாடான ரஷ்யா அதில் தலையிட்டு உலக சமாதானம் கருதி இரண்டு நாடு களும் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்று வேண்டியது.
இப்போர் தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடத்திட லால்பகதூர் சாஸ்திரியை தாஷ்கண்டு வரும் படியாக அழைத்தார்கள். பாகிஸ்தான் அதிபர் அயூப்கானும் இந்தியப் பிரதமர் சாஸ்திரியும் ரஷ்யப் பிரதமர் கோசிஜின் மூவரும் கலந்துபேசினர்.
போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத் தானது. அடுத்த நாள் சாஸ்திரி மாரடைப்பால் அங்கேயே மரணம் அடைந்தார்.
நெருக்கடியான இந்தக் கால கட்டத்தில் அவருக்கு அடுத்த பிரதமரையும் தேர்ந்தெடுக்க வேண் டிய பொறுப்பு மீண்டும் காமராசருக்கு வந்தது. அவர் எல்லா மாநில முதல் வர்களையும், எம்.பி.களையும் அழைத்துப் பேசினார்.
அநேக பிரமுகர்கள் காமராச ரையே பிரதமராக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அதைக் காமராசர் மறுத்துவிட்டார். இந்திய விடுதலைக்குப் பின் முதன்முறையாக பிரதமர் பதவிக்கு இரகசிய வாக் கெடுப்பு நடத்தப்பட்டது.
பெருந் தலைவர் காமராசர் முயற்சியினால் அமைதியான அறிவார்ந்த அணுகு முறையால் 355 நாடாளுமன்ற உறுப் பினர்கள் ஆதரவுடன் 19-01-1966 அன்று இந்திரா காந்தி இந்தியப் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.
அப்போது காமராசருக்கும் மற்ற தலைவர்களுக்கும் இந்திரா காந்தி நன்றி தெரிவித்துப் பேசிய பின்னர் காமராசர் உரையாற்றுகையில், இந்திரா காந்தி ஏற்றுள்ள பொறுப் புகள் மிகவும் பெரியவை.
அவற்றைச் சரிவர நிறைவேற்ற நம் அனை வருடைய ஒத்துழைப்பும் நல்லெண் ணமும் அவருக்கு அவசியம் தேவை. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், பிரச்சினை களுக்குத் தீர்வு காணவும் இந்திரா பாடுபடுவார் என்று நம்புகிறேன்.
அவருக்கு உங் கள் அனைவருடைய ஒத்துழைப்பை யும் நல்லாதரவையும் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.
1966 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் நாள் சோவியத் ரஷ்யாவின் பிரதமர் கோசிஜின் அழைப்பின் பேரில் காமராசர் சோவியத் சென்று வந்தார். அப்போது அவரது உடையில் உந்த வித மாற்றமும் இன்றி அவ ருக்கே உரிய கதர் வேட்டி, அரைக்கை சட்டை, மேல் துண்டு அணிந்து கொண்டே பயணத்தை முடித்தார்.
அங்கே லெனின்கிரேட் நகரில் பேசுகையில் குறிப்பிட்டார்.
இங்கு ஆரம்பிக்கப்பட்ட புரட்சி, சோவியத் நாட்டுக்கு மட்டுமல்ல. உலகில் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகளுக்கு எல்லாம் புத்துணர்ச் சியை ஊட்டியது.எங்களுடைய தமிழ் நாட்டில் உங்களின் ஒப்பற்ற தலைவர் லெனின் அவர்களுக்கு பெருமதிப் புண்டு.
லெனின் நடத்திய புரட்சி ஒரு சாதாரண அரசியல் புரட்சி மட்டு மல்ல; சமூகப் பொருளாதாரத் துறை களில் உள்ள அடிமைத் தளைகளை அகற்ற எடுத்துக் கொண்ட பெரு முயற்சியாகும். உயர்ந்த தேசபக்தியும் தியாக சிந்தனையும் படைத்த சோவி யத் மக்கள், ஆயிரம் நாள் முற்றுகை நடந்தாலும், லட்சக் கணக்கில் மக்கள் மாண்டாலும் அடிபணியாது, நிமிர்ந்து நின்று நாட்டின் மானத்தைக் காப் பாற்றியது என் உள்ளத்தைக் கவர்ந்து விட்டது.
இந்தத் துன்பத் தையும் துயரத்தையும் அனுபவித்த நீங்கள், உலக சமாதானத்துக்காகப் பாடுபடுவது இயற்கையே! முன் னேற்றம் அடைவதற்கும், சமதர்ம சமுதாயம் அமைப்பதற்கும் உலக சமா தானம் அவசியம் என்று நாங்களும் எங்கள் நாட்டு மக்களும் உணர் கிறோம்.
நம் இரு நாடுகளும் நட்புற வுடன் வாழ்வதன் மூலமாக உலக சமாதானத்தை நிலை நிறுத்திட தோளோடு தோள் நிற்போம் என்ற உறுதியை நான் அளிக்கிறேன் என்ற அவரது உரை உலக நாடு களில் நம் நாட்டின் பெருமையை உயர்த்திக் காட்டியது. தமிழர்கள் அனைவரும் காமராசரைப் பாராட்டிப் பெருமையடைந்தார்கள்.
பசுவதைக்குத் தடை விதிக்கக் கோரி ஜனசங்கம் முதலான சனாதன அமைப்புகள் 07-11-1966 அன்று டெல்லி நாடாளுமன்றத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த சுமார் ஏழு லட்சம் பேர் டெல்லி ராம்லீலா மைதானத்தில் கூடி பாராளு மன்றக் கட்டடத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றார்கள்.
ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு பிரிவினர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராசரைக் கொலை செய்துவிடவேண்டுமென்று கருதி காமராசர் வீட்டுக்குச் சென்று தீப்பந்தங்களை வீட்டின் மீது வீசினார்கள்.
வீட்டின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்துவிட்டது. ஆனாலும் காமராசர் ஆர்ப்பாட்டக்காரர்களை சமாதானப்படுத்துவதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார். அதற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஓடி விட்டார்கள்.
தந்தை பெரியார் அப்போது தந்த அறிக்கையில், அன்றைய கலவரத்துக்கு, காலித்தனத்துக்கு நேரடியாக சம்பந்தப்பட்டவர்களும் தூண்டி விட்டவர் களும் ஆதாரமாய் இருந்தவர்களும், தலைமை வகித்தவர்களும் பார்ப்பனர் தவிர, மத சம்பிரதாயங் களில் பார்ப்பனர்களுக்கு சீடர்களாக இருந்தவர்களும் தான் காரணஸ்தர்கள் ஆவார்கள்.
அந்த நாளில் சிருங்கேரி சங்கராச்சாரி, பூரி சங்கராச்சாரி முதலிய பார்ப்பனத் தலைவர்கள் டில்லியில் இருந்திருக்கிறார்கள். தவிரவும் சன்னியாசிகள் (சாதுக்கள்) என்னும் பேரால் ஆயிரக்கணக்கான பார்ப்பனர்கள் பல பாகங்களிலிருந்து அன்று டில்லிக்கு வந்திருக்கிறார்கள் என்ற உறுதியால்தான் சொல்லுகிறேன்.
மற்றும் இராஜாஜி எலெக்ஷனுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியை ஒழித்தாக வேண்டும் என்றும் எந்த அதர்மத்தைச் செய்தாவது ஒழித்தாக வேண்டும் என்பதாகச் சொன்னதும் – அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை என்பதாகப் பேசியதும் எனது உறுதிக்கு ஆதாரம்.
மேலும் பசுவதைத் தடுத்தல் என்பது பொய்யான காரணமேயாகும் – உண்மைக் காரணம் பார்ப்பனருடைய வருணாசிரம தர்மத்துக்குக் கேடு வந்துவிட்டது என்பது ஒன்றேதான் அந்தக் கேட்டை உண்டாக்கியது காமராசர் என்கிற ஒரே காரணத்தால்தான் காமராசர் இருந்த வீட்டுக்கு நெருப்பு வைக்க முக்கியமான காரணமாகும் என்று எழுதியிருந்தார்கள்.
1966 நவம்பர் 12 ஆம் நாள் மித்திரன், மெயில், மற்ற பத்திரிகைகளில் காமராசருக்கு வந்த மிரட்டல் கடிதம் பற்றி செய்தி வெளியாகியது.
பசுவதை எதிர்ப்புப் போராட்டத்தின் போது, நீங்கள் எப்படியோ தப்பிவிட்டீர்கள். ஆனால் நீங்கள் உயிருடன் இனி வெகுநாள் இருக்க முடியாது என யாரோ ஒருவர் காமராசருக்கு மொட்டைக் கடிதம் எழுதி அனுப்பி னார்கள். இக்கடிதம் சாந்தினி சவுக் தபால்நிலைய முத்திரையைப் பெற்றுள்ளது.(ஆதாரம்: மெயில், மித்திரன் 13-11-1966)
பிரதமர் இந்திராவும் மற்றும் பல அமைச்சர்களும் காமராசர் வீட்டுக்குச் சென்று பார்வையிட்டு விவரங்களைக் கேட்டறிந்தார்கள். அப்போது டெல்லியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்திரா சொன்னார், இப்போது நடக்கும் கலவரங்கள் அரசாங்கத்துக்கு எதிராக மட்டுமே நடப்பதாக நான் நினைக்கவில்லை; நமது பண்பாடுகள், நமது வாழ்க்கை முறை, உலகத்தின் முன் நமது கவுரவம் ஆகியவற்றுக்கு எதிராக அது நடத்தப்படுகிறது என்றும் இந்தக் கலவரங்களை ஒடுக்க அரசாங்கம் பலாத்காரத்தைப் பயன்படுத்தத் தயங்காது என்றும் அறிவித்தார்.
1967 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. காமராசர் அவரது சொந்தத் தொகுதியான விருதுநகரில் தோல்வியடைந்தார். அப்போது அவர் தெரிவித்த கருத்து.
தேர்தலில் நான் தோல்வி அடைந்தததற்கு மக்கள் வருத்தம் தெரிவித்தி ருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மக்கள் நன்மைக்காக 20 ஆண்டு காலம் எவ்வளவோ பாடுபட்ட காங்கிரஸ் கட்சியே தோல்வி அடைந்துவிட்டது.
அப்படி இருக்கும்போது என் தோல்வி பெரிதல்ல. மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பி தி.மு.கழகத்துக்கு ஓட்டுச் செய்திருக்கிறார்கள்.
மக்கள் தீர்ப்புக்குத் தலை வணங்குகிறேன். தி.மு.கழகம் மந்திரி சபை அமைத்து வெற்றிகரமாக செயல்பட என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்ற செய்தி அவரது விசாலமான பண்பாட்டைப் பறைசாற்றுவதாக அமைந்தது.
அப்போது தந்தை பெரியார் விடுத்த அறிக்கையில், காமராசர் தோல்வியைப் பற்றி பலர் என்னிடம் வந்து துக்கம் விசாரிக்கும் தன்மை போல் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
அவர்களுக்கு நான் அளித்த ஆறுதல், பிப்ரவரி 23-ஆம் தேதி தோல்விச் செய்தியைப் பற்றிக் கவலைப்படுவதை விட 1966 நவம்பர் 2-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற கொலை முயற்சியில் அவர் உயிர் தப்பியதை நினைத்து மகிழ்ச்சி கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பினேன்.
நானும் அப்படியே நினைத்துதான் சரிப்படுத்திக் கொண்டேன் என்று எழுதியிருந்தார்கள். காமராசர் 17-9-1967 அன்று தந்தை பெரியார் சிலையை திருச்சியில் திறந்து வைத்து உரையாற்றுகையில் சொன்னார்.
அய்ம்பது ஆண்டுகளாக பெரியார் அவர்கள் செய்த சேவையின் பயனாகத் தமிழ்நாட்டில் விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கிறோம்.
அவருடைய சேவைகள் பயனாக சமுதாயத்தில் நீதி கிடைத்துவிட்டது. பொருளாதாரத் துறையில் நீதி கிடைத்துவிட்டது.
ஆனால் அரசியல் துறையில் நீதி கிடைத்துவிட்டது என்று சொல்ல முடியாது. வரலாறு என்பது நீண்ட காலம் – 50 ஆண்டுகள் என்பது வெகு குறுகிய காலம். உலகம் தொடங்கிய காலத்தில் இருந்து போராட்டம் நடந்து கொண்டி ருக்கிறது.
பல்வேறு தேசங்களிலும் இத்தகைய போராட்டம் நடந்தது, நடந்து கொண்டுள்ளது, இனிமேலும் நடக்கத்தான் செய்யும்.
மனிதன் தன்மானத்தோடு சமமாக வாழக் கூடிய புதிய சமுதாயத்தை அமைக்கும் வரையில் தொடர்ந்து இந்தப் போராட்டம் இருந்து கொண்டுதான் இருக்கும்.
அவர்கள் கொஞ்ச நாளைக்கு இதைத் தடுக்கலாம் – ஆற்றில் சிறு வெள்ளம் வந்தால் தடுக்கலாம்; பெரு வெள்ளம் வந்து விட்டால் தடுக்க முடியுமா? முடியாது – உலகம் எங்கும் அந்தப் போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. அதைப் போல நமது தேசமும் இருக்கிறது.
இந்த சமுதாய அமைப்பை மாற்றுவதற்கு அரசியல் அதிகாரம் மிகமிகத் தேவை. அரசியல் அதிகாரம் இல்லாமல் சமுதாயத்தை மாற்றியமைக்க முடியாது.
அதற்குத்தான் நாம் சுதந்திரப் போராட்டம் நடத்தினோம். . . அதைப் பயன்படுத்திக் கொண்டு சமுதாயத்தில் பொருளாதாரத் துறையிலும் எப்படி நாம் அமைத்துக் கொள்ளப்போகிறோம் என்று சிந்திக்க வேண்டும். அதற்கான திட்டங்கள் வகுக்க வேண்டும் என்று பேசினார்.
20-12-1973 அன்று தந்தை பெரியார் மறைந்த நாளன்று காமராசர் தந்த இரங்கல் செய்தியில், நமது நாட்டின் இலட்சோப லட்சம் மக்களால் பெரியார் என்று பாசத்துடன் அழைக்கப்பட்டு வந்தவர் இன்று நம்மைவிட்டு மறைந்தார். அன்னாரது மறைவு பொது வாழ்க்கையில் மிகப் பெரிய இழப்பு.
அவர், தாம் நம்பிய இலட்சியங்களுக்காக கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு பணிபுரிந்து வந்தார். நமது நாட்டில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் சமூக விழிப்பு ஏற்பட அவர் ஆற்றிய பணி, அவர் வகித்த பாத்திரம் மிகப் பெரியது. அவர் ஒரு மாபெரும் தேசபக்தர்.
ஆரம்பத்தில் அவர் இந்திய தேசிய காங்கிரசில் தீவிர உறுப்பினராக இருந்து காந்தியார் துவக்கிய இயக்கங்களில் பங்கேற்றார். பலமுறை சிறை ஏகினார்.
பின்னர் தீவிரமாக சமூக சீர்திருத்தப் பிரச்சாரப் பணியைத் தமக்கென வரித்துக் கொண்டார். பெரியார் நமது சமூகத்துக்கு ஆற்றிய சேவைகள் நம் மனத்தில் நீண்ட நெடுங்காலம் நிலைத்து நிற்கும். தமது கருத்துகளைத் துளியும் பயமின்றி எடுத்துச் கூறியவர் பெரியார்.
கடைசி வரை அவர் விடா முயற்சியுடன், சலியாத கடும் பணியில் ஈடுபட்டிருந்தார் என்று மரியாதை கலந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அவரது இரங்கல் கூட்டத்தில்தான் முதல்வர் கலைஞர் அவர்கள் சென்னை கடற்கரை சாலைக்கு காமராசர் சாலை எனப்பெயரிட்டார்.
1975 இல் இந்தியாவில் அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டபோது காமராசர் பெரிதும் மனச் சோர்வடைந்தார்.
அண்ணல் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் நாள் தமக்கு உடல்நிலை சரியில்லை என்று டாக்டருக்கு போன் செய்து வரச்சொல்லி விட்டு காமராசர் வந்து படுத்தார்.
வீட்டுக்கு டாக்டர் வந்து காமராசர் அறைக்குள் நுழைந்தபோது அவர் வழக்கம்போல இரண்டு கைகளையும் தமது தலைக்கு அடியில் வைத்துத் தூங்கிய நிலையில் இருந்தார். டாக்டர் அவரது நாடியைப் பிடித்துப் பார்ப்பதற்காகக் கையைப் பற்றினார்.
அது சில்லிட்டுப் போயிருந்தது. தமிழ்நாடு வரலாறு கண்டிராத ஒரு பெருந் தலைவரை திடீரென இழந்துவிட்டது.
காமராசர் மறைவு குறித்து அப்போது முதல்வர் கலைஞர் வானொலியில் வழங்கிய இரங்கலுரையில் பேசியதாவது:
இளமைப் பருவத்திலேயே இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அடக்குமுறைகள், சிறைவாசங்கள் அனைத்துக் கொடுமைகளையும் ஏற்று – தொண்டராய் வாழ்வைத் தொடங்கி தொண்டர்களுக்குத் தலைமை தாங்கி களம் புகும் கர்ம வீரராய்த் திகழ்ந்து – உழைப்பால் புகழின் உச்சியில் ஒளிவிட்டுக்கொண்டிருந்த தியாகச் சுடராம் தலைவர் காமராசரை இழந்து நாடு கண்ணீர்க் கடலில் மிதக்கிறது. அண்ணல் காந்தியடிகளின் அருமை மிகு மாணவர்களில் ஒருவராக விளங்கியவர்.
நாட்டில் சிக்கல்கள் தோன்றிய போதெல்லாம் அவைகளைத் திடநெஞ்சுடனும் அமைதியான அணுகுமுறையுடனும் தீர்த்து வைக்க அரும்பாடுபட்டார். அவர் கட்சிக்குத் தலைமையேற்றிருந்த காலம் இந்திய நாட்டின் அரசியலுக்குச் சிறப்பு சேர்த்த காலமாகும்.
அவர் ஆட்சிக்குத் தலைமை ஏற்றிருந்த காலம், தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த காலம். பெரியாரின் பேரன்புக்குப் பாத்திரமான காமராசர், சிறந்த பகுத்தறிவுச் செம்மலாகவும் திகழ்ந்தார்.
குணாளன், குலக்கொழுந்து, தன்மானத் தமிழன் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் காமராசரைப் பாராட்டிக் களித்தார். பண்டிதநேரு பெருமகனாரின் நம்பிக்கைக்கும் அன்புக்கும் உரியவராக விளங்கியவர்.
அவரது உழைப்பு – பின்பற்றத் தக்கது. அவரது தியாகம் – காலமெல்லாம் போற்றிப் புகழத் தக்கது.
அவரது திறமை – வியக்கத் தக்கது
அவரது அரசியல் வாழ்வு – பெருமை மிக்க பாரம்பரியத்தை உள்ளடக்கியது.
உணர்ச்சி வாய்ந்த தமிழரை நாடு மதிக்கும் நல்ல தலைவரை இழந்துவிட்டோம் என்றவாறு குறிப்பிட்டு உரையாற்றினார்.
காமராசருக்கு சென்னை கிண்டியில் காந்தி மண்டபம் அருகே எரியூட்டும் மேடை அமைக்கப்பட்டது.
பிரதமர் இந்திரா காந்தி, முதலமைச்சர் கலைஞர், மற்றும் தமிழக அமைச்சர் பெருமக்கள், கவர்னர் கே.கே.ஷா, டெல்லி மந்திரிகள் சி.சுப்பிரமணியம், பிரம்மானந்த ரெட்டி, உமாசங்கர் தீட்சித், கரன்சிங் முதலானோரும் காங்கிரஸ் தலைவர்கள் சஞ்சீவ ரெட்டி, நிஜலிங்கப்பா, கக்கன், ஓ.வி.அழகேசன் முதலானோரும் லட்சோபலட்சம் பொது மக்களும் கொட்டும் மழையிலும் ஊர்வலத்திலும் இறுதி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்கள்.
காந்தி மண்டபத்தின் அருகிலேயே பெருந்தலைவர் காமராசர் நினைவிடம் அனைவரும் எப்போதும் மரியாதை செய்யும் வகையில் முதல்வர் கலைஞர் அவர்களால் சிறப்பாகக் கட்டி முடிக்கப்பட்டது. காமராசரை இழந்தபிறகுதான் நாடு அவரது பெருமையை உணர்ந்தது. அவர் ஆட்சிக் காலத்தில் ஆற்றிய அரும்பெரும் பணிகளைத் தமிழகம் அவரது பிறந்த நாளில் நன்றியுணர்வோடு நினைத்துப் பார்க்கிறது.