புதிர் கதை
ஒரு முதியவர் ஒருவர் அந்த ஊருக்கு வந்தார். அங்கிருந்த பெரியவர்களைப் பார்ஹ்து, ” ஐயா….நான் எனது மகனுக்குப் பொருத்தமான பெண்ணைத் தேடி இந்த ஊருக்கு வந்துள்ளேன்” என்றார்.
அங்கிருந்த பெரியவர்களும், ” ஐயா…கண்டிப்பாக உமக்கு ஒரு நல்ல மறுமகள் இந்த ஊரில் கிடைப்பாள்.முதலில் உங்கள் மகனைப் பற்றிக் கூறுங்கள்” என்றார்கள்.
“என் மகன் மிகவும் அழகாக இருப்பான்.எந்தவிதக் கெட்ட பழக்கமும் கிடையாது….. ஆனால் உட்கார்ந்தால் எழுந்திருக்க மாட்டான்” என்றார் முதியவர்.
முதியவர் கூறியதைக் கேட்டதும் முகம் சுளித்தார்கள் அங்கிருந்தவர்கள்.” கொஞ்சம் கூட மரியாதை தெரியாதவனாக இருப்பான் போலிருக்கிறதே!திமிர் அதிகமாக இருக்கும் போலிருக்கிறது. அதினால்தான் உமது மகனுக்கு உங்கள் ஊரில் பெண் கிடைக்காமல் இங்கே வந்திருக்கிறீர்கள். முதலில் இடத்தைக் காலி செய்யுங்கள். இந்த ஊரில் உம் மகனுக்கு யாருமே பெண் கொடுக்க மாட்டார்கள்” என்றார்கள் அனைவரும்.
முதியவர் வருத்தத்துடன் அங்கிருந்து அடுத்த ஊருக்குப் போனார். அங்கேயும் அதே நிலைமைதான். பிறகு அங்கிருந்து ஊர் ஊராக அலைந்துவிட்டு, மங்களாபுரத்துக்கு வந்து சேர்ந்தார்.
மங்களாபுரத்திலும் தனது மகனைப் பற்றிக் கூறி அவனுக்குப் பொருத்தமான பெண் கிடைப்பாளா? என்று விசாரித்தார்.
முதியவர் சொன்னதைக் கூர்ந்து கேட்டார் ஒரு பெரியவர். பிறகு புண் முறுவலுடன் முதியவரை அழைத்து, ” ஐயா….உமக்கு எனது மகளைப் பற்றிக் கூறுகிறேன். உங்களுக்குப் பிடிஹ்திருந்தாள், உமது மகனுக்கு மணம் செய்து வைக்கலாம்” என்றார்.
சொல்லுங்கள் என்றார் முதியவர்.
” எனது மகள் மிகுந்த அழகுடன் இருப்பாள். அவளிடம் எந்தக் குறையும் கூற முடியாது. …………….ஆனால் படுத்துவிட்டாள் எழுந்திருக்க மாட்டாள்”என்றார்.
பெரியவர் கூறியதைக் கேட்ட முதியவர், ” ஐயா…..இப்படிப்பட்ட பெண்ணைத்தானே நான் இதுவரை தேடிக்கொண்டிருந்தேன்.கடவுள் அருளால் நான் தேடிய பெண்ணே கிடைத்துவிட்டாள்.உடனே திருமணத்தை முடித்துவைப்போம்” என்றார்.
ஒரு நல்ல நாளில், படுத்தால் எழாத பெண்ணுக்கும், உட்கார்ந்தால் எழுந்திருக்காத இளைஞனுக்கும் மணம் நடந்தது.அவர்கள் இருவருமே சிறப்பாக அனைவரும் போற்றும் வண்ணம் இல்லறம் நடத்தினார்கள்.
எதனால் அந்தப் பெண்ணை படுத்தால் எழாதவள் என்றும்,
அந்த இளைஞனை உட்கார்ந்தால் எழுந்திருக்காதவன் என்றும் கூறினார்கள்.??
புதிர் விடை :
படுத்தால் எழுந்திருக்காத பெண் என்றால் அதற்கு அவள் சோம்பேறிப் பெண் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. ஒரு பெண் பொழுது போனதும், சோம்பலாகப் படுக்கையில் படுத்திருந்தால், கணவன் வெளியில் இருந்து வந்ததும், ஒருமுறை எழுந்து உணவு பறிமாற வேண்டும்.
இதேபோல், மாமனார், மைத்துனர் இப்படி வீட்டு ஆட்கள் யார் வந்தாலும் எழுந்திருக்க வேண்டும்.. அனைவக்கும் உணவு பறிமாறிப் பின் வீட்டு வேலைகளை முடித்துவிட்டுப் படுத்தால் அவள் மறுபடியும் எழுந்திருக்கத் தேவை இல்லை.
இப்படிப்பட்ட குடும்பப் பொறுப்பான பெண் என்ற பொருளில் தான் ‘படுத்தால் எழுந்திருக்காத பெண்’ என்றார் பெரியவர்.
ஒரு மகன் தரையில் தாழ அமர்ந்திருந்தால், தந்தை மற்றும் பெரியவர்கள் வரும்போது எழுந்து மரியாதை தரத் தேவையில்லை.. அதே சமயம் நாற்காலியில் அமர்ந்திருந்தால், ஒவ்வொருவர் வரும்போதும் எழுந்திருக்கவேண்டும். அதனால் மிகவும் மரியாதை தெரிந்த மகன் என்ற பொருளில் முதியவர் ‘ உட்கார்ந்தால் எழுந்திருக்காத மகன் ‘ என்றார்