தர்மம் மட்டுமல்ல… அன்பும் தலை காக்கும்!’
அவர் ஒரு சிமெண்ட் ஓடு தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தார். ஒரு நாள் பணி முடித்து கிளம்பும் முன், எதையோ செக் செய்யவேண்டி, சிமெண்ட் மூட்டைகள் பிரித்து கொட்டப்படும் பகுதிக்கு சென்றபோது அங்கிருக்கும் பெரிய கொள்கலனில் தவறி விழுந்துவிடுகிறார்.
எத்தனையோ பலமாக கத்தியும் யார் காதுக்கும் அவர் கூக்குரல் விழவில்லை. பெரும்பாலானோர் ஏற்கனவே பணி முடித்து வெளியேறிவிட்டனர். இந்நிலையில் சிமென்ட்டில் கலக்க தண்ணீர் திறந்துவிடப்பட்டு அது கொள்கலனில் வந்துவிழுந்துகொண்டிருந்தது.
இன்னும் சில மணிநேரத்தில் கொள்கலன் நிரம்பிவிடும். இவருக்கு மரணபயம் வந்துவிட்டது. அந்த நேரத்தில் ஆச்சரியப்படும் விதமாக ஃபாக்டரியின் காவலாளி அந்த பகுதிக்கு வந்து எட்டிப் பார்க்க, இவர் உள்ள கிடப்பதை பார்த்து சைரனை ஒலிக்கச் செய்து காப்பாற்றிவிடுகிறார்.
இவருக்கு ஒரே ஆச்சரியம். “உன் வேலை ஃபாக்டரி வாயிலை காப்பது. இங்கே எப்படி சரியாக வந்து எட்டிப் பார்த்து என்னைக் காப்பாற்றினாய்?”
“ஐயா நான் இந்த பாக்டரியில் பல வருடங்களாக பணிபுரிகிறேன். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு தினம் வந்து போனாலும் நீங்கள் ஒருவர் தான் காலை என்னை பார்க்கும்போது ‘குட் மார்னிங்’ சொல்லி விஷ் செய்வீர்கள். அதே போல, மாலை போகும்போதும் ‘குட் ஈவ்னிங்… நாளைக்கு பார்க்கலாம்!’ என்று சொல்வீர்கள்.
இன்று காலை வழக்கம்போல வேலைக்கு வரும்போது எனக்கு ‘குட் மார்னிங்’ சொன்னீர்கள். ஆனால் மாலை உங்களிடம் இருந்து ‘குட் ஈவ்னிங்’ வரவில்லை. உங்களையும் பார்க்கவில்லை. சரி… ஏதோ தவறு நடந்திருக்கவேண்டும் என்று தோன்றியது. ஆகையால் பாக்டரியின் ஒவ்வொரு பாகத்திற்கும் சென்று செக் செய்தேன். நீங்கள் இங்கு விழுந்திருப்பதை கண்டுபிடித்தேன்” என்றார்.
இவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவனை அப்படியே வாரி அணைத்துக்கொண்டார். ‘தர்மம் மட்டுமல்ல… அன்பும் தலை காக்கும்!’ உங்களை சுற்றியிருப்பவர்களிடம் எப்போதும் அன்பாய் இருங்கள்.
குறிப்பாக உங்களுக்கு கீழே பணி புரிகிறவர்களிடம். நீங்கள் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களிடம் யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத வகைகளில் உங்கள் ‘அன்பு முத்திரை’யை பதியுங்கள். அன்பு செலுத்துங்கள்.
அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.
நிம்மதியான மதிப்பிற்குரிய வாழ்க்கைக்கு பத்து கட்டளைகள்:-
1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.
2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.
3. இன்சொல் கூறி ‘நான்’,’எனது’ போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.
4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.
5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.
6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.
7. ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.
8. ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.
9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்.
10. ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.
இவற்றையயெல்லாம் கடைபிடியுங்கள். அப்புறம் பாருங்கள்…. உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர் நீங்களாகத் தான் இருப்பீர்கள்.