முன்னொரு காலத்தில் புகழ்பெற்ற குரு ஒருவர் இருந்தார். இவரிடம் இளைஞன் ஒருவன் சீடாக இருந்தான். தன்னுடைய சுற்றுப்புறத்தைப் பற்றியோ, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றியோ யோசிக்க மாட்டான்.
குருகுலத்திற்கு வந்து போகிறவர்கள் அவனைப் பார்த்துவிட்டு, “இவன் பூமிக்குப் பாரம், சோற்றுக்குத் தெண்டம்’ என்று ஏளனம் பேசினர். அவனைப் பற்றி சுவாமிகளிடம் குறை கூறினர்.
சுவாமிகளின் பார்வையோ வேறுவிதமாய் இருந்தது. அவருடைய கண்ணுக்கு அந்த இளைஞன் ஞானானுபவத்தில் திளைப்பவனாகவே தெரிந்தான்.
அவனுடைய அறிவு தீட்சண்யத்தை அவர் சரிவரப் புரிந்து கொண்டிருந்தார். எனவே, தம்முடைய வாரிசாக அவனைக் கருதி வந்தார்.
அன்று நள்ளிரவு நேரம். குருநாதர், தம்முடைய மாணவர்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்தார். அங்கே அந்த இளைஞனை தவிர மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர்.
அவர்களுக்குப் பக்கத்தில், அவர்கள் படித்த புத்தகங்கள் கிடந்தன. அவனைத் தேடிக்கொண்டு வெளியே வந்தார் குருநாதர்.
அவன், கொடும்பனியில் நட்டநடு வழியில் படுத்திருந்தான். அவனருகே, ஒரு சுவடி நூல் இருந்தது. அதில் ஆங்காங்கே, அவன் எழுதிய விளக்கக் குறிப்புகளும் காணப்பட்டன.
அவற்றை மேலோட்டமாய் பார்த்த குருநாதர் வியப்புற்றார். தூங்கிக் கொண்டிருந்த சீடனை தொந்தரவு செய்ய விரும்பாமல், தன்னுடைய மேலாடையை எடுத்து அவருக்குப் போர்த்தினார்.
சுவடிக் கட்டுடன் உள்ளே சென்றார். இரவு நெடுநேரம் வரை சீடனின் குறிப்புரைகளை அவர் அக்கரையோடு படித்தார். தமக்குள் பாராட்டிக் கொண்டார்.
பொழுது விடிந்தது. கண்விழித்தான் இளைஞன். பக்கத்தில் சுவடிகளைக் காணவில்லை. குருவின் மேலாடையை யாரோ அவன் மீது போர்த்தியிருந்தனர்.
மாணவர்களில் யாரேனும் அந்தக் குறும்புச் செயலைக் செய்திருக்க வேண்டும் என்று பட்டது. ஆனாலும், குருவின் மேலாடையை இரவு முழுதும் தான் போர்த்திக் கொண்டிருந்தோம் என்பதே அவனுக்கு நடுக்கத்தைக் கொடுத்தது.
குருவிடம் மன்னிப்பு கேட்பதற்காக அவருடைய அறைக்குச் சென்றான் இளைஞன். குருநாதர் அவனை வரவேற்று, “”நீதான் இதையெல்லாம் எழுதியதா?” என்று அன்புடன் கேட்டார்.
“”ஐயனே! நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் என்னை மன்னிக்க வேண்டும்!” என்று கூறியபடி, அவர் பாதங்களில் விழுந்து வணங்கினான்.
“”தன் சீடன் மற்றவர்கள் நினைக்கிற மாதிரி ஒன்றும் மந்தபுத்திக்காரன் அல்ல; அவன் ஞானவான்!” என்று எல்லாரிடமும் பெருமையாய் சொன்னார் சுவாமிகள்.
அன்று முதல் அந்த இளைஞனை தம்முடைய முதன்மைச் சீடராக அறிவித்தார் குரு.
அந்தச் சீடர்தான் பிற்பாடு, ஸ்ரீ ராகவேந்திரர் என்று உலகோரால் வணங்கிப் போற்றப்படுபவர்.
தம்முடைய சீடர்களின் திறமையையும், திறமையின்மையையும் குருநாதர் சரிவரப் புரிந்து கொண்டிருப்பார்.