Home » உடல் நலக் குறிப்புகள் » வெற்றிலை போடலாம்!!!
வெற்றிலை போடலாம்!!!

வெற்றிலை போடலாம்!!!

தாம்பூலம் போடலாம்:-

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவிலிருந்து சீனா, பர்மா, வியட்நாம் நாடுகள் வாயிலாக மேற்கத்திய நாடுகளுக்கு வெற்றிலை போடும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியதில் இந்தியாவிற்கு தான் முதலிடம்.

வெற்றிலை, பாக்கு சுண்ணாம்பு, ஏலக்காய், கிராம்பு, வால்மிளகு, சாதிக்காய், சாதிபத்திரி, சுக்கு, காசுக்கட்டி ஆகியவற்றை சேர்த்து வாய் மணக்க, மணக்க தாம்பூலம் தரிப்பது தமிழர்களின் வழக்கம். ஆண், பெண் வேறுபாடின்றி தாம்பூலம் தரிப்பதுண்டு.

ஆனால் தாம்பூலம் தரித்து கண்ட இடங்களில் துப்புதல், பற்கள் கறை படிதல் போன்ற காரணங்களாலும், பொது இடங்களில் கவுரவம் கருதியும், மனதில் ஆசையிருந்தாலும் தாம்பூலம் தரிக்கும் பழக்கம் நம்மிடம் குறைந்து கொண்டே வருகிறது.

தாம்பூலம் தரிப்பதால் ஆண், பெண் இடையே மோகம் அதிகரிக்கும். உணவு எளிதில் செரிமானமாகும்; வயிற்று புழுக்கள் வெளியேறும். தொண்டை கட்டு, அதிக தாகம், பல்வலி, ஆகியன நீங்கும்.

ருசியை கூட்டி, உண்ட உணவினை எளிதில் செரிமானம் செய்துவிடும் தன்மை தாம்பூலத்திற்கு உண்டு. அசைவ உணவுகள் செரிப்பதற்கு, கடினமான உணவுகளை அதிகம் உட்கொள்வதால் ஏற்படும் மலச்சிக்கல் நீங்க, குடல் சுத்தமாக தாம்பூலம் தரிப்பது நல்லது என சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது.

அது மட்டுமன்றி தாம்பூலம் தரித்த பின்பு மனம் புத்துணர்ச்சியடைவதுடன், சிந்திக்கும் திறன் அதிகரித்து, ஆடல், பாடல் ஆகியவற்றில் மனம் ஆர்வம் கொள்வதுடன் ஆண், பெண் போக உணர்ச்சி அதிகரிக்கும் என பதார்த்த குண சிந்தாமணி என்ற சித்த மருத்துவநூல் குறிப்பிடுகிறது. வெற்றிலை போடுவது எப்படி வெற்றிலை போடுவது எப்படி என சித்த மருத்துவம் குறிப்பிடுவதை தெரிந்து கொள்வோமா?

சுத்தமான வெற்றிலையின் காம்பு, நடு நரம்பு மற்றும் நுனியை கிள்ளி எறிய வேண்டும். ஒரு சிறிய துண்டு வெற்றிலையை மட்டும் வாயிலிட்டு மென்று, அதன் பிறகு பாக்கை வாயில் போட்டு மெல்ல வேண்டும். அடுத்து ஒரு வெற்றிலையின் பின்புறம் கற்சுண்ணாம்பை தடவி, வாயில் போட்டு அனைத்தையும் ஒன்றாக நன்கு மெல்ல வேண்டும்.

வெற்றிலையை வாயிலிட்டு மெல்ல, மெல்ல ஒரு விதக் காரம், துவர்ப்பு, மதமதப்புடன் கூடிய நீர் வாயில் உற்பத்தியாகும். இந்த நீர் மிகவும் வீரியமுள்ளது. ஆனால் வயிற்று புண்களை உண்டாக்கும் என்பதால் இதை துப்பி விட வேண்டும். இரண்டாவது ஊறும் நீர் ஒரு வித போதையை ஏற்படுத்தும் இதனையும் துப்பி விட வேண்டும்.

மூன்றாவது ஊறும் நீர் போதுமான அளவு காரம், கசப்பு மற்றும் சுண்ணாம்புசத்து உள்ளதால் இதனை உள்ளே விழுங்கி விடலாம். நான்காவதாக வாயில் ஊறும் நீரில் ஒரு வித இனிப்பு தன்மை இருக்கும்.

இது செரிமான நீர்களை ஊக்குவித்து, வயிற்று கோளாறுகளை நீக்கி, உணவு நன்கு செரிமானமாக உதவும். இதன் பின்னர் வாயில் ஊறும் ஐந்து மற்றும் ஆறாவது நீரினை துப்பி விட வேண்டும். அதனையும் மீறி உட் கொண்டால் கடுமையான ரத்த சோகை நோய் ஏற்படும். ஆகவே முறையாக தாம்பூலம் போட்டால் உடலுக்கு நல்லது.

செரிமானம் எளிதாகிறது தாம்பூலம் தரிப்பதால் செரிமானம் எளிதாகிறது. எச்சிலுடன் சேர்ந்து தாம்பூலம் சத்துகள் குடலில் இறங்கி ஆக்சிஜனின் சுற்றோட்டத்தை அதிகப்படுத்துவதால், உண்ட
பின் தோன்றும் மயக்கம் நீங்குவதுடன் கண்களும் பிரகாசமடைகின்றன.

அதிகாலை, மதிய உணவுக்கு பின், இரவு உணவிற்கு பின் என மூன்று வேளை தாம்பூலம் தரிப்பது சிலருக்கு வழக்கமாக இருந்து வருகிறது.

அதிகாலையில் தாம்பூலம் தரிக்கும் போது பாக்கை சற்று அதிகமாக சேர்க்க வேண்டும். இதனால் மலச்சிக்கல் நீங்கும்.

மதிய உணவுக்கு பின்பு தாம்பூலம் தரிக்கும் போது, சுண்ணாம்பு சற்று அதிகமாக சேர்க்கலாம். இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும்.இரவு உறங்கும் முன் தாம்பூலம் தரிக்கும் போது வெற்றிலைகளை அதிகமாக சேர்க்க வேண்டும்.

இதனால் வாயில் ஒரு வித நறுமணம் உண்டாகும். மனக் கிளர்ச்சியும், சுகமான நித்திரையும் உண்டாக்கும்.தற்சமயம் வெற்றிலை பாக்குடன் பலவிதமான செயற்கை திரவியங்கள் மற்றும் புகையிலை சேர்ந்த குட்கா மசாலா போன்ற பொருட்கள் கலந்து போதை தரும் பீடாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் வாயில் வயிற்றில் ஆறாத புண்களும், புற்று நோயும் உண்டாகிறது. ஆகவே போதை தரும் தாம்பூலம் வகைகளை தவிர்ப்பது நல்லது.நலம்தரும் சத்துக்கள் வாரம் 2 அல்லது 3 முறை வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, காசுக்கட்டி, சுக்கு, ஜாதிக்காய், கிராம்பு சேர்ந்த தாம்பூலம் தரிப்பதால் பித்தப்பையில் கற்கள் உருவாவதை தவிர்க்கலாம்.

மேலும் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான சுண்ணாம்பு சத்து, குடலில் தேவையற்ற புழுக்கள் வளர்வதை தடுக்கும் டானின்கள் தொண்டையில் வளரும் பாக்டீரியா தொற்றை தடுக்கும் பைப்பிரின் போன்ற நலம் தரும் சத்துக்கள் தாம்பூலத்தில் உள்ளன.

இறைவழிபாட்டிலும் மகிழ்ச்சியான சடங்குகளிலும் மரியாதை செய்யக்கூடிய இடங்களிலும் வெற்றிலை முதலிடம் வகிக்கிறது. வேப்பிலைக்கு எப்படி கிருமி நாசினி தன்மை உள்ளதோ அது போல வெற்றிலைக்கும் கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டு. அதனால் தான் விருந்துக்கு அழைக்கும் போது வெற்றிலை வைத்து அழைப்பது உண்டு.

எப்படிபட்ட விருந்து சாப்பிட் டாலும், வெற்றிலை சாப்பிட்டால், விருந்தினால் தோன்றும் அஜீரணம், மந்தம், செரியாமை ஆகியன நீங்கும்.ரத்த வாந்தி எடுப்பவர்கள், கண் வறட்சி, கண் அழுத்தம், காசநோய் உடையவர்கள், விஷம் உட்கொண்டவர்கள், மயக்கத்திலிருந்து எழுந்தவர்கள், போதை வெறி கொண்டவர்கள், ஜூரம், தலைவலி ஆகியவற்றால் வேதனைப்படுபவர்கள் தாம்பூலம் தரிப்பதை தவிர்க்க வேண்டும்.

பண்டிகை தினங்கள், மகிழ்ச்சியான நாட்கள், விருந்துக்கு பின் என அனைவரும் அளவோடு தாம்பூலம் தரிப்பது உடலுக்கு நன்மையும், மனதிற்கு புத்துணர்ச்சியும் ஏற்படுத்தும். அளவோடு தாம்பூலம் தரித்து வளமோடு வாழ்வோமாக.

தாம்பூலம்

இன்றைய அவசர உலகில் நாகரிகம் என்ற பெயரால் நாம் செய்யத் தவறிய நற்பழக்கங்களில் தாம்பூலம் தரிப்பதும் ஒன்று.

இது ஏதோ பொழுது போக்கிற்காக ஏற்பட்ட பழக்கம் அல்ல.உடல் நலம் சார்ந்த இதன் முக்கியத்துவம் கருதியே அனைத்து சுப நிகழ்வுகளிலும் தாம்பூலத்திற்கு தனி இடம் உண்டு.

இதில் சேருகின்ற ஒவ்வொரு மூலிகைகளுக்கும் உடல் நலத்தை பேணுவதில் முக்கிய பங்கு இருக்கிறது.

வெற்றிலை-வாயில் நறுமணம் உண்டாகும்.
குரற்கம்மல்,சளி குணமாகும்.

பாக்கு-மலச்சிக்கலை நீக்கும்.கோழை,கிருமியை நீக்கும்.

சுண்ணாம்பு-உணவை எளிதில் சீரணிக்கும்.பற்களுக்கு உறுதியளிக்கும்.உடலுக்கு இன்றியமையாததான சுண்ணச் சத்தை (calcium) வழங்கும்.

ஏலம்-தொண்டை வாய் இவைகளில் உண்டாகும் நோய்களை நீக்கும்.

வால்மிளகு-தாகம்,வயிற்றுப்புண் நீக்கும்.பசி உண்டாகும்.

சாதிக்காய்-வயிற்றுவலி,வயிற்றுப்பொருமல்,பசிமந்தம் நீங்கும்.

கிராம்பு-முகக் களிப்புண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top