ஆசை அழித்து விடும்!
முனிவர் ஒருவரின் தவத்தை மெச்சி கடவுள் அவருக்கு காட்சி கொடுத்து, “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.
“தங்கள் தரிசனமே எனது தவத்தின் நோக்கம்; வேறெதுவும் வேண்டாம்” என்றார் அந்த முனிவர்.
கடவுள், “நான் உனக்கு ஒரு விருஷத்தை வரமாக தருகிறேன். கற்பக விருஷம் மாதிரி. இதனிடம் கேட்கக் கூட வேண்டாம். அதனடியில் நின்று கொண்டு யார் என்ன நினத்தாலும் அது உடனே நடக்கும்” என்று அருளினார் .
இந்த மரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இது நமக்கு ஆசையை வளர்த்து நம்மை பாவம் செய்ய வைக்கும் என்று சிந்தித்த முனிவர் அங்கிருந்து ஓடி விட்டார்.
ஒரு நாள் அந்த வழியே ஆடு மேய்த்துக் கொண்டு வந்த ஒரு இளைஞன் வந்தான். அந்த மரத்து நிழலில் கொஞ்சம் படுத்து ஓய்வெடுக்க நினத்தான்.
அந்த மரத்தடியில் வந்து படுத்துக் கொண்டே யோசித்தான், “இது என்ன பொழைப்பு; தினம் தினம் ஆட்டை மேய்ச்சிட்டு, ஒரு நல்ல சாப்பாடு கூட சாப்பிட்ட முடிவதில்லை. அரண்மனையில் சாப்பிடற விருந்து மாதிரி சாப்பாடு கிடைச்சா தேவலை”
அந்த மரத்தினடியிலிருப்பவர் எதை நினைத்தாலும் மரம் தரக்கூடியது என்பதால் அவன் கண் முன்னே அவனுக்கு ராஜோபசார விருந்து படைக்கப்பட்டிருந்தது.
அவன் பயந்து போய் விட்டான். இது ஏதாவது பிசாசு அல்லது பூதத்தின் வேலையாக இருக்குமோ என்று அந்த மரத்தை சுற்றி சுற்றி வந்தான். ஒன்றுமில்லாததால், பயம் தெளிந்து அந்த விருந்தை ஆவலுடன் சாப்பிட்டா ன்.
அவன் மீண்டும் யோசித்தான், “சாப்பிட்டதுக்குப் பின்னால் வசதியாகப் படுக்க வேண்டும்”
அந்த மரம் அவன் நினைத்தபடி அவனை நல்ல கட்டில் மெத்தையில் படுக்க வைத்தது.
தூக்கத்திலிருந்து விழித்த அவன், “நான் நடுக்காட்டில இப்படி மரத்துக்கடியில் படுத்திருக்கிறேனே திடீரென்று புலி வந்து நம்மை அடிச்சுக் கொன்று விட்டால் ….”.
அவன் எண்ணப்படியே புலி வந்து அவனை அடித்துக் கொன்றது.
ஆசை மட்டும் ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாய் வந்து நம்மை அழித்துவிடுகிறது.