Home » சிறுகதைகள் » சீதையின் கூறிய கதை!!!
சீதையின் கூறிய கதை!!!

சீதையின் கூறிய கதை!!!

சீதையின் பொறுமை:-

இலங்கை அசோகவனத்தில் ராவணனால் சிறைவைக்கப்பட்டிருந்த சீதையைக் கண்டு ராமன் அனுப்பிய செய்தியை அனுமன் சொன்னான்.

பின்னர், அங்கிருந்த அரக்கியர் கூட்டத்தைக் குறிப்பிட்டு, தேவி, உன்னைப் பயமுறுத்திய இவ்வரக்கியரை நான் கொல்ல நீ அனுமதிக்க வேண்டும்.

இவர்கள் கொடுமையே உருவானவர்கள்.இராவணனுடைய ஆணையால் மட்டுமல்ல; இவர்களுக்கு இயற்கையாக உள்ள கொடுமைக்குணம் உன்னைத் துன்புறுத்த இவர்களைத் தூண்டியது.

இவர்களைத் தண்டிக்க வேண்டும். காது, மூக்கை, அறுக்க கீழே வீழ்த்தி உதைக்க வேண்டும் எனக்கு அனுமதி தா! என்றான்.

அனுமனின் இந்தக் கோரிக்கையை சீதை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவள் திரிசடையின் தலையீட்டால் முன்பே அரக்கியருக்கு சரண் தந்துள்ளாள்.

இப்போது சீதை அபலைகளை நான் மன்னித்து விட்டேன். அவர்கள் தவறே புரிந்திருப்பினும், நீயும் நானும் ஏன் அவர்களுக்கு தீங்கு இழைக்க வேண்டும், என்று கூறிவிட்டு ஒரு கதையை அனுமனுக்குக் கூறினாள்.

ஒரு புலி வேடனைத் துரத்திக்கொண்டு போயிற்று. வேடன் அருகில் இருந்த மரத்தில் ஏறிக் கொண்டான். அதற்கு முன்பே, மரத்தின் மீது ஒரு கரடி இருந்தது.

புலி கரடியிடம் கூறிற்று:

இவ்வேடன்:

நமது மிருக குலத்துக்கே பகைவன்; இவனைக் கீழே தள்ளி விடு!

கரடி புலியிடம் கூறிற்று:

இருக்கலாம் ஆனால், இவன் நான் இருந்த மரத்தை அண்டியதால் என்னிடம் சரண் புகுந்தவன் ஆகிறான். சரண் அடைந்தவனைக் கைவிட மாட்டேன் இவ்வாறு சொல்லிவிட்டு கரடி உறங்கிற்று.

சற்று நேரம் கழித்து புலி வேடனிடம் கூறிற்று:

எனக்கு பசியாக இருக்கிறது. நீ அந்தக் கரடியைக் கீழே தள்ளிவிட்டால், நான் அதை உண்டு பசியாறி உன்னை விட்டு விடுகிறேன்.

வேடன் கரடியைத் தள்ளிவிட்டான் கரடியோ மரத்தின் கீழ்க் கிளை ஒன்றைப் பிடித்துக் கொண்டு, விழாமல் தப்பி, மேலே ஏறிக் கொண்டது.

அப்போது புலி கரடியிடம் சொன்னது:

இந்த மனிதன் நன்றிகெட்டவன். சரண் அடைந்தவனைக் காப்பாற்றுவேன் என்ற உன்னையே தள்ளிவிட்டான். அவனை தள்ளிவிடு!

அதற்கு கரடி சொன்னது:

எவனோ ஒருவன் தன் ஒழுக்கத்தினின்று வழுவினான் என்பதற்காக நான் என் தர்மத்தைக் கைவிடக் கூடாது.

இன்னமும் அவன் சரண் புகுந்தவனே. அவனைத் தள்ளுவது அறத்தினின்று நான் தவறியது ஆகும் என்று கூறி. வேடனைக் கீழே தள்ள மறுத்து விட்டது.

துன்பம் இழைத்தவருக்குப் பதிலுக்குத் துன்பம் இழைத்துப் பழி வாங்குவது சாதாரண மனிதர்களின் இயல்பு.

சான்றோர்கள் அப்படிப் பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்தாலும், துன்பம் இழைக்க மாட்டார்கள்.

சீதையின் சொல் கேட்டு, மேனிசிலிர்த்து, நெகிழ்ந்து அவளை மீண்டும் கரம் கூப்பி வணங்கினான் அனுமன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top