வெள்ளை நிறமே…வெள்ளை நிறமே…
* தீங்கில்லாத பொய், ‘வெள்ளைப் பொய்’ எனப்படும்.
* உயிர்க்கொல்லி நோய்களுக்கு எதிரான மருந்துகள் ‘வெள்ளை மருந்துகள்’ என அழைக்கப்படுகின்றன.
* 1940களில் சீனாவில் தோன்றிய ஜப்பானிய எதிர்ப்பு இயக்கம் ‘வெள்ளை மலர்கள்’ என்பதாகும்.
* லெனின்கிராட் நகரில் ஜூலை 22 முதல் 26 வரை இரவே இருக்காது. இதை ‘வெள்ளை இரவுகள்’ என்று சொல்கிறார்கள்.
* ரத்தம் சிந்தாத போர் ‘வெள்ளை யுத்தம்’ எனப்படும்.
* அயர்லாந்தில் கோழையை ‘வெள்ளை ஈரல்காரன்’ என்கிறார்கள்.
* பெட்ரோலியம் கரைப்பானாகச் செயல்படும்போது ‘வெள்ளை ஸ்பிரிட்’ எனப்படும்.
* கசடு நீக்கப்பட்ட சுத்தமான சர்க்கரை, வெள்ளைச் சர்க்கரையாகும்.
* சணல், நார்த் துணிகள் விற்பனை ‘வெள்ளை விற்பனை’ எனப்படும்.
* நன்மை செய்யும் மந்திரக்காரிக்கு ‘வெள்ளை சூனியக்காரி’ என்று பெயர்.
* இங்கிலாந்தில் ஏலத்தின்போது விலைகளை ஏற்ற அமர்த்தப்படும் மனிதர் ‘வெள்ளை மனிதர்’ என அழைக்கப் படுவார்.
வித்தியாச பூ!
பூக்கள் தங்கள் மகரந்தச் சேர்க்கையைப் பூச்சிகள் மற்றும் வண்டுகளின் உதவியுடன் நடத்திக் கொள்கின்றன. ஆனால் எல்லா மலர்களும் எல்லாப் பூச்சிகளையும் இச்செயலில் ஈடுபட அனுமதித்து விடுவதில்லை. சில மலர்கள் சில குறிப்பிட்ட பூச்சிகளையும் வண்டுகளையும் மட்டும்தான் மகரந்தச் சேர்க்கைப் பணிக்கு அனுமதிக்கும்.
மெடோசேஜ் என்ற மலர், தேனீயை மட்டுமே மகரந்தச் சேர்க்கை செய்ய அனுமதிக்கும். அதன் அமைப்பே ஒரு தேனீ மட்டும் உள்ளே சென்று வரும் அளவுக்குத்தான் இருக்கும். தேனீயைத் தவிர வேறு பூச்சிகள் வந்தால் அந்த மலர், தன் மகரந்தம் இருக்கும் இடத்திற்கு அவற்றைச் செல்ல விடாமல் வழியில் இயல்பாகப் பல தடுப்புகளை ஏற்படுத்தி விடும்.
தேனீக்கு மட்டும் எல்லா தடைகளையும் நீக்கி விடுவதோடு, அதன் மலர் இழை தேனீயின் பக்கமாகத் திரும்பி அதை வரவேற்கும். அதே சமயம், மலரின் இன்னோர் இழை தேனீயின் உடலெங்கும் தடவிக் கொடுத்து மகரந்தத்தூளைத் தூவி விடுகிறது.
இந்தச் செயல் முடிந்ததும் மலரிழை உதிர்ந்து விட, அந்த இடத்தில் சூல்முடி தோன்றி பூவின் அமைப்பே மாறிவிடுகிறது. அந்த நிலையில் உடலெங்கும் வேறு பூவின் மகரந்தத்தைப் பூசிக் கொண்ட இன்னொரு தேனீ இந்த மெடோசேஜ் பூவினுள் நுழைய, அதன் சூல்முடி வளைந்து, அந்தத் தேனீயை அனுமதித்து அதன் மேல் பூசப்பட்டுள்ள மற்றொரு பூவின் மகரந்தங்களை ஏற்றுக் கொள்கிறது.
தேன் உண்ண வரும் பூச்சிகளை சிறைப் பிடித்து அவற்றின் உடலெங்கும் மகரந்தத்தைத் தடவி அனுப்பும் மலர்களும் உள்ளன! ஆக மொத்தத்தில் மெடோசேஜ் ஒரு வித்தியாசமான பூ…
வண்ண வண்ண முட்டைகள்…
* அமெரிக்காவில் வாலில்லாத சில வகை கோழிகள் நீல நிறத்தில் முட்டையிடும்.
* நியூகினியாவிலுள்ள காசோவரி வான்கோழிகள் பச்சை நிறத்தில் முட்டையிடும்.
* அன்னப் பறவைகள் பசுமை கலந்த வெள்ளை நிறத்தில் முட்டையிடும்.
* ஜப்பானில் காணப்படும் குயில்களின் முட்டை சிவப்பு நிறத்தில் இருக்கும்.
* ஆப்ரிக்க ஜிங் கோழி முட்டைகள் சிவந்த மஞ்சள் நிறமாய் கரும்புள்ளிகளைப் பெற்றிருக்கும்.
* கழுகுகளின் முட்டை சிவப்பு கலந்த பழுப்பு நிறத்துடன் இருக்கும்.
* பவழக்கால் நாரைகளின் முட்டைகளில் புள்ளிகள் மற்றும் கோடுகள் காணப்படும்.
* வரகு கோழிகள் மஞ்சள் நிற முட்டைகள் இடும்.
* கருடன் முட்டை சாம்பல் நிறத்தில் இருக்கும்.
* செந்தலைக் கிளிகளின் முட்டை வெண்ணிறத்தில் வட்ட வடிவத்தில் இருக்கும்.
வெள்ளை நிறம் ஒளி, பாதுகாப்பு, சுத்தத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. நல்மனதை, கபடமில்லா குணத்தை,தூய்மையான உள்ளத்தைக் குறிக்கவும் இந்த நிறம் பயன்படுத்தப்படுகிறது.