மகாவீரர்
இந்திய மாநிலம் பீகாரில் ஜமுயி மாவட்டத்தில் இருந்த லச்சுவார் என்ற முன்னாள் அரசாட்சியின் சத்திரியகுண்டா என்றவிடத்தில் மகாவீரர் சித்தார்த்தன் என்னும் அரசனுக்கும் திரிசாலா என்ற அரசிக்கும் இந்திய நாட்காட்டியில் சைத்ர மாதம் வளர்பிறை பதின்மூன்றாம் நாள் (கிரெகொரியின் நாட்காட்டியில் ஏப்ரல் 12) அன்று பிறந்தார்.
அவர் அன்னையின் கருவில் இருக்கும்போதே அரசருக்கும் அரசாட்சிக்கும் செல்வம் மற்றும் பிற வளங்களை பெருக்கியதாக நம்பப்படுகிறது;காட்டாக அபரிமிதமான பூக்களின் மலர்ச்சி.
எனவே அவருக்கு வளர்ப்பவர் என்ற பொருளுடைய வர்த்தமானன் என்ற பெயர் சூட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அரசி திரிசாலாவும், மாமனிதர் ஒருவர் பிறப்பதை அறிவிக்கும் வகையில், கருவுற்றிருக்கையில் 14 (சுவேதம்பர் வழிமுறையில் 14,திகம்பர் வழிமுறையில் 16) சுப கனவுகளைக் கண்டதாகவும் கூறப்படுகிறது.
சமண சமய நம்பிக்கைகளின்படி, பிறப்பினையடுத்து தேவலோக அரசன் இந்திரன் ஓர் எதிர்கால தீர்த்தங்கரருக்கு உரித்தான பால் அபிசேகம் உற்பட சடங்குகளைச் செய்வித்து அன்னையிடம் கொடுத்ததான்.
உலகெங்கும் உள்ள சமணர்கள் (ஜைனர்கள்)அவரது பிறந்தநாளை மகாவீர் ஜெயந்தி எனக் கொண்டாடுகின்றனர்.
சிறுவயது
சித்தார்த்தனின் மகனாக இளவரசனாக வாழ்ந்தார் வர்த்தமானன். இருப்பினும் அச்சிறுவயதிலும் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டிருந்தார். தியானத்திலும் தன்னறிவதிலும் கூடுதல் நாட்டமுடையவராக விளங்கினார். மெதுவாக உலக சிற்றின்பங்களிலிருந்து விலகி சமண சமய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டார்.
பன்னிரெண்டாண்டுகள் ஆன்மீகத் தேடல்
மகாவீரரின் காலத்தில் இந்தியா
தமது முப்பதாவது வயதில் அரசாட்சி மற்றும் குடும்பத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டார். துறவியாக 12 ஆண்டுகள் தியானம் செய்து ஆன்மீகத்தேடலில் ஈடுபட்டார். பிற உயிரினங்களுக்கு,மனிதர்கள்,தாவரங்கள் மற்றும் விலங்குகள்,மதிப்பளித்தார்.
அவற்றிற்கு ஊறு விளைவிக்காமல் வாழ்ந்து வந்தார்.இவ்வாண்டுகளில் தமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார். அவரது பொறுமையும் வீரமுமே அவர் மகாவீரர் என அழைக்கப்பட காரணமாயிற்று.
இந்த ஆன்மீகத் தேடலின் விளைவாக கைவல்ய ஞானம் கிடைக்கப்பெற்றார். அச்சமயம் அவர் அளவற்ற சமசீர்மை,அறிவு மற்றும் கட்டுப்பாடு கொண்டவராக இருந்தார்.
பின்னாள் வாழ்க்கை
மகாவீரர் தமது எஞ்சிய நாட்களில் இந்தியா முழுவதும் உள்ள மக்களிடையே தாமறிந்த ஆன்மீக விடுதலையின் வரையற்ற உண்மையை பரப்பத் துவங்கினார்.
வெறும் கால்களில் துணிகள் எதுவுமன்றி கடுமையான காலநிலைகளில் பயணம் செய்த அவரின் பேச்சைக் கேட்க அனைத்துத் தரப்பு மக்களும் திரண்டனர். அவரது முயற்சியால் சமண சமயம் இந்தியாவெங்கும் பரவியது.
தமது 72ஆவது வயதில் பாவபுரி என்னுமிடத்தில் இந்திய நாட்காட்டியில் தீபாவளியின் கடைசி நாளன்று நிர்வாணம் எய்தினார்.அவர் பேறு பெற்ற இந்நாளை சமணர்கள் கொண்டாடுகிறார்கள்.
அவர் கி.மு 599 முதல் 527 வரை வாழ்ந்ததாக ஜைனர்கள் நம்பினாலும் சில வரலாற்றாசிரியர்கள் கி.மு 549-477 காலத்தவராக கருதுகிறார்கள்.
மகாவீரரின் மெய்யியல்
மகாவீரர்
மகாவீரரின் மெய்யியலில் முதன்மையாக எட்டு கொள்கைகள் உள்ளன – மூன்று கருத்துமயமானவை மற்றும் ஐந்து நெறிவழிப்பட்டவை. குறிக்கோள் வாழ்வின் தரத்தை உயர்த்துவதேயாகும்.
இந்த தனிப்பட்ட எட்டு கொள்கைகளும் குறிக்கோளை நோக்கிய ஓர்மையும் நெறிவழிப்பட்ட வாழ்வின்மூலம் ஆன்மீக வளமை பெற்றிடும் வழியையும் காட்டுவனவாக உள்ளன.
அவரது கருத்தியலில் மூன்று கொள்கைகள் உள்ளன:
அநேகாந்தவடா, சியாத்வடா, கர்மா
ஐந்து நெறிவழிகளாவன:
அகிம்சை, சத்தியம், அஸ்தேயம், பிரமச்சரியம், அபரிகிருகம்
மகாவீரர் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஓர் ஆத்மா உண்டென்றும் அது தனது நல்ல அல்லது கெடுதல் செயல்களின் விளைவாக கர்மா எனப்படும் வினைப்பயன்களை சேர்த்துக் கொள்கிறது என்றும் கூறுகிறார்.
கர்மாவின் மாயையால் ஒருவர் தற்காலிக மற்றும் மெய்போன்ற இன்பங்களிலும் பொருள் சேர்க்கையிலும் கவரப்படுகிறான்.
இவற்றின் தேடலில் அவனுக்கு சுயநலமுள்ள வன்முறை எண்ணங்களும் செயல்களும் கோபம்,வெறுப்பு,பொறாமை மற்றும் பிற பாவச்செயல்களில் ஈடுபாடும் ஏற்படுகின்றன. இவற்றால் அவனது கர்மா பளு கூடுதலாகிறது.
இதனிலிருந்து விடுபட, மகாவீரர் சரியான நம்பிக்கை (சம்யக்-தர்சனம்), சரியான அறிவு (சம்யக்-ஞானம்), மற்றும் சரியான நடத்தை(சம்யக்-சரித்திரம்’)தேவை என்பதை வலியுறுத்தினார்.
நன்னடத்தைக்கு துணைநிற்க ஜைன மதத்தில் ஐந்து உறுதிமொழிகள் எடுக்க வேண்டும்:
வன்முறை தவிர்த்தல் (அகிம்சை) – எந்தவொரு உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காதிருத்தல்;
வாய்மை (சத்தியம்) – தீங்கில்லாத உண்மையை மட்டுமே பேசுதல்;
திருடாமை(அஸ்தேயம்) – தனக்கு கொடுக்கப்படாதது எதையும் எடுத்துக் கொள்ளாதிருத்தல்;
பாலுறவு துறவு (பிரமச்சரியம்) – பாலுணர்வு இன்பம் துய்க்காதிருத்தல்;
உரிமை மறுத்தல்/பற்றற்றிருத்தல் (அபாரிகிருகம்) – மக்கள்,இடங்கள் மற்றும் பொருளியலில் பற்று அற்று இருத்தல்.
கருத்தியல் கொள்கைகளான உண்மை ஒரேஒன்றல்ல என்ற அநேகாந்தவடா மற்றும் சார்நிலைக் கொள்கையானசியாதவடா இவற்றை கொள்ளாமல் இந்த உறுதிமொழிகளை முழுமையாக கடைபிடிக்க வியலாது. இவற்றை ஆண் மற்றும் பெண் துறவிகள் நிச்சயமாகக் கடைபிடிக்க வேண்டும்;பிறர் அவர்களால் எந்தளவு இயலுமோ அந்தளவு கடைபிடித்தால் போதுமானது.
மகாவீரர் ஆண்களும் பெண்களும் ஆன்மீக நோக்கில் சரிசமனானவர்கள் என்றும் இருவருமே துறவறம் மூலம் வீடுபேறு (மோட்சம்) அடைய முடியுமென்றும் கூறினார்.அவரை அனைத்து தரப்பு மக்களும்,சமூகத்தின் கடைநிலையில் இருந்தவர்கள் உட்பட,பின்பற்றினர்.வருணாசிரம முறையை விலக்கி புதிய நான்கு நிலைகளை உருவாக்கினார்;ஆண்துறவி (சாது),பெண்துறவி(சாத்வி),பொதுமகன் (ஷ்ராவிக்) மற்றும் பொதுமகள் (ஷ்ராவிக்).இதனை சதுர்வித ஜைன சங் என்று அழைக்கலாயினர்.
மகாவீரரின் பிரசங்கங்கள் அவரது உடனடி சீடர்களால் அகம் சூத்திரங்கள் என வாய்மொழியாக பாதுகாக்கப்பட்டன.காலப்போக்கில் பல அகம் சூத்திரங்கள் இழக்கப்பட்டும்,அழிக்கப்பட்டும்,மாற்றப்பட்டும் சிலவே மிஞ்சின. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் கழித்து இவை பனையோலைகளில் பதியப்பட்டன. சமணர்களின் ஒரு பிரிவினரான சுவேதம்பர்கள் இவற்றை அப்படியே உண்மையான போதனைகளாக ஏற்றுக் கொள்கின்றனர், ஆயின் மற்றொரு பிரிவினராகிய திகம்பரர்கள் இதனை ஓர் உசாத்துணையளவிலேயே ஏற்கின்றனர்.
சமண சமயம் மகாவீரரின் காலத்திற்கு முன்னரும் கடைபிடிக்கப்பட்டது. மகாவீரரின் போதனைகள் அவரது முன்னோரின் போதனைகளை பின்பற்றியதே. எனவே மகாவீரர் ஓர் நிகழ் மதத்தின் சீர்திருத்தவாதியே தவிர புதிய சமயத்தை உருவாக்கியவர் அல்லர். இவரது குருவான பரசுவந்த் தீர்த்தங்கரரின் வழிகளைப் பின்பற்றியவர்.ஆயினும் தமது காலத்திற்கேற்ப சமண மத கொள்கைகளை சீர்திருத்தம் செய்தார்.
மகாவீரரின் நிர்வாணத்திற்குப் பிறகு சில நூற்றாண்டுகளில் சமண சமயம் சடங்குகள் மற்றும் பிற குழப்பங்களை உட்கொள்ள துவங்கியது. சில விமரிசகர்கள் மகாவீரரையும் பிற தீர்த்தங்கரர்களையும் இந்து மத கடவுளர் போன்று வழிபட துவங்கியதாக கூறுகின்றனர்.
சமண சமயத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய மாபெரும் ஜைன மதத்துறவி மகாவீரர் ஆவார். மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் ‘நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்’ என்ற போதனையை போதித்தவர். ஜீனர் (வென்றவர்), மாமனிதர், ஞானப்புத்திரர், அதிவீரர் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
அவருடைய போதனைகளும், தத்துவங்களும் இன்றும் உலகமுழுவதும் அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகப் போற்றப்படுகிறது. தன்னுடைய 32 வயதிலேயே மனித வாழ்க்கையின் உனையை உலகத்திற்கு எடுத்துரைத்த ‘வர்த்தமானரை’ நினைவு கூறும் வகையில், உலகெங்கும் உள்ள ஜைனர்கள் அவருடைய பிறந்த நாளான ஏப்ரல் 2 ஆம் தேதியை, ஒவ்வொரு வருடமும் ‘மகாவீரர் ஜெயந்தியாக’ கொண்டாடுகின்றனர்.
சிறுவயதிலேயே ஆன்மீகத்தில் ஈடுபாடுகொண்டு இல்லறவாழ்வினைத் துறந்து, துறவறம் மேற்கொண்ட மகாவீரரின் வாழ்க்கை வரலாறு மற்றும் போதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு : கி.மு. 599
இடம் : குண்டா, வைசாலி, பீகார் மாநிலம், இந்தியா
பணி : மத குரு
இறப்பு : கி. மு. 527
நாட்டுரிமை : இந்தியன்
பிறப்பு
‘வர்த்தமானர்’ என்ற இயற்பெயர்கொண்ட “மகாவீரர்” கி.மு. 599 வருடம், இந்தியாவின் பீகார் மாநிலம் வைசாலிக்கு அருகிலுள்ள “குண்டா” என்ற இடத்தில் சித்தாத்தர் என்பவருக்கும், திரிசாலாவுக்கும் மகனாக ஒரு அரசக் குடும்பத்தில் பிறந்தார். இவருக்குப் பெற்றோர்கள் இட்டப் பெயர் “வர்த்தமானர்” ஆகும்.
ஆரம்ப வாழ்க்கை
அரசக் குடும்பத்தில் பிறந்ததால், மிகவும் செல்வாக்காக வளர்க்கப்பட்டார். இருப்பினும் அச்சிறுவயதிலே ஆன்மீகநாட்டம் கொண்டவராகவும், தியானத்திலும், தன்னறிவதிலும் அதிக ஈடுபாடு கொண்டவராக விளங்கினார்.
பின்னர் யசோதரை என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, இல்லறவாழ்க்கையை நடத்தி வந்தார். சமணத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக விளங்கிய அவர், பிறகு இல்லற வாழ்விலிருந்து விலகி, தன்னுடைய முப்பதாவது வயதில் அரச வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையைத் துறந்து துறவறம் மேற்கொண்டார்.
மகாவீரரின் ஆன்மீகப் பயணம்
மனித வாழ்க்கையின் அர்த்தம் தேடி, சுமார் பனிரெண்டு ஆண்டுகள் தியானம் மற்றும் ஆன்மீகத் தேடலில் ஈடுபட்ட மகாவீரர் அவர்கள், “சாலா” என்னும் மரத்தடியில் ஞானம் பெற்றார். அதிலிருந்து அவர் “மகாவீரர்” என அழைக்கப்பட்டார்.
மகாவீரர் என்றால், ‘பெரும்வீரர்’ என்று பொருள் ஆகும். தான் கண்ட உண்மைகளை உலகத்திற்கு எடுத்துரைக்க விரும்பிய மகாவீரர், இந்தியா முழுவதும் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு, தாம் அறிந்த உண்மைகளை மக்களுக்கு போதித்தார்.
வெறும் கால்களில், துணிகள் ஏதும் இன்றி, அவர் போதித்த போதனைகளைக் கேட்க அனைத்துத்தரப்பு மக்களும் திரண்டது மட்டுமல்லாமல், சமண சமயம் இந்தியாவெங்கும் தீவிரமாக பரவத்தொடங்கியது.
இதனால், சமண மத குருமார்கள் வரிசையில் மகாவீரர் இருபத்தி நான்காவது தீர்த்தங்கரராகப் போற்றப்பட்டார். இவரே சமண சமயத்தில் தோன்றிய கடைசி தீர்த்தங்கரும் ஆவார்.
மகாவீரரின் போதனைகள்
இருபத்திநான்கு தீர்த்தங்கரர்களில் கடைசி தீர்த்தங்கரர் என சமணர்களால் போற்றப்படும் மகாவீரரின் போதனைகள், அன்பையும், மனிதநேயத்தையும், அகிம்சையையும் போதிக்கும் உன்னத கோட்பாடுகளாக விளங்கியது.
மகாவீரர், ‘ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஓர் ஆத்மா உண்டென்றும், அது, தனது நல்ல அல்லது கெடுதல் செயல்களின் விளைவாக “கர்மா” என்னும் வினைப் பயன்களை அடைய நேரிடும்’ என போதித்தார்.
இதிலிருந்து விடுபட, மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் ‘நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்’ போன்றவற்றை கடைப்பிடித்தால், ‘சித்த நிலையை அடையலாம்’ எனவும் போதித்தார்.
மேலும், ‘எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காமல் இருத்தல், உண்மையை மட்டும் பேசுதல், திருடாமை, பாலுணர்வு இன்பம் துய்காதிருத்தல், பணம் பொருள் சொத்துகள் மீது ஆசை கொள்ளாமல் இருத்தல்’ என ஐந்து பண்புகளும் ஜைன மதத்தின் உறுதிமொழிகளாக விளங்கின.
உண்மையை சொல்லப்போனால் மகாவீரர் அகிம்சையை தன்னுடைய கொள்கையாக போதித்த மாபெரும் சீர்த்திருத்தவாதியாக போற்றப்படுகிறார்.
இறப்பு
அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகாட்ட வேண்டும், பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமையும், கொல்லாமையுமே அறநெறி எனக் காட்டி அகிம்சை வழியையும், அன்பு வழியையும் மக்களுக்கு உணர்த்தி, சமண சமயத்தின் திருவுருவமாகவே வாழ்ந்த மகாவீரர் கி. மு. 527ல் பீகாரிலுள்ள “பாவா” என்னும் இடத்தில் தன்னுடைய 72வது வயதில் காலமானார்.
மகாவீரர் வெளிப்படுத்தியது:
இருவகை ஆன்மாக்கள் உலகில் உண்டு.
1, விடுதலையான ஆன்மாக்கள், பூமி, நீர், தீ, காற்று, செடிகொடி, ஆகியவை அசையாத இனத்தை சார்ந்த தொரு உணர்வை மட்டும் பெற்ற ஆன்மாக்கள்.
2, அசையும் திறன் கொண்ட, புலன் உணர்வுகளை கொண்ட புழு, எறும்பு, பூச்சி, பறவை, விலங்கு, மனிதர்கள் இவைகள் இரண்டாவது வகையாகும்.
முன் பிறப்புகளில் ஏற்ப்பட்ட கர்மாவின் விளைவாகவே ஓர் ஆன்மாவுக்கு இன்பமோ, துன்பமோ உண்டாகிறது.
ஓர் ஆன்மாவுக்கு எல்லையில்லாத உணர்வு, எல்லையற்ற அறிவு, ஆற்றல், ஆனந்தம் ஆகியவைகள் உண்டு.
ஆனால் கர்மா இவற்றை கட்டுப்படுத்துகிறது. கர்மாவைப்பொறுத்து ஆன்மா சில வண்ணங்களை பெறுகிறது. இது விருப்பு, வெறுப்பு,அன்பு, கோபம்,ஆகியவற்றை பொறுத்து அமைகிறது.
பழைய கர்மாவை முழுவதும் அழித்து,புதிய கர்மாவை உண்டாக்கிகொள்ளாத நிலையில் ஆன்மா விடுதலை பெறும்.ஆனால் இந்நிலையை அடைய பல பிறப்புகள் எடுக்க வேண்டும்.
கர்ம விடுதலை பெறும் ஆன்மாவின் பயணம் பதினான்கு நிலைகளில் விளக்கப்பட்டு உள்ளது. ( இதை புரிந்து கொள்ள சரியான பார்வை, சரியான அறிவு, சரியான நடத்தை அறிவுறுத்தப்படுகிறது)
1, ஆன்மா முழு கர்மாவின் கட்டுப்பாட்டில் உள்ளதால் சரி, தவறு பற்றி அறிய முடியாமல், அவதியுற்று உலகின் நிகழ்சிகளால் அதிருப்தி அடைகிறது.
2, சில பிறவிகளை எடுத்து சில அறிவீனங்களை விலக்கிக்கொள்கிறது.
3, அறிவுக்கும், ஐயத்திற்கும் இடையே ஊசலாடுகிறது.
4, ஐயத்தை நீக்கிககொள்கிறது. ஆனால், கர்மாவின் பிடியிலிருந்து முழுவதும் விலக முடிவதில்லை. அதே சமயம், ஐந்து நல்ல பண்புகளை ஆன்மா பெறுகிறது.
5, சரியான நடத்தையின் அவசியத்தை உணர்ந்து, பன்னிரண்டு உறுதிகளை எடுத்துக்கொள்வதால் கர்மாவுக்கு எதிராக போராடும் ஆற்றல் வாய்க்கிறது. ( இறை வணக்கம், குரு சேவை, வேதம் ஓதுதல், புலனடக்கம், தவம், தருமம் செய்தல் , இவைகளை நித்தம் தொடர்ந்து சாதகன்செய்து வருகிறான்.)
6, சில வேட்கைகள் அழிக்கப்படுகின்றன.
7, இப்போது கோபம் அழிக்கப்படுகிறது.
8, நடத்தை தூய்மையாகி, உறுதிகள் கடை பிடிக்கப்பட்டு இதயம் இன்பமடைகிறது.
9, கர்வம் வெற்றி கொள்ளப்பட்டு, ஆண், பெண், என்ற பால் வேறுபாடு அகன்று, முழு நேர தியானத்தில் ஈடுபடுகிறான்.
10, எல்லாவித புலன் இன்ப நாட்டங்களும், விலகுகின்றன. உலகியல் இலட்சியங்களும், இன்ப, துன்பங்களும் இந்நிலையில் கடந்து விடுகின்றன.
11, பேராசையை கடந்து அடுத்த நிலைக்கு செல்கிறான்.
12, எந்த வித ஆசையோ, உலகியல் பாதிப்போ ஏற்ப்படுவதில்லை.
13, ஞானத்தை பெற்று எல்லையற்ற ஆனந்தத்தை பெறுகிறான். இந்நிலை ஜீவன் முக்தி என்று அழைக்கப்படுகிறது.
14, முழு கர்மாவும் அழிந்து முக்தி அடைகிறான்.
குறிப்பு :
இறைநிலை பற்றிய கோட்பாட்டை விளக்குவதில் அர்த்தம் இல்லை என்று மகாவீரர் கருதினார்.
மனிதர்களுக்கு தேவையானது துன்பங்களிலிருந்து, கர்ம வினைகளிலிருந்து விடுபடுவதாகும். எல்லா ஜீவன்களுக்கும் இதுவே இறுதி நோக்கமாகும்.
ஆகவே அதற்க்குண்டான மார்க்கத்தை கண்டறிந்து செயல்படுவது அவசியம். அதை விட்டு, இறைவனைப்பற்றிய பிரதாபங்கள் அவசியமற்றது. அதில் உண்மையும் இல்லை. என்று மகாவீரர் அறிந்துள்ளார்.
மகாவீரர் பொன்மொழிகள்:-
* ஜீவன் கர்மங்களை உருவாக்குவதில் சுதந்திரமாகச் செயல்படுகிறது. ஆனால், அந்தக் கர்மங்கள் செயல்பட வரும் போது ஜீவன் அந்தக் கர்மங்களுக்கு அடிமையாகி விடுகிறது. உதாரணமாக, ஒருவன் மரத்தில் ஏறும் போது பிறர் உதவியின்றி தானாக ஏறிவிடுகிறான். ஆனால், அவன் தவறிக் கீழே விழும் போது பிறர் உதவியை நாட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
* கஷ்டம், கஷ்டம்! அறிவிலியான நான் நற்பாதையை அறியாத வரையில் கொடிய சம்சாரக் கட்டில் நெடுங்காலம் சுற்றி அலைந்தேன். இது என் அறியாமையாகும்.
* பித்த ஜூரம் உள்ளவனுக்கு இனிப்பும் கசப்பாக இருப்பது போன்று, தீயகாட்சி உடையவனுக்கு அறம் பிடிப்பதில்லை. ஏனென்றால், தீயகாட்சி உடையவனுடைய நோக்கம் நேர்மைக்கு எதிராக இருப்பதால் அவன் அறத்தை ஏற்பதில்லை.
* தீயகாட்சி உடையவனிடம் கோபம் முதலிய குற்றங்கள் மிகுதியாக நிறைந்திருக்கின்றன.ஆதலால், அவன் ஜீவன் – உடல் ஆகிய இரண்டையும் வேறுபாடின்றி ஒன்றாகக் கருதுகிறான். அவன் பேதைமை உள்ளவனாவான். (ஜீவன் அதாவது ஆத்மா வேறு;உடல் வேறு என்று உணர்வது விவேகியின் செயலாகும்)
* விருப்பும் வெறுப்பும் கர்மத்திற்கு ஆணி வேர். கர்மம் மோகத்தால் (ஆசையால்) உண்டாகிறது. அது பிறப்புக்கும் இறப்புக்கும் மூல காரணமாகும். பிறப்பதும் இறப்பதும் துன்பத்திற்கு அடிப்படை காரணம் என்று பெரியோர்களால் சொல்லப்பட்டிருக்கிறது.
* வலிமையுள்ள கொடிய எதிரி செய்யாததை விருப்பு – வெறுப்பாகிய குற்றம் செய்துவிடுகிறது.
* இந்த உலகில் பிறப்பு, இறப்பு, முதுமை ஆகியவற்றால் துன்பப்படும் ஜீவனுக்கு சுகமே கிடையாது. எனவே, துன்பமில்லாத முக்தியே ஏற்றது.
* பற்றின்மையை ஏற்படுத்தும் செயல்களைச் செய்ய வேண்டும். பற்றின்மை உலக துன்பத்திலிருந்து விடுதலை பெற்றுத் தருகிறது. பற்றோ எண்ணற்ற காலம் வரை துன்பக் கடலில் உழலச் செய்கிறது.
* முக்தி பெறுவதற்குரிய வழியாக இருப்பது ஐம்புலனடக்கம். ஐம்புலன்களை அடக்குவதன் மூலம், மனதால் ஏற்படும் குற்றங்களை நாம் ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
* அறம் சிறந்த மங்கலப் பொருளாகும். கொல்லாமை, ஒழுக்கம் ஆகியவை அறத்தின் இலட்சணம் ஆகும். எவருடைய மனம் எப்போதும் அறத்தில் ஈடுபாடு கொண்டிருக்கிறதோ, அந்தத் தூயவர்களைத் தேவர்களும் வணங்குகிறார்கள்.
* பொருள்களில் இயற்கைப் பண்பே அறமாகும். அது பொறுமை முதலியவற்றின் அடிப்படையில் பத்து வகை பிரிவுகளைக் கொண்டது. நற்காட்சி, நல்ல ஞானம், நல்லொழுக்கம், ஜீவ தயை (கருணை) ஆகியவை சேர்ந்தது அறம் எனப்படும்.
* முற்றிலும் பொறுமை, நேர்மை, உண்மை, தூய்மை, கருணை, மாசற்ற ஒழுக்கம், தூயதவம், பற்றின்மை, ஒரு சிறிதும் ஆசைப்படாமல் இருத்தல், இடைவிடாத ஆன்ம ஈடுபாடு ஆகிய இந்தப் பத்தும் ஒரு வகையில் அறம் எனப்படும்.
* தேவர்கள், மனிதர்கள், விலங்குகள் ஆகியவர்களால் கொடிய துன்பங்கள் ஏற்படும் போது கோபம் கொள்ளாமல் அமைதியாகப் பொறுத்துக் கொள்வதுதான் உத்தம லட்சணம் என்ற குறைவற்ற முழுமையான பொறுமையாகும்.