மராட்டிய மன்னர் வீரசிவாஜியில் பெரிதும் நேசிக்கப்பட்டவர் அவரது குரு ராமதாசர்!!!
ஒருமுறை அவரைத்தேடி சிவாஜி சென்ற போது அவரைக்கண்டுபிடிக்க மிகவும் சிரமப்பட்டார்.
ஒரு இடத்தில் நிற்காமல் செல்லும் ராமதாசரை காடு,மேடு,மலைகளில் பயணம் செய்து கண்டுபிடித்த போது என்னைப்பார்க்க ஏன் இவ்வளவு சிரமப்பட்டாய், உன் நாட்டிலேயே ஒருவர் இருக்கிறார் அவர் பெயர் துக்காராம்,நீ அவரைப்பார்த்தாலே போதும் என்னைப்பார்த்து தரிசித்ததற்கு சமானம் என்று சொல்லியிருக்கிறார்.
தன் குரு சொன்ன துக்காராம் பற்றி விசாரித்த போது பண்டரிநாதர் மீது பக்தி பாடல்கள் பாடிவருபவர், மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர் என்று சொல்லியிருக்கின்றனர்.
உடனே சிவாஜி பொன்,பொருள்,நவரத்தினம் என்று நிறைய செல்வங்களோடு அவரைப்பார்க்க போயிருக்கிறார்.
பக்தர்களோடு சேர்ந்து பக்தி பாட்டு பாடிக்கொண்டிருந்த துக்காராம், இவரையோ இவர் கொண்டுவந்த செல்வங்களையோ கண்டுகொள்ளவேயில்லை.
பஜனை முடிந்த பிறகு துக்காராமை அணுகிய சிவாஜி தான் கொண்டுவந்த செல்வங்களை ஏற்றுக்கொண்டு தன்னை ஆசீர்வாதிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
எது உண்மையான சந்தோஷம்:
“சிவாஜி, நீ கொண்டு வந்த பொன்,பொருள் மற்றும் பதினெட்டு கிராமங்களை எழுதித் தந்த சாசனம் ஆகியன எதுவும் எனக்கு சந்தோஷத்தைத் தரப் போவதில்லை. உண்மையில் எனக்கு சந்தோஷத்தை தர வேண்டும் என்று நினைத்தாயானால் துளசி மணிமாலையை அணிந்துகொள். ஏகாதசி விரதம் இரு. விட்டல நாம ஜபம் செய்” என்று கூறுகிறார்
அதன்பிறகு துக்காராமின் தீவீர பக்தராகிவிட்ட சிவாஜி அவர் புகழ் பரப்புவதில் முனைப்புடன் இருந்தார்.
அந்த அளவிற்கு எளிமையாக வாழ்ந்த பக்த துக்காராமின் பாடல்களும் எளிமையானவை.அந்த பாடல்கள் அபங்கம் என்றழைக்கப்பெறுகிறது.
அபங்கம் என்றால் குற்றமில்லாதது. பங்கம் இல்லாதது.ஆனந்தமானது.சிறு சிறு பாடல்கள் மூலம் இறைவனுடன் பேசுதல் என்றும் இதற்கு பொருள் சொல்லலாம்.
ஒவ்வொரு அபங்கப் பாடலுக்கும் இத்தனை வரிகள்தான் இருக்க வேண்டும் என்று வரைமுறை எதுவும் கிடையாது. எவ்வளவு நீளமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
சந்தங்கள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும். அபங்கங்களை பாடுவதற்கு சங்கீத ஞானம் வேண்டும் என்பது இல்லை. மஹாராஷ்டிர மாநிலத்தில் எளிய தொழிலாளிகளும், இந்தப் பாடல்களை பாடித் திளைக்கின்றனர். இவர்களுக்கு வேதமோ சாஸ்திரமோ ஏன் சிறிய ஸ்லோகங்களோ கூட தெரியவேண்டாம்.
இந்தப் பாடல்கள் பலவும் மூர்த்தியான விட்டல் பற்றியே அமைந்துள்ளன. நம்மை அவன் வழிநடத்திச் செல்வான் என்ற நம்பிக்கையே இதன் அடிநாதம்.