Home » சிறுகதைகள் » பேசும் தெய்வம்!!!
பேசும் தெய்வம்!!!

பேசும் தெய்வம்!!!

குருஜாம்பக்ஷத்திர கிராமத்தில் குர்யாஜி என்ற பக்தர் இருந்தார். அவரது மனைவி ராணுபாய். இந்த கிராமம் கங்கைக்கரையில் அமைந்திருந்தது. குர்யாஜி சூரிய நமஸ்காரம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒருநாள் சூரியன் நேரில் வந்து காட்சியளித்து, உனக்கு இருபிள்ளைகள் பிறப்பார்கள். ராமன் அம்சத்தோடு ஒருவனும், அனுமன் அம்சத்தோடு ஒருவனும் பிறப்பார்கள், என்று கூறி மறைந்தார்.  முதல் பிள்ளைக்கு கங்காதரன் என்று பெயரிட்டனர். இரண்டாவது குழந்தையை ராணுபாய் பெற்றெடுத்த போது, சூரியன் வாக்களித்தபடி அனுமனின் அம்சமாக சிறுவாலுடன் இருந்தான்.

அவன் சற்று வளர்ந்ததும் வால் மறைந்தது. அவனுக்கு நாராயணன் என பெயரிட்டனர். மனோதிடமான அவன் குறும்புமிக்கவனாகவும் இருந்தான். மரம், சுவர் எதுவானாலும் ஏறி குதிப்பான். மகனின் செயல்களை எண்ணி ராணுபாய் கவலைப்பட்டாள்.

ஒருநாள் ராணுபாய், நாராயணா! கண்டபடி இரவு நேரத்தில் தெருவில் அலையாதே! நண்பர்களுடன் சேர்ந்து குறும்பு செய்யாமல் சமர்த்தாக இரு!, என்றாள்.  சரிம்மா! என்றுதலையாட்டினான் நாராயணன்.

ஆனால், அதன் பிறகு அவன் அம்மாவின் கண்ணில் படவே இல்லை. குழந்தைகள் யாருக்கும் அவன்இருக்குமிடம் தெரியவில்லை. எங்கு தேடியும் காணவில்லை. பெற்றோர் மனம் பதறியது. கணவருடன் தானியம் சேமிக்கும் களஞ்சியத்திற்கு ராணுபாய் சென்றாள். அங்கே பதுங்கி யிருந்த நாராயணனைக் கண்டாள்.  நாராயணா! இங்கு என்ன செய்கிறாய்? என்று சப்தமாக கேட்டாள்.

அவர்களிடம், நேற்று இரவு அம்மா என்னை வெளியே போகாமல் ஓரிடத்தில் இரு என்றதால், இங்கு வந்தேன். அது என்ன தப்பா?. என்று கேட்டான் அப்பாவியாக. பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள். முதலில் கங்காதரனுக்கு பெண் பார்த்து திருமணத்தை நடத்தினர்.

அடுத்து நாராயணனுக்கு பெண்பார்த்து முகூர்த்த நாளையும் குறித்தனர். ஆனால், நாராயணனுக்கு திருமணத்தில் விருப்பமில்லை.  கல்யாண நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. நாராயணன் வீட்டை விட்டு ஓடி விட்டான். கல்யாண வீடு களேபரமானது. மூத்தவன் கங்காதரன் பெற்றோரிடம், அனுமனின் அம்சம் கொண்டவன் தம்பி நாராயணன் என்பதை அறிந்தும் திருமணம் செய்து வைக்க நினைத்தது தவறு.

அவன் காட்டுக்குச் சென்று தவவாழ்வில் ஈடுபட்டிருப்பான் என்று எனக்குத் தோன்றுகிறது, என்றார்.  குர்யாஜியும், ராணுபாயும் அதையே உண்மை என்று நம்பி மன அமைதியானார்கள்.  அவர்கள் நினைத்தது போலவே, நாராயணன் காட்டில் தவத்தில் அமர்ந்தான். நாட்கள் பல கடந்தன. ஆனால், பயன் ஏதும் கிடைக்கவில்லை.

இனி வாழ்வதில் அர்த்தமில்லை என்று முடிவெடுத்து இறப்பதற்கு ஆயத்தமானான். கொடிகளைப் பறித்து மரக்கிளையில் கட்டிக் கொண்டு,  ஜெய் ராமதாச ஆஞ்சநேயா! தாயும் தந்தையுமாக உன்னை எண்ணி தவத்தில் ஆழ்ந்தேனே! இந்த பிள்ளைக்காக அன்போடு ஓடிவர வேண்டும்! என்று அழுதான்.

கருணாமூர்த்தியான ஆஞ்சநேயர் அவர் முன் தோன்றி, நாராயணனின் கண்ணீரைத் துடைத்து, கட்டித் தழுவிக் கொண்டார். கவலை வேண்டாம். உடனே வா! நாம் இருவரும் ஸ்ரீராமச்சந்திர பிரபுவிடம் செல்லலாம், என்று பஞ்சவடிக்கு அழைத்துச் சென்றார்.  பஞ்சவடி ராமர் கோயிலில் இரவு பஜனை நடந்து கொண்டிருந்தது. அதில் ஆஞ்சநேயரும், நாராயணனும் கலந்து கொண்டனர்.

பூஜை முடிந்ததும் எல்லோரும் கோயிலை விட்டுக் கிளம்பினர். அப்போது ஆஞ்சநேயர், கருணாமூர்த்தியே! ரகுராமா! என் பக்தன் நாராயணனுக்கு குருவாக இருந்து உபதேசம் செய்யுங்கள்!, என்று வேண்டிக் கொண்டார்.  ராமரும் நேரில் தோன்றி தன் திருக்கரத்தை நாராயணனின் தலையில் வைத்து மந்திர தீட்சை அளித்தார் இனிமேல் உன்னை ராமதாஸ் என்று அனைவரும் அழைப்பார்கள்.

உலக மக்கள் பலரை ராமபக்தியில் செலுத்தும் பாக்கியம் பெறுவாய்! நான் காட்டிற்குச் சென்றபோது கட்டிய வஸ்திரத்தையும் உனக்கு அளிக்கிறேன், என்றார். மந்திர உபதேசம், வஸ்திர தீட்சையை வழங்கினார். ஆஞ்சநேயரும் தன் பங்கிற்கு ராமதாசருக்கு சரணாகதி மந்திரத்தை உபதேசித்தார்.

என் பக்தனான நீ எப்போது நினைத்தாலும், அப்போதெல்லாம் உன் முன் தோன்றுவேன்! என்று வாக்களித்துவிட்டு மறைந்தார். ராமதாசர் தினமும் ஜயரகுவீரா என்று ஜபித்தபடியே சாலைகளில் செல்வார். பக்தர்கள் கொடுக்கும் தானியத்தை கல்லில் வைத்து அரைத்து மாவாக்கி நெருப்பு மூட்டி இரண்டு ரொட்டி சுட்டு சாப்பிடுவார்.

ஒருநாள் மராட்டிய மாவீரர் சிவாஜி, வேட்டையாடுவதற்காக காட்டிற்கு குதிரையில் வந்தார். அப்போது அவரைக் கண்டு பயந்த மிருகங்கள் எல்லாம் ஒரே நோக்கி ஓடின. அங்கு சிவாஜி ஒரு ஆச்சர்யத்தைக் கண்டார். மரத்தடியில் அமர்ந்திருந்த ராமதாசரிடம், அவை அடைக்கலமாகி நின்றன. அவர் முன்னிலையில் புலியும், மானும் கூட அன்பு காட்டி நிற்பதைக் கண்ட சிவாஜிக்கு அவர் சக்தி வாய்ந்த மகான் என்பது புரிந்தது.

கண்ணை மூடியிருந்த ராமதாசர் தியானத்தில் இருந்தார். எனவே சிவாஜி, அவரை எழுப்பாமல் அரண்மனைக்கு வந்துவிட்டார். ஆனால், அவர் மனம் மட்டும் அந்த மகானையே சிந்தித்துக் கொண்டிருந்தது. மறுநாளும் காட்டிற்குப் புறப்பட்டார். காட்டுப் பாதையில் ராமதாசர் எதிரே வந்து கொண்டிருந்தார். சிவாஜியின் கண்களில் கண்ணீர் பெருகியது.

காந்தத்தைக் கண்ட இரும்பு போல ராமதாசரால் கவரப்பட்ட சிவாஜி, கரம் கூப்பி வணங்கினார்.  ராமதாசர் சிவாஜியிடம், முதலில் நீராடி வா என்று கட்டளையிட்டார்.   சிவாஜி காட்டாற்றில் நீராடி அங்கிருந்த மலர்களைப் பறித்து மாலை தொடுத்தார்.

ஒரு தொன்னையில் தண்ணீர் எடுத்துக் கொண்டார்.  ராமதாசரை வலம் வந்து முன் பக்தியுடன் சமர்ப்பித்தார். நீரால் ராமதாசரின் பாதங்களை கழுவினார்.  சுவாமீ! தங்களின்  திருப்பாதங்களை என் சிரசில் வைத்து அனுகிரஹம் செய்யுங்கள்!, என்று வேண்டினர்.

ராமதாசரும் சிவாஜிக்கு அருள்புரிந்துவிட்டு, எல்லா உயிர்கள் மீதும் அன்பு காட்டு. சாதுக்களை போற்று. ஏகாதசி விரதத்தை தவறாமல் கடைபிடி. தினமும் ஆஞ்சநேயரை வணங்கு! என்று கட்டளையிட்டார்.  மன்னர் வீரசிவாஜி  ராமதாசரை குருவாக ஏற்றுக் கொண்ட செய்தி நாடெங்கும்  ரவியது. மக்களும் அவரைத் தரிசிக்க கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர்.

பக்தியை பரப்பிய ராமதாசர் தன்னுடைய அந்திமகாலம் நெருங்குவதை அறிந்து பக்தர்களுக்குத் தெரிவித்தார். நாடெங்குமிருந்து அவருடைய பக்தர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். ராமதாசர் நீராடி துளசிமணி மாலை அணிந்து கொண்டு பத்மாசனமிட்டு ராமதியானத்தில் அமர்ந்தார். ராமர் அவர் முன் காட்சியளித்தார். ஜயரகுவீரா என்று ஜபித்த படியே அவர் உயிர் பிரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top