பெற்றோர்களை நாம் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
முதல் வகைப் பெற்றோர்கபெற்றோர்க: ‘நாங்கள் சொல்வதுதான் சரி’
இந்த மாதிரியான அதிகாரப் போக்குக் கொண்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பல சட்ட திட்டங்களை வகுக்கிறார்கள். கீழ்படிந்து நடக்கவில்லை என்றால் தண்டனைதான். குழந்தைக்கு ஏன் சட்டதிட்டங்கள், ஏன் அவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று புரிய வைக்க இவர்கள் முயலுவதே இல்லை.
நான் சொல்வதை நீ கேட்கவேண்டும்; கேள்வி கேட்காமல் என்ற நிலைக்கு குழந்தைகள் தள்ளப் படுகிறார்கள். பெற்றோரிடம் பயம் வளருகிறதே தவிர,குழந்தைக்கும் பெற்றோர்களுக்கும் இடையே பாசம் பரிவு, புரிந்துணர்வு என்பது இல்லாமல் போகிறது. பெற்றோர்களுக்குக் கீழ் படிந்து நடந்தாலும், உணர்வு பூர்வமான உறவு இங்கு மலருவதில்லை.
இரண்டாவது வகை: தழைந்து போகும் பெற்றோர்கள்:
இந்த வகைப் பெற்றோர்கள் குழந்தைக்கு தாங்கள் நண்பர்களாக இருக்க விரும்புகிறார்கள். ஒழுங்கு, சட்டதிட்டங்கள் இவை பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. குழந்தைகளை போஷித்து, அவர்களுடன் நிறைய பேசி நிறைய விளையாடி – என்று இருப்பவர்கள்.
இது ஒருவிதமான சுதந்திரமான உறவு என்றாலும், இந்தக் குழந்தைகள் பள்ளியில் சுமாராகவே படிக்கிறார்கள்; அதேபோல சுய ஒழுக்கம், சுயக் கட்டுப்பாடு என்பதும் இவர்களிடம் குறைவாகவே இருக்கிறது.
மூன்றாவது வகை பெற்றோர்கள்:
அதிக சட்டதிட்டங்கள் போடாமல், அதிக இடமும் கொடுக்காமல் இரண்டுக்கும் நடுவில் இருப்பவர்களே இந்த மூன்றாவது வகை பெற்றோர்கள்.
சட்டதிட்டங்கள் போடப்பட்டாலும், அவை குழந்தைகளுடன் பேசி கலந்து ஆலோசித்து போடப்படுபவை.
உதாரணம்: ‘பள்ளியிலிருந்து வந்தவுடன் ஒரு மணி நேரம் விளையாடு. பிறகு வந்து உன் பாடங்களை முடித்துவிட வேண்டும்’
ஒரு வேலை சொன்னபடி குழந்தையால் பாடங்களை முடிக்க முடியவில்லை என்றாலும் பெற்றோர்கள் கோபிப்பது இல்லை. கூடவே உட்கார்ந்து குழந்தை படிக்க உதவுகிறார்கள்.
இந்தவகைப் பெற்றோர்கள் கண்டிப்புடன் தங்கள் அன்பையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுக்கிறார்கள்.
குழந்தையின் நிலைமையை புரிந்து கொள்ளுகிறார்கள். தாங்கள் போடும் சட்டதிட்டங்கள் குழந்தையின் சுதந்திரத்தை முடக்காமல் பார்த்துக் கொள்ளுகிறார்கள்.
குழந்தையின் எல்லை என்ன என்பதைப் புரிந்து, குழந்தை சொல்வதை காது கொடுத்துக் கேட்கத் தயாராக இருக்கிறார்கள்.
சுயக் கட்டுப்பாடு என்பது குழந்தையிடம் இயல்பாக வளர உதவுகிறார்கள். தங்கள் வேலையை தாங்களாகவே முடிக்க சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்கிறார்கள்.
குழந்தையின் ஒழுக்கம் நன்னடத்தை இவற்றிற்கு குழந்தையே பொறுப்பாக இருக்கும்படி செய்கிறார்கள். இதனால் குழந்தைகள் மன ஆரோக்கியத்துடன், பெற்றோர்களிடம் புரிந்துணர்வும், பாசமும் கொண்டு நடந்து கொள்ளுகிறார்கள்.
இப்படித்தான் பெற்றோர்கள் இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு விதிமுறையும் கிடையாது. ஆனால் பெற்றோர்கள் குழந்தையை நடத்தும் விதம் குழந்தைக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்குமானால் இருவருமே பயன் பெறுவார்கள்.