வினை(karma) வலியது ……
மகான் ஒருவரைப் பார்க்கச் சென்ற ஒருவர் தனது எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லும்படி மகானிடம் கேட்டார்.
சற்று நேரம் அவரைக் கவனித்த மகான் அவரைப் பார்த்து ‘இந்த வாரத்தில்; நீர் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும்’ ஏன்றார்.
‘ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்? நான் எந்தப் பிரச்சினைகளுக்கும் போவதில்லையே!’ என்று வந்தவர் கேட்க….’அதுபற்றி எனக்கு தெரியாது. ஆனால் இந்த வாரத்தில் உமது கர்மாவை அனுபவிக்க வேண்டுமென்று இருக்கிறது’ என்றார் மகான்.
வந்தவரும் குழப்பத்துடன் வீடு திரும்பினார். ‘நான் மிகவும் கவனமாக இருந்து பார்ப்போம்! மகானின் வாக்கு எப்படி வேலை செய்கிறது என்று பார்த்து விடுவோம்’ என்று நினைத்தவர்….வேலைக்கு ஒரு வாரம் லீவு போட்டுவிட்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு ஜன்னலருகே அமர்ந்து கொண்டார்.
சதா இறைவனையே பிரார்த்தித்து எதுவுமே நிகழ்ந்து விடக்கூடாது என்ற வேண்டிக்கொண்டார். ஒரு வாரம் கழிந்தது. ஒன்றும் நடக்கவில்லை.
திரும்ப அந்த மகானிடம் சென்றார். மகானைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே (நடந்ததைச் சொல்லி) ‘நீங்கள் கூறியது பொய்!!! நான் எந்தச் சிறைத் தண்டனைக்கும் போகவில்லையே!!! என்றார்.
மகானும் அவரைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே ‘ஒரு வாரமாக சிறையில் இருப்பது போன்றுதானே நீயும் உனது வீட்டைப் பூட்டிக்கொண்டு, சிறைக் கம்பிக்குப் பின்னால் இருப்பது போன்று ஜன்னலருகே அமர்ந்திருந்தாயே!! அதுவும் ஒரு வகையில் சிறை வாழ்க்கை தானே! செய்த வினையை யாரென்றாலும் அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.
ஆனாலும் இறைவனை வணங்குவதால் அவை சற்று நலிவடையுமே தவிர அதை மாற்றியமைக்க முடியாது.
அதேபோன்று நீயும் இறைவனை வணங்கியதால், கடுங்காவல் சிறைக்குப் பதிலாக வீட்டிலே ஒரு சிறிய சிறை வாசம் அனுபவித்தாய்’ என்றார். (நற்சிந்தனை)
புறத்தே இருக்கின்ற சிறைக்குள்ளே அகப்பட்டுவிடக் கூடாதென்று அச்சப்படும் மானுடா! ‘நான்’ என்னும் மிகப் பெரிய சிறையினுள் உன்னை அடைத்துக் கொண்டுள்ளாயே! அந்தச் சிறையிலிருந்து வெளியே வா! மனிதப்பிறவியின் உண்மையான விடுதலை அதுதான்.