‘நான் நிரந்தரமானவன்
அழிவதில்லை…
எந்த நிலையிலும் எனக்கு
மரணமில்லை…’
தான் இறக்கும் சில மாதங்களுக்கு முன் தனக்கு தானே இரங்கட்பா எழுதிய கவிஞர் கண்ணதாசனின் வரிகள் இவை. காலத்தால் அழியாத ‘கிளாசிக்’ பாடல்களின் ‘கிங் மேக்கர்’.
‘கவியரசர்’ என்றதும் குழந்தை கூட கூறிவிடும் பெயர் தான் கண்ணதாசன். 1924 ஜூன் 24ல் சிறுகூடல்பட்டியில் பிறந்து பட்டி தொட்டியெல்லாம் தன் பாடல் வரிகளை பாய்ச்சிய அந்த காவிய நாயகனுக்கு இறைவன் அளித்த வாழ்நாள் 54 ஆண்டுகள் மட்டுமே.
‘மாட்டு வண்டி போகாத ஊரிலும் உன் பாட்டு வண்டி போகுதடா…’ என பாராட்டும் அளவிற்கு சினிமா பாடல்களை தன் எழுத்து ஏணியில் ஏற்றி ஊர் முழுதும் உலா வந்த அந்த காவிய
புத்தகம் பிறந்த தினம் இன்று.
வருடங்கள் கடந்தாலும் நினைவிலும், செவியிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் கவியரசரின் நினைவுகளை அவருடன் நெருக்கமானவர்கள் இதோ பகிர்ந்து கொள்கிறார்கள்….
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
விசாலாட்சி, கண்ணதாசன் மகள் :
அப்பாவிற்கு தெய்வ பக்தி அதிகம். அவர் சந்தித்த அனுபவங்களை தான் பாடலாய் தந்தார். பிசியான பாடலாசியராக இருந்தாலும் குடும்பத்தார் மீது அலாதி பிரியம் கொண்டவர். எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களை வைத்து நிறைய பாடல்கள் எழுதியுள்ளார்.
என் அம்மாவுக்காக ‘தாைழயாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடை நடந்து வாழை இலை போல வந்த பொன்னம்மா…’ போன்ற பாடல்களை எழுதினார். ‘பூ முடிப்பாள் இந்த பூங்குழலி… புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி…’ பாடலை என் அக்காக்கள் திருமணத்திலும், என் திருமணத்திலும் பாடச் சொல்லி அருகில் நின்று அவரும் பாடுவார்.
பாசமலர் பாடலில் வரும் ‘நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம்தென்றலே..’ என்ற வரிகள் அவருக்கு மிகவும் பிடிக்கும். மறைந்தாலும் கண்ணதாசனின் மகள் என்ற பெருமையை என் தந்தை அளித்திருக்கிறார். பொன்னம்மாள் கண்ணதாசன் அறக்கட்டளை மூலம் அவர் நினைவாக உதவிகள் செய்து வருகிறோம்.
இரண்டு மனம் வேண்டும்
சொ.சொ.மீ.சுந்தரம், கண்ணதாசனின் கவியரங்க நண்பர்:
மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றினேன். 1976ல் மதுரையில் நடந்த கவியரங்கத்தில் என் பேச்சை கேட்டு பாராட்டிய கண்ணதாசன், சொ.சொ.மீ., சுந்தரம் என்பது ‘சொல்லுக்கு சொல் மீறும் சுந்தரம்’ என பாராட்டினார்.
கவியரங்கங்களில் தொடர்ந்து எனக்கு வாய்ப்பளித்தார். கண்ணன் மீது அவருக்கு கொள்ளை பிரியம். எங்கு வந்தாலும் நன்கு உறங்குவது அவருக்கு மிகவும் பிடிக்கும். புதுச்சேரி கம்பன் கழகம் நடத்திய கவியரங்கத்திற்கு சென்ற போது 9.30க்கு தொடங்க வேண்டிய நிகழ்ச்சிக்கு 9.15 வரை அவர் வரவில்லை.
அதன் செயலாளர் அருணகிரி, தமிழாசிரியர் ஒருவரை அழைத்து கண்ணதாசனை அழைத்து வரும் வரை இறைவணக்கம் பாடுமாறு கூறிச் சென்றார். ஒரு விடுதியில் உறங்கிக் கொண்டிருந்த கண்ணதாசனை கண்டுபிடித்து எழுப்பிய போது ‘துாங்கிவிட்டேன் அருணகிரி… வாருங்கள் செல்லலாம்’ என முகத்தை துடைத்துவிட்டு ஒரு ‘கப்’ காபியோடு மேடையேறியவர் தன் பேச்சில் அத்தனை பேரையும் கட்டிப்போட்டார்.
அந்த கூட்டத்தில் தனக்கு பிடித்த இரு பாடல்களை அவர் பாடினார். ‘இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்… நினைத்து வாழ ஒன்று, மறந்து வாழ ஒன்று…’ என்று பாடி முடிக்க அங்குள்ள அனைவர் கண்ணிலும் கண்ணீர்.’பார்த்தேன் நினைத்தேன் பக்கம் வர துடித்தேன்… உனைத் தேன் என நான் நினைத்தேன்…’ என தொடங்கி ‘முடித்தேன் ஒரு துளி விடாமல் குடித்தேன்…’ என மற்றொரு பாடலை பாடி அவர்களின் சோகத்தை போக்கினார்.
மது அருந்தும் போது தான் கண்ணதாசன் பாடல் எழுதுவார் என பலரும் நினைக்கின்றனர். அது தவறு. மது இருக்கும் போது அவரிடம் பாடல் வராது, பாடல் வரும் போது அவரிடம் மது இருக்காது.
‘மருதமலை மாமணியே முருகைய்யா… தேவரின் குலம் காக்கும் வேலய்யா…’ என்ற பாடலை எழுதியதற்காக சின்னப்பதேவர் ‘பிளாங் செக்’ ஒன்றை கண்ணதாசனுக்கு வழங்கினார்.
வறுமையில் இருந்தாலும் தன் உதவியாளர் கண்ணப்பனை அழைத்த கண்ணதாசன், ‘இந்த காசோலையை கண்ணாடி போட்டு மாட்டு; இது தான் என் பெருமைக்கு எடுத்துக்காட்டு’ என்று கூறினார்.
‘நான் இந்திய ஜனாதிபதி போல் சம்பாதிக்கிறேன்… அதே நேரத்தில் இந்தியா போல் கடன் வாங்குகிறேன்…’ எனக்கூறுவார்.
திரைப்பட பாடல்களை மட்டும் வைத்து கண்ணதாசனை மதிப்பிடக்கூடாது. அவை அல்லாது கவியரங்கம், இசை, பேச்சு என கண்ணதாசனின் திறமைகளை அருகில் இருந்த பார்த்தவர்களின் நானும் ஒருவன்.
காலம் ஒருநாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்
கவிஞர் முத்துலிங்கம்:
மதுரை மாணிக்கத் தமிழை, கோடம்பாக்கத்திற்கு கூட்டி வந்த பெருமை கண்ணதாசனுக்கு உண்டு. இலக்கியப் புலவர்கள் இலக்கியத்தில் இயம்பாமல் விட்ட நுணுக்கமான கருத்துக்களை, சினிமாவில் தீட்டியவர். இலக்கிய சாற்றை பிழிந்து, திரைப்பாடலில் தந்தவர்.
பாவமன்னிப்பில், ‘சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்…,’ துவங்கும் பாடலில், ‘காலம் ஒருநாள் மாறும், நம் கவலைகள் யாவும் தீரும்,’ என்ற சரணம், எனது நம்பிக்கையை உயர்த்திய வரிகள்.
‘மயக்கமா, தயக்கமா? மனதிலே குழப்பமா?…, வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு,’- கண்ணதாசனின் பாடல் வரிகள் கவிஞர் வாலிக்கு நம்பிக்கையூட்டி, திரைப்பாடல்கள் எழுதவைத்தவை.
கண்ணதாசன் கவிதை மட்டுமின்றி, உரைநடையில் புதிய நடையாக சிறு வாக்கியங்களாக சீர்திருத்தி எழுதியது அகவற்பா போல் இருக்கும். ‘வனவாசம்’ சிறந்த முன்னுதாரணம். அதற்கு ஈடான உரைநடை இலக்கியம், இலக்கிய உலகில் இல்லை.
எம்.ஜி.ஆருக்கு ‘மீனவ நண்பன்’ படத்தில், ‘தங்கத்தில் முகமெடுத்து…,’பாடல் எழுதினேன். ‘நன்றாக இருந்தது’ என கண்ணதாசன் பாராட்டினார்.முதன்முதலாக நான், கண்ணதாசன், கங்கை அமரன் இணைந்து ‘கிழக்கே போகும் ரயில்’ படத்திற்கு பாடல் எழுதினோம்.
‘மாஞ்சோலை கிளிதானோ, மான்தானோ…,’ பாடலை நானும், ‘கோயில் மணி ஓசைதனை கேட்டதாரோ…,’ பாடலை கண்ணதாசன், ‘பூவரசம் பூ பூத்தாச்சு…’பாடலை கங்கை அமரனும் எழுதினோம்.
கண்ணதாசனிடம் ஆர்.ஆர்.பிக்சர்ஸ் அதிபர் டி.ஆர்.ராமண்ணா, ‘நீங்கள் இயற்றிய மாஞ்சோலை கிளிதானோ’ பாடல் நன்றாக உள்ளது. இதுபோல், எனது படத்திற்கு ஒரு பாடல் எழுத வேண்டும்,’ என்றாராம்.
கண்ணதாசன்,’அதை நான் இயற்றவில்லை. முத்துலிங்கம் எழுதியது. அவருக்கு, சந்த நடையில் நன்றாக எழுதவரும். அவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்,’ என்றாராம்.
எத்தனை கவிஞர்களுக்கு இப்படி பெருந்தன்மை இருக்கும்.அனைத்திலும் கண்ணதாசன் வெற்றி பெற்றாலும், அவர் தோற்ற இடம் அரசியல்.
நெப்போலியனுக்கு ‘வாட்டர்லுா’ போல, கண்ணதாசனுக்கு அரசியல்தான் ‘வாட்டர்லுா’. ஒரு கவிஞன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன்னுதாரணம் கண்ணதாசன்.
ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்கும் அவரே முன்னுதாரணம்.
இருந்தாலும்,
‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை,’
என்ற அவரது பாடல் வரிகள் அவருக்குப் பொருந்தும்.