Home » படித்ததில் பிடித்தது » பிரதோஷ வழிபாடு!!!
பிரதோஷ வழிபாடு!!!

பிரதோஷ வழிபாடு!!!

பிரதோச வழிபாட்டினைக்
கடைப்பிடித்து சகல நலனும் பெறுவோமாக

பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.

பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். இந்த இடத்தில் “அனைவரும்” என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும். அந்த நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது
ஐதீகம்.

எனவே, அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

அதற்கடுத்தப்படியாக வாகனத்திற்கு மரியாதை தரக்கூடிய வழிபாடு பிரதோஷம் ஆகும். சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு.

நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.

மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.

எனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது. எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.

காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை நூல் கூறுகிறது.

எனவே, பிரதோஷ காலத்தில் ஈசனை வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும். குறிப்பாக சாயும்காலம் (மாலை) வழிபாடு மேற்கொள்வது கூடுதல் பலனைத் தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top