பித்தராக திரிந்த சித்தர்: சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்
திருவாவூரில் பிறந்தால் முக்தி,காசியில் இறந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. அகங்காரத்தை அழித்துவிட்டால் நம்முள்ளே ஆன்ம ஒலி பிரகாசிக்கும் என்ற தத்துவத்திற்கு விளக்கமாக ஓங்கி நிற்கிறது அண்ணாமலை எனும் ஞான மலை. இப்புனித மண்ணில் நடமாடிய சித்தர்கள், ஞானிகள் தான் எத்தனை எத்தனை! சிலர் மோன தவத்தில் முழ்கியிருப்பர், சிலர் பித்தரைப்போல அலைந்து திரிவர். இவர்களின் நடவடிக்கைகள்தான் வேறு. அவர்தம் ஞான செல்வம் ஒன்றேதான். இப்படி பித்தரைப்போல திரிந்த ஆத்ம ஞானி தான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள்.
காஞ்சி ஸ்ரீ காமாட்சியை ஆராதிப்பதர்காக சில உபாசனா முறைகளை தோற்றுவித்த ஸ்ரீ ஆதிசங்கரர், அவற்றை சரிவர நடத்தி வருவதற்காக நர்மதா நதிக்கரையிலிருந்து முப்பது தேவி உபாசகர்களை அவர்களது குடும்பத்தோடு காஞ்சிபுரத்தில் குடியமர்த்தினார். அவர்கள் ஸ்ரீ காமாட்சி தேவியை குல தெய்வமாகக்கொண்டு ஸ்ரீவித்யை எனும் உபாசனா மார்கத்தைப்பரப்பி வந்தனர். அவர்களுக்கு காமகோடி வம்சம் எனப்பெயர் ஏற்பட்டது. இந்த வம்சத்தில் வந்தவர்கள் வேத,சாஸ்திரங்களில் மிகச்சிறந்த பண்டிதர்கள்.
காலப்போக்கில் கலியின் கொடுமையால் இந்தப்பரம்பரை சிறிது சிறிதாக மறைந்து, மூன்று நான்கு குடும்பங்களே எஞ்சி நின்றன. இவர்கள் தங்கள் முன்னோர் வாழ்ந்து காட்டிய முறையில் மனம் தளராமல் பிடிப்புடன் வாழ்ந்தனர். இவர்களில் பலர் ஜோதிட சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்று விளங்கியதால் ஸ்ரீ வரதராஜர் கோயிலில் இவர்களுக்கு பஞ்சாங்கம் வாசிக்கும் உரிமையும் அதற்க்கான மானியமும் அளிக்கப்பட்டிருந்தன.
இந்த மரபில் வந்த வரதராஜன்-மரகதம் தம்பதிக்கு, ஸ்ரீ காமாட்சியின் அருளால் 1890 ம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ம் நாள் சனிக்கிழமை ஹஸ்த நட்சத்திரம் கூடிய மங்கள நாளில் கண்ணன் போன்ற ஓர் ஆண் மகவு உதித்தது. குல தெய்வமான வேங்கடாச்சலப்பதிக்கு உரிய அவரது திருநாமமான சேஷாத்திரி என்ற பெயர் அக்குழந்தைக்கு சூட்டப்பட்டது
பராசக்தி அளித்த ஞானப்பிள்ளை என்பதால் சிறு வயதிலேயே சேஷாத்திரி தெய்வ வழிபாடும் இறை பக்தியும் இயற்கையாகவே வந்து விட்டது. தாய் மரகதம் அக்குழந்தைக்கு நான்கு வயது நிரம்பும்முன்னரே கிருஷ்ணாஷ்டகம், ராமாஷ்டகம், மூகபஞ்சசதி, குருஸ்துதி போன்ற தோத்திரங்களை கற்றுக்கொடுத்தாள்
தங்கக்கை
ஒரு நாள் தாயின் இடுப்பில் அமர்ந்து குழந்தை சேஷாத்திரி வரதராஜபெருமாள் ஆலயத்திற்கு சென்றாள் திருவிழா என்பதால் தெரு முழுக்க கடைகள் முளைத்திருந்தன. ஒரு வியாபாரி வெண்கலத்தால் ஆன தவழும் கிருஷ்ணர் பொம்மைகளை விற்றுக்கொண்டிருந்தான். அதைப்பார்த்த சேஷாத்திரி தனக்கு ஒரு கிருஷ்ணர் பொம்மை வேண்டும் என அடம் பிடித்தார்.அன்னை அதில் விருப்பமில்லாததால் தொடர்ந்து நடந்தாள். குழந்தையின் அழகில் மயங்கிய அந்த வியாபாரி அம்மா! குழந்தை கிருஷ்ணனைப்போல் இருக்கு.நீங்க காசு தர வேண்டாம். நானே ஒரு பொம்மை தருகிறேன். எடுத்துக்கொள்ளுங்கள் என்றான். உற்சாகமாக சேஷாத்திரி, தானே ஒரு பொம்மையை எடுத்துக்கொண்டார்.
அவர் கை பட்டதுதான் தாமதம். வியாபாரி கொண்டுவந்த அத்தனை பொம்மைகளும் விற்றுத்தீர்ந்தன! மறுநாள் கோயிலுக்கு சென்ற போது அந்த வியாபாரி, கண்களில் நீர் வழிய அந்த அன்னை காலில் விழுந்து கும்பிட்டபின் அம்மா, வழக்கமாக இங்கு நூறு பொம்மை கூட விற்காது. உங்க குழந்தை தொட்டதால் நேற்று ஆயிரம் பொம்மைகளும் விற்றுப்போச்சு என்று சொன்ன அவன் `இது தங்கக்கை, தங்கக்கை` என்று கூறியவாறு குழந்தையின் கைகளைப்பற்றி கண்களில் ஒற்றிக்கொண்டான். இது ஊர் முழுவதும் பரவி எல்லோரும் `தங்கக்கை சேஷாத்திரி` என்றே அழைக்க ஆரம்பித்தனர்.
ஏழாவது வயதில் சேஷாத்திரிக்கு உபநயனம் செய்து வைக்கப்பட்டது.வேத பாடசாலையில் சேர்ந்து வேத அத்யாயனம் செய்ததுடன் தர்க்கம், வியாகரணம் (இலக்கணம்) எல்லாம் பயின்றபின், தன பாட்டனாராகிய காமகோடி சாஸ்திரிகளிடம் மந்திர சாஸ்திரத்தையும் கற்றுணர்ந்தார். இந்த சூழ்நிலையில் சேஷாத்திரியின் தந்தை வரதராஜர் திடீரென காலமாகி விட்டார்.
சந்நியாச யோகம்
கணவனை இழந்த மரகதம், மகனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினாள் கணவரின் சகோதரி வெங்கலக்ஷ்மியின்மகள் காகினியை, சேஷாத்திரிக்கு மணமுடிக்க விருப்பம்கொண்டு, இதுபற்றி தன மைத்துனரும் சிறந்த ஜோதிடருமான ராமசாமியிடம் பேசினாள். ஆனால் ராமசாமி ஜோதிடர் சொன்ன தகவல் அவளை ஆற்றோன்னாத்துக்கத்தில் ஆழ்த்திவிட்டது. சேஷாத்திரியின் ஜாதகத்தில் சந்நியாச யோகம் இருக்கிறது. திருமண பந்தம் அவனுக்கு கிடையவே கிடையாது என்று ஒரு குண்டை தூக்கிப்போட்டார் ஜோதிடர். அதிலிருந்து வாழ்க்கையே வெறுத்துப்போன மரகதம், பிடிவாதமாக உபவாசம் இருந்து உடலை வருத்தினாள் இறுதியில் ஆதிசங்கரரின் பஜகோவிந்தத்தை உச்சரித்தவாறே, அவளது உயிர் பிரிந்தது. பெற்றவளையும் பறிகொடுத்த சேஷாத்திரி, எப்போதும் பூஜை அறையே கதியாக கிடந்தார். காலை சந்தியாவந்தனம் முடிந்து பூஜை அறைக்குள் புகுந்துவிட்டால் கதவை தாழிட்டுக்கொண்டு பகல் இரண்டு மணிக்குத்தான் வெளியே வருவார். தன சித்தப்பா ராமசாமியின் பராமரிப்பில் இருந்த அவர் வீட்டில் தங்காமல் கோயில், குளம் என சுற்றத்தொடங்கினார். சில சமயம் நாட்கணக்கில் வீட்டுக்கு வரவே மாட்டார். அழுக்குத்துணி, எண்ணை காணாத தலைமுடி, தாடி வளர்ந்த முகம், நெற்றியில் பளீரென துலங்கும் குங்குமம் இதுவே பால சேஷாத்திரியின் வடிவம். அவர் முகத்தில் அலாதியான தேஜஸ் ஒளி விடத்தொடங்கியது.
தெருவில் யாராவது பெண்கள் போனால் அவர்கள் காலில் விழுந்து வணங்குவார். சூரியனையே பார்த்துக்கொண்டு நிர்ப்பார். அடக்கடி நீராடுவார் வாயில் எதோ மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே இருப்பார். கேட்டால் கர்மம் தொலைய வேண்டாமா? அதற்காகப்பண்ணுகிறேன் என்பார். `காமோ கார்ஷீத் மன்யுர கார்ஷீத் -காமக்கரோதி நாஹம் கரோமி ` என்ற மந்திரத்தை ஒரு லட்சம் தடவை ஜபித்து விட்டதாக சொல்லுவார்.
மயான ஜபம்
இதெல்லாம் போதாதென்று, இரவு நேரத்தில் தனியாக எங்கோ சென்று வந்தார் எங்கே செல்கிறார் என்றே புரியவில்லை. விடிந்ததும் தான் வீடு திரும்புவார். பத்து நாட்கள் கழித்து அதற்க்கு விடை கிடைத்தது. வெளியில் தொல்லை அதிகமாக இருந்ததால் இரவு முழுவதும் மயானத்தில் அமர்ந்து துர்கா சூக்தம் ஜபம் செய்கிறார் என்று தெரிந்தது.. சிறிய தந்தை இதுபற்றி ஆச்சேபித்தபோது `மயானம் ருத்திர பூமி அங்கு ஜபம் செய்தால் ஈஸ்வரன் சீக்கிரம் பலன் தருவார். வெளியில் ஆயிரம் தடவை ஜபித்துப்பெரும் பலனை மயானத்தில் ஒரே தரம் ஜபித்து பெற்று விடலாம் `என பதிலளித்தார் சேஷாத்திரி.
இந்த நிலையில் சேஷாத்திரி ஸ்ரீ பாலாஜி சுவாமிகள் என்பவரிடம் சந்நியாச தீட்சை பெற்றுக்கொண்டார். அவரது தீட்சா நாமம் என்னவென்றே தெரியவில்லை. இன்று வரை அவர் சேஷாத்திரி சுவாமிகள் என்றே அழைக்கப்படுகிறார். அதன் பின் வீட்டுக்கே செல்லாமல், ஜீவன் முக்தராக ஞானப்பித்தராக, தன்னை உணர்ந்து பிரும்மானந்தக்கடலில் நீந்தி திளைத்தவராய் சுற்றி அலைந்து கொண்டிருந்தார்.
மாயமாக மறைந்தார்
அன்று சேஷாத்திரியின் தந்தையாருக்கு திதி. இதற்காக, அவரது சிறிய தந்தை எங்கெங்கோ தேடி தெருவில் எங்கோ திரிந்துகொண்டிருந்த சேஷாத்திரியை கண்டுபிடித்து, நான்கைந்து பேர் உதவியுடன் அவரை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு தூக்கி வந்தார். `நான் சந்நியாசி கர்மம் எல்லாம் தொலைத்தவன் எனக்கு திதி கொடுக்கும் கடமை கிடையாது` என சேஷாத்திரி கூறியது யார் காதிலும் விழவில்லை. அவர் ஓடி விடாமல் தடுக்க ஒரு அறைக்குள் அடைத்து வெளியே பூட்டிவிட்டனர்.
மதியம் சுமார் இரண்டு மணி இருக்கும். சிரார்த்தம் முடிந்து, வலம் வந்து மூதாதையர் ஆசியை பெற வேண்டும். அதற்காக சேஷாத்திரியை அழைத்துவர அவரது சிறியதந்தை, அறைக்கதவை திறந்தார். வைதீகர்களும் ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தனர். அறைக்குள் நுழைந்த சிறியதந்தை, சேஷாத்திரியை தேடினார். உள்ளே அவரைக்காணவில்லை! பூட்டிய அறையிலிருந்து யோகசித்தர் சேஷாத்திரி மாயமாக மறைந்து விட்டார். இச்செய்தி ஒரே நொடியில் ஊரெங்கும் பரவி விட்டது. அந்த அற்புத நிகழ்ச்சியை பற்றி அனைவரும் அலுக்காமல் பேசினர்.
அதன்பின் சேஷாத்திரி காஞ்சி வாசத்தை முடித்துக்கொண்டார். கால் நடையாகவே பல ஊர்கள் வழியாக, நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலையை வந்தடைந்தார்.