நிம்மதியாக இருக்க முடியவில்லையா?
பலருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது.
வாழ்க்கையில் நிம்மதி என்பது எங்கே இருக்கிறது. நம்மால் நிம்மதியாக இருக்கவே முடியவில்லையே என்று எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பதுண்டு. மனதில் எழும் இந்த ஆதங்கம் சாதாரண ஏழை முதல் கோடீஸ்வரர்கள் வரை அனைவரும் இதற்கு விதிவிலக்கல்ல.
இதே எண்ணம் தொடருமானால் வாழ்வில் விரக்தியும், சலிப்புமே மிஞ்சும். ‘எதுவாக இருந்தாலும் வாழ்க்கையை நேசித்து வாழ்ந்து விடு’ என்றான் ஒரு தத்துவ ஞானி. வாழ்வில் நிம்மதி எப்போது கிடைக்கும்?
இதற்கான விடையை சீனதத்துவ ஞானியான லா வோ த் ஸ வின் ஒரு கதை மூலம் பார்க்கலாம்.
‘என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை’ என்றான் ஒரு அரசன் ஞானியிடம்.
‘உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா’ என்று ஞானி கேட்டார்.
‘என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை’ என்றான்.
‘அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு’ என்றார் ஞானி.
‘எடுத்துக் கொள்ளுங்கள்’என்றான் மன்னன்.
‘நீ என்ன செய்வாய்’ என்றார் ஞானி.
‘நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்’ என்றான் அரசன்.
‘எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய். உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்.’ என்றார். சரி என்றான் மன்னன்.
ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனை காண வந்தார். அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான். அவரை வரவேற்று உபசரித்தவன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான்.
‘அது கிடக்கட்டும்’ என்ற ஞானி ‘நீ இப்போது எப்படி இருக்கிறாய்’ என்று கேட்டார்.
‘நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன்’
‘முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?’
‘இல்லை’
‘அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்? இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்?’ விழித்தான் அரசன். ஞானி சொன்னார்.
‘அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய். இப்போது இது எனதில்லை. நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய். அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே. நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும். இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் எனதல்ல.. (இது) எனக்கு அளிக்கப்பட்டது. இந்த உயிர் எனதல்ல. எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும். இதே மனநிலையுடன் நீ இந்த நாட்டை நீயே ஆட்சி செய்’ என்று கூறி விடைபெற்றார் ஞானி.
ஐம்புலன்களையும் இடைவிடாமல் நெறிப்படுத்துபவன் மனம் ஒருமித்தவன் ஆகிறான். அவனிடம் சலனங்கள் ஏற்படுவதில்லை. மூலாதாரத்தில் ஒருமுகப்படுத்தி மென்மையான சக்தியை எழுப்புகிறான் அவன். விருப்பு, வெறுப்பு அற்ற அவனது மனம் சிறு குழந்தையினுடையது போன்றது. இயேசுவிடம் சீடர்கள் கேட்கின்றனர். ‘விண்ணரசு யாருக்கு உரியது. நாங்கள் விண்ணுலகில் நுழைய என்ன செய்ய வேண்டும் என்று.’
‘ஒன்றும் செய்ய வேண்டாம். ‘ என்கிறார் இயேசுநாதர். ஒரு குழந்தையை சுட்டிக்காட்டி ‘உங்கள் மனம் இந்த குழந்தையினுடையது போல் ஆகி விட்டால் விண்ணரசு உங்களுடையது’ என்றார்.
குழந்தை அனைத்தையும் நம்பும். அனைத்தையும் ஏற்கும். கண்டதை அப்படியே சொல்லும். குழந்தையிடம் அறியாமை உண்டு. நாம் அறியாமையில் இருந்து அறிந்த நிலைக்கு வந்தோம். பின்பு அதையும் கடந்து விடல் வேண்டும். அதுவே ஞானத்திற்கு மேலான நிலை.
ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகிறார் ‘காலில் ஒரு முள் தைத்தால் மற்றொரு முள்ளால் அதனை அப்புறப்படுத்துவோம். அந்த முள் இருந்த இடத்தில் இந்த முள்ளை வைப்பதில்லை. இரண்டையும் தூக்கி தூரப் போடுவோம். அது போல் அஞ்ஞானம் என்ற முள்ளை ஞானத்தால் எடு. பிறகு இரண்டையுமே தூக்கி எறிந்து விடு’ என்று.
அத்தகையவன் செயல்படுவான். ஆனால், அவன் செயல்களால் அவனுக்கு எந்த பலனும் இருக்காது. அவன் தகுதி அவனை தலைமையிடத்தில் வைக்கும். ஆனால் அவன் ஆதிக்கம் செலுத்த மாட்டான். அவனிடம் நேசித்தல் என்பது மட்டும் இருக்கும்.
ஆழ்ந்த உள்ளுணர்வினால் அவன் அனைத்து மாசுகளும் நீங்கியவனாக இருப்பான். ‘இத்தகையவன் தான் சுவர்க்கத்தின் கதவுகளை மூடித்திறக்கும் தாய் பறவை போன்றவன்’ என்று லா வோத் ஸ கூறுகிறார். நான்கு திக்குகளையும் ஊடுருவும் பிரகாசம் அவனிடம் உண்டு. உள்ளும், புறமும் ஊடுருவிய ஒரு வெட்டவெளியை உணர்ந்தவன் அவன். இதையே சிவவாக்கியரும் சொல்கிறார். அல்லல் வாசல் ஒன்பதும் அறுத்தடைத்த வாசலும் சொல்லு வாசல் ஓரைந்தும் சொம்மி விம்மி நின்றதும் நல்ல வாசலைத் திறந்து ஞான வாசல் ஊடுபோய் எல்லை வாசல் கண்டவர் இனி பிறப்பதில்லையே.
ஆழ்ந்த தியானம் அமைதியை கொடுக்கும். அது புதிய கதவுகளை திறக்கும்.