அண்ணாமலையே கதி : சேஷாத்திரி சுவாமிகள்
திருவண்ணாமலையை வந்தடைந்த சேஷாத்திரி சுவாமிகள் அதன்பின் அங்கிருந்து எங்கும் செல்லவில்லை. அங்கேயே பல இடங்களில் பித்தனைப்போல சுற்றிக்கொண்டிருந்தார். அழுக்கு வேட்டி.சவரம் செய்யப்படாத முகம். கிடைத்ததை சாப்பிடுவார். சாப்பிடாமலும் இருப்பார். யாராவது புதிய வேட்டி கட்டி விட்டால், அடுத்த ஒரு மணியில் அது கந்தயாகி விட்டிருக்கும்.
குளக்கரை, குப்பைமேடு, எதோ ஒரு வீட்டின் திண்ணை, இப்படி எங்கு வேண்டுமானாலும் படுப்பார். பெரும்பாலும் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கம்பத்து இளையனார் கோயிலில் தான் அமர்ந்து இருப்பார் இதுதவிர, அன்ன சத்திரம், சடைச்சி ஆச்சியம்மாள் வீடு, சாதுமடம், சின்ன குருக்கள் வீடு, ஓயாமடம் போன்ற இடங்களிலும் அடிக்கடி தென்படுவார் 1889 ம் ஆண்டு தனது 19 ம் வயதில் அண்ணாமலைக்கு வந்த சுவாமிகள் நாற்ப்பது ஆண்டு காலம் அந்த புனித மண்ணில் `பைத்தியம்` போல உலவிவிட்டு தன பூத உடலை நீத்தார்.
அவர் அண்ணாமலையில் நிகழ்த்திய அற்புதங்கள் பலப்பல தீராத வியாதிகளும் மகானின் பார்வை பட்டதுமே பறந்தோடின. வாய் பேச முடியாதவர்கள் பேசினர். எமன் வாயில் சிக்கியவர்களைக்கூட மகான் மீட்டு இருக்கிறார்
ஸ்ரீ ரமணருடன் தொடர்பு
ஸ்ரீ ரமண பகவான் பாலப்பருவத்தில் அண்ணாமலையார் ஆலயம் ஆயிரம் கால் மண்டபத்தில் பாதாள லிங்கம் அருகே ஆழ்ந்த சமாதியில் இருந்தபோது, சில விளையாட்டு சிறுவர்கள் அவர்மீது சிறு கற்களை வீசி தொந்தரவு கொடுத்தனர். அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த சேஷாத்திரி சுவாமிகள் சிறுவர்களை சத்தம் போட்டு விரட்டினார். அச்சமயம் அங்கு வந்த வெங்கடாசலம் என்பவர் சேஷாத்திரி சுவாமிகளை என்ன எது என்று விசாரித்த போது சுவாமிகள் `உள்ள போய் பாரு. சின்ன சாமி உட்கார்ந்து இருக்கு`என்று கூறியவாறே ஓடிவிட்டார்.
வெங்கடாசலம் உள்ளே எட்டிப்பார்த்தபோது அரை இருட்டில் ஒரு உருவம் அமர்ந்திருப்பதைக்கண்டு அலறி நிறைய பேர்களை அழைத்து வந்த போதுதான் மோனத்தவத்தில் இருந்த பகவான் ரமணரை வெளிஉலகம் கண்டுகொண்டது. சேஷாத்திரி அம்பாளின் மறு வடிவம் என்றால், அவரால் `சின்ன சுவாமி` என அழைக்கப்பட்ட ஸ்ரீ ரமணர் முருகப்பெருமானே என்றும் கொள்ளலாம். ஸ்ரீ ரமணரின் பக்தர்கள் தன்னிடம் வந்தால் அவர்களுக்கு மகிழ்ச்சியோடு உபதேசங்கள் செய்வார் சுவாமி.
பகவான் ரமண மகரிஷி
இந்த இரு `ஞான மலைகளும்` நேருக்குநேர் பெசிக்கொண்டவை வாசுதேவ சாஸ்திரி என்ற பக்தர் பார்க்கும் பாக்கியத்தைப்பெற்றார். விருபாக்ஷி குகையில் தங்கியிருந்தபோது ரமணரை ஒரு முறை சேஷாத்திரி சுவாமிகள் சந்திக்க வந்தார். ரமணரை சற்றுநேரம் உற்று நோக்கிய சுவாமிகள் அவரை சுட்டிக்காட்டி `இது என்ன நினைக்கிறது என்று தெரியவில்லையே` என்றார்.
ரமணர்தான் மௌனகுருவாயிற்றே! ஏதும் பேசாமல் இருந்தார். சேஷாத்திரி விடாமல் `அருணாச்சலேஸ்வரரை வணங்கினால் நற்கதி கிடைக்கும்` என்றார். ரமணர் தன மௌனத்தை கலைத்து `வணங்குகிறவன் யார்? வணங்கப்படுகிரவன் யார்?` என்று கேட்டார். சேஷாத்திரி பலமாக சிரித்துக்கொண்டே `அதுதானே சரியா புரியலே` என்றார். பிறகு ரமண பகவான் அத்வைத தத்வம் பற்றி ஒரு மணி நேரம் பேசினார். எல்லாவற்றையும் கேட்ட சேஷாத்திரி,`அது என்னமோ, இதெல்லாம் எனக்கு புரியவே இல்லை. எனக்கு பக்திதான் தெரியும்.
நான் சுவாமிக்கு நமஸ்காரம் பண்ட்றேன்` என்று சொல்லிவிட்டு அண்ணாமலை சிகரத்தை நோக்கி பதினைந்து முறை கீழே விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு போய்விட்டார்.
திருப்புகழ் சுவாமிகள்
அர்த்தநாரி என்ற இயற்பெயர் கொண்ட திருப்புகழ் சுவாமிகள் முருகன் அருள் நிரம்பப்பெற்றவர். அவர் தன வடநாட்டு யாத்திரையை முடித்துக்கொண்டு திருவண்ணாமலை வந்து ரமண மகரிஷிக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தார்.
ஒரு நாள் அவரை நோக்கிய ரமணர் `மலையிலிருந்து கீழே இறங்கி போங்கள்` என உத்தரவிட்டார். தான் என்ன தவறு செய்தோம் என்று கலங்கிய திருப்புகழ் சுவாமிகள் குருவின் கட்டளைக்குப்பணிந்து மலையை விட்டு கீழே இறங்கினார்.
மலை அடிவாரத்தில் ஒரு குட்டையில் படுத்திருந்த எருமை மாட்டை கட்டி அணைத்துக்கொண்டு சேஷாத்திரியும் படுத்திருந்தார். திருப்புகழ் சுவாமியை கண்டதும் ஓடிபோய் அவரை கட்டி தழுவினார் சேஷாத்திரி. கீழே அமர்ந்து அவரை தன்மடிமீது இருத்திக்கொண்டார். திருப்புகழ் சுவாமிகளை தன சீடராக ஏற்று சிவ மானச பூஜா என்ற சுலோகத்தை உபதேசமாக வழங்கினார். பின்னர் `நீ திருப்புகழுக்காகவே பிறந்தவன்.
அந்த மகா மந்திரமே போதும். நீ வள்ளி மலையில் வாசம் செய்துகொண்டிரு` என அருளினார முருகனின் அம்சமான ரமண பகவான் திருப்புகழைப்பரப்புவதர்காக பிறந்த வள்ளிமலை சுவாமிகளை சேஷாத்திரி சுவாமிகளிடம் அனுப்பி வைத்தது எத்தகயப்பொருத்தம்!
திருப்புகழ் சுவாமிகள்
சூட்சும திருஷ்ட்டி
சேஷாத்திரி சுவாமிகள் கண்ணிலிருந்து எதுவும் தப்ப முடியாது. நமக்கு புலப்படாத சூட்சும உருவங்கள்கூட அவருக்கு தெரியும். ஒரு முறை காஞ்சியில் சிறிய தந்தையோடு இருந்தபோது, சுவாமிகள் தன சிற்றப்பாவுக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டிருந்தார். திடீரென பாதியில் எண்ணெய் தேய்ப்பதை நிறுத்திவிட்டு முற்றத்தில் நின்று திறந்த வெளியில் ஆகாயத்தை அண்ணார்ந்து பார்த்தார். பிறகு எதையோ கைதட்டி தாளம் போட்டு கேட்டார்.
சிறிய தந்தை வியப்பு மேலிட `என்ன பார்த்தாய்? எதற்கு தாளம் போட்டாய்?` என்று கேட்டார். சுவாமிகள் `ஆகாயத்தில் கந்தர்வர்கள் பாடியவாறே செல்கிறார்கள். அவர்களைத்தான் பார்த்தேன்` என்றார். பைத்தியம் முற்றிவிட்டது என்று நினைத்த சிறிய தந்தை `அப்படியா? என்ன ராகத்தில் பாடினார்கள்?` எனக்கேட்டார் கிண்டலாக. சுவாமிகள் சற்றும் தயங்காமல் `பிலஹரி ராகம்` என்றார். தீவிர தவம் காரணமாக ஆகாயத்தில் நடமாடும் யக்ஷ, கந்தர்வர்களை கூட பார்க்கும் சக்தியை பெற்று இருந்தார் சுவாமிகள் என்பதற்கு இது ஒரு உதாரணம். மற்றொன்றும் உண்டு.
அண்ணாமலையில் சுவாமிகள் பித்தராக திரிந்துகொண்டிருந்த சமயம். ஒரு நாள் பகல் 11 மணி இருக்கும். சுவாமி திடீரென வான வெளியை நோக்கி `விட்டோபா போரானே! ஜோரா போரானே! ஆஹா! ஆஹா! எத்தனை ஜோதி!` என உரக்க கூவினார். அருகில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை.
ஒரு சிலர் என்ன சாமி சொன்றீங்க என்று கேட்டபோது சுவாமிகள் ஒரு திசையை சுட்டிக்காட்டி `அதோபார் விட்டோபா கணஜோரா போரான் பார்! நல்லா பார்!` என்று திரும்ப திரும்ப கூறினார். அனால் அவர்கள் பார்த்த போது சூரியன் தான் சுள் என்று முகத்தில் அடித்தது. எதோ சொல்கிறார் என மக்கள் கலைந்து சென்றனர். சற்று நேரத்தில் திருவண்ணாமலை அருகே உள்ள போளூரில் இருந்த ஸ்ரீ விட்டோபா சுவாமிகள் முக்தி அடைந்து விட்டார் என்ற தகவல் வந்து சேர்ந்தது.
புண்ணிய ஆத்மாக்கள். இறந்தபின் பிரும்மலோகம் செல்லும் அர்ச்சிராதி மார்கத்தை கூட பார்க்கும் சக்தி சேஷாத்திரி சுவாமிக்கு இருந்தது என்பது இதிலிருந்து தெரிகிறது.
சுவாமிகள் ஒல்லியான தேகத்துடன் இருந்தாலும் அவரது பலம் அசாத்தியமானது. ஒரே இடத்தில் பல மணி நேரம் எழும்பி எழும்பி குதித்துக்கொண்டிருப்பார். நாமெல்லாம் அப்படி செய்தால் கால் ஒடிந்து விடும் சிவப்பு எறும்புகள் கூட்டமாக செல்லும் இடத்தில் பல மணி நேரம் படுத்திருப்பார். ஒரு சமயம் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் நுழைந்து ஆசிட் கலந்த ஒரு மருந்தை பாட்டிலோடு குடித்துவிட்டார். கடும் விஷமாகிய அந்த மருந்த ஏதும் செய்யவில்லை!
பிறந்தவர் எவரும் இறக்கத்தானே வேண்டும்! எத்தகைய மகான் என்றாலும் இயற்கையின் இந்த நியதியை மீற இயலுமா? சேஷாத்திரி சுவாமிகளுக்கும் இறுதி நாள் நெருங்கியது. அவருக்கும் அது தெரியும்.
ஒரு நாள் காய்ச்சல் என்று படுத்தவர் பிறகு எழுந்திருக்கவே இல்லை. 1929 ம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ம் நாள் சேஷாத்திரி சுவாமிகள் தனது பூத உடலை நீத்தார். அவரது இறுதி சடங்கில் ரமண மகரிஷி கலந்து கொண்டது குறிப்பிட தக்கது.
சேஷாத்திரி சுவாமிகளின் அதிஷ்டானம் ரமணாஷ்ரமத்தை ஒட்டியே அமைந்துள்ளது. இங்கு பக்தர்கள் தங்க அனைத்து வசதிகளும் உள்ளன. சுவாமிகளின் உடல் மறைந்தாலும் ஆன்மா இன்றும் உயிர்ப்புடன் இருந்துகொண்டுதான் உள்ளது!
ஆதாரம்: `அபிநவ சுகபிரும்மம்` பிரும்மஸ்ரீ குழுமணி நாராயண சாஸ்திரிகள் எழுதிய `ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் சரித்திரம்`. இந்நூலாசிரியர் சுவாமிகள் வாழ்ந்தபோதே அவருடன் நெருங்கிப்பழகி, அவரது நடவடிக்கைகளை கவனிக்கும் பாக்கியம் பெற்றவர். ஸ்ரீ சுவாமிகள் விதேக முக்தி அடைந்தபோது சாஸ்திரியார் அருகில் இருந்தார்.