தேச பக்தி
திருவனந்தபுரத்தில் சுவாமிஜி தங்கியிருந்தபோது பேராசிரியர் சுந்தராம ஐயரின் மகன் ராமசாமி சாஸ்திரியிடம் தேசபக்திக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் சுவாமிஜி.
“….தேச பக்தி, தேச பக்தி என்கிறார்களே உண்மையில் அது என்ன? கண்மூடித் தனமான ஒரு நம்பிக்கையா? இல்லை.
நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதில் உள்ள பேரார்வம் தான் உண்மையில் தேசபக்தி.
பாரதம் முழுவதும் பார்த்துவிட்டேன். அறியாமையும், துன்பமும், ஒழுக்க சீர்குலைவுகளும் தான் நான் கண்டவை.
என் உள்ளம் பற்றியெரிகிறது. இந்தத் தீமைகளை வேரோடு களைய வேண்டும் என்று துடிக்கிறேன்.
“அவர்களின் தீவினை அது. அதனால் கஷ்டபடுகிறார்கள்” என்று கர்மம் பற்றி பேசுகிறார்கள். தயவு செய்து அப்படிப் பேசாதீர்கள். கஷ்டபடுவது அவர்களின் கர்மம் என்றால் அதிலிருந்து அவர்களை விடுவிப்பது நமது தர்மம்.
கடவுளைக் காண வேண்டுமானால் மனிதனுக்கு தொண்டு செய்யுங்கள். நாராயணனை அடைய வேண்டுமானால் பட்டினியில் வாடுகின்ற ஏழை நாராயணர்களுக்குச் சேவை செய்யுங்கள். அதுதான் உண்மையான தேச பக்தி.
சுவாமி அகண்டானந்தர் சுவாமிஜின் தேசபக்தியை வர்ணிக்கும்போது:-
” ….சுவாமிஜி பாரதத்தின் மீது கொண்ட அன்பு சாதாரண விஷயம் அல்ல. அது வெறும் தேசபக்தி (patriostism) அல்ல. அது தேசாத்மபோதம். சாதாரண மனிதர்களுக்கு இருப்பது “தேஹாத்மா போதம்”, அதாவது உடம்பைத் தானாக உணர்வது. சுவாமிஜிக்கு இருந்ததோ ‘தேசாத்மபோதம்’. அதாவது நாட்டையே தானாக உணர்வது.
நாட்டு மக்களின் சுகம், துக்கம், அவர்களின் கடந்த காலம், எதிர்காலம், நிகழ் காலம் என்பவை பற்றியே அவர் சிந்தித்தார்.
தேசாத்மா போதத்துடன் அவரது உணர்வு நின்று விடவில்லை. அது விச்வாத்ம போதமாக விரிந்தது. பாரத மக்களுக்காக மட்டுமல்ல. உலக உயிரினங்கள் அனைத்துடனும் தம்மை ஒன்று படுத்திக் கொண்டு அவர்களுக்காக கவலைப்பட்டார் அவர். அனைவருக்கும் முக்தி கிடைக்காமல் அவருக்கு முக்தியில்லை……”