Home » படித்ததில் பிடித்தது » ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 !!!
ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 !!!

ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 !!!

ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858

ராணி லட்சுமிபாய் அல்லது சான்சி இராணி (நவம்பர் 19, 1835– ஜூன் 17- 1858) வடமத்திய இந்தியாவின் ஜான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகிறவர்.

நவம்பர் 19, 1835-ல் வாரணாசியில் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த மௌரியபந்தர்- பகீரதிபாய் தம்பதியினருக்குப் பிறந்தவர் ஜான்சி இராணி. இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் மணிகர்ணிகா.

இவர் மனு எனவும் அழைக்கப்பட்டார். இவருக்கு நான்கு வயதாகும்போது பகீரதிபாய் இறந்து போனார். இவர் சிறு வயதிலேயே குதிரையேற்றமும் வாள் வீச்சும் கற்றுக் கொண்டார். மணிகர்ணிகாவின் தந்தையாகிய மௌரியபந்தர் பித்தூரிலுள்ள பேஷ்வா நீதிமன்றத்தில் வேலை செய்தார். பித்தூரின் பேஷ்வா மணிகர்ணிகாவைத் தனது சொந்த மகள் போல வளர்த்தார்.

சான்சியை ஆண்ட ராஜா கங்காதர ராவ் நெவல்கர் என்பவருக்கு 1842-ல் மணிகர்ணிகாவைத் திருமணம் செய்து வைத்தார் தந்தை. அதிலிருந்து, மணிகர்ணிகா இராணி இலட்சுமிபாய் என அழைக்கப்பட்டதுடன் ஜான்சியின் ராணியாகவும் பதவியேற்றார். 1851-ல் அவர்களுக்குப் பிறந்த மகனான தாமோதர் ராவ் நான்கு மாதங்களில் இறந்து போனான். தாமோதர் ராவின் இறப்பின் பின், ராஜா கங்காதர ராவ் நெவல்கரும் இராணி இலட்சுமிபாயும் ஆனந்த் ராவைத் தத்தெடுத்தனர்.

பின்னர், அக்குழந்தைக்குத் தாமோதர் ராவ் எனப் பெயர் சூட்டப்பட்டது. ஆனாலும் தனது மகனின் இழப்பின் துயரத்திலிருந்து மீளாத ராஜா கங்காதரராவ் நவம்பர் 21, 1853-ல் உடல்நலமிழந்து இறந்தார்.

மன்னர் கங்காதர ராவ் மறைந்த பின், வளர்ப்பு மகன் தாமோதர் ராவை ஆட்சியில் அமர்த்த எண்ணினார் ஜான்சி ராணி. ஆனால், அப்போதைய ஆங்கியேல ஆளுநர் டல்லவுசி, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் அவகாசியிலிக் கொள்கையின்படி, தத்துப்பிள்ளையை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ள மறுத்தார். ஒரு மன்னருக்கு நேரடி வாரிசு இல்லையென்றால், அந்த அரசு தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வந்த ஆங்கிலேயர்கள் ஜான்சி நாட்டைத் தமது ஆட்சிக்குட்படுத்த முடிவெடுத்தனர். ஆங்கிலேயர்கள் 1854-ம் ஆண்டு மார்ச் மாதம் ராணி லட்சுமிபாய்க்கு 60000 ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து ஜான்சிக் கோட்டையை விட்டு வெளியேறச் சொன்னார்கள்.

ஆயினும் 1857-ம் ஆண்டு மே 10-ம் தேதி இந்தியக் கிளர்ச்சி மீரட்டில் ஆரம்பமாகியது. போர் வீரர்களுக்குப் புதிதாக வழங்கப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளில் பசுவினதும் பன்றியினதும் கொழுப்புப் பூசப்பட்டதாகப் பரவிய வதந்தியையடுத்தே இக்கிளர்ச்சி ஏற்பட்டுப் பரவத் தொடங்கியது. இச்சந்தர்ப்பத்தில், ஆங்கிலேயர்கள் இந்தியக் கிளர்ச்சி சம்பந்தமாகவே கவனம் செலுத்தினர்.

ஜான்சி பற்றி அதிகக் கவனம் செலுத்தவில்லை. இதன் காரணமாக, இராணி இலட்சுமிபாய் தனியாகவே ஜான்சியை ஆட்சி செய்தார். வடமத்திய இந்தியாவிலே ஜான்சி அமைதியான பிரதேசமாக இருந்தமையைக் காட்டுவதற்காகவும் ஜான்சி எந்த விதமான முற்றுகையை எதிர்கொள்வதற்கான அபாயத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதனைத் தெளிவுபடுத்துவதற்காகவும் இராணி இலட்சுமிபாயால் ஹால்டி குங்குமப் பண்டிகை ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டாடப்பட்டது.

ஆனாலும் இராணி இலட்சுமிபாய் ஆங்கிலேயர்களை எதிர்க்கக்கூடும் என்ற அச்சம் ஆங்கிலேயர்களிடம் இருக்கவே செய்தது. இதனால், ஆங்கிலேயர்கள் 1857-ம் ஆண்டு ஜூன் 8-ம் திகதி ஜோக்கன் பாக்கில் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரிகளைப் படுகொலை செய்ததில் இராணி இலட்சுமிபாய்க்கும் பங்கு உள்ளதாகக் கூறினர். பொதுமக்களும் விவசாயிகளும் இராணி இலட்சுமிபாய் மீது வைத்திருந்த மதிப்பைச் சீர்குலைக்கவே இவ்வாறு கூறினர்.

இதனையே காரணமாக வைத்து, 1858-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி ஹீ ரோஸ் தலைமையில் ஆங்கிலேயர்களின் படை ஒன்று ஜான்சியைக் கைப்பற்றுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஜான்சியின் படைகளுக்கு உதவி செய்வதற்காகத் தாந்தியா தோபேயின் தலைமையில் 20000 பேரைக் கொண்ட படை அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனாலும் அப்படை மார்ச்சு 31-ம் திகதி ஆங்கிலேயர்களின் படையுடன் இணைந்த காரணத்தினால் தாந்தியா தோபேயினால் ஜான்சி ராணிக்கு உதவ முடியாமல் போனது. ஆனாலும் சான்சி இராணி பிரித்தானியருக்கு அடிபணிய மறுத்துத் தமது படைகளுடன் இணைந்து கடுமையாகப் போர் புரிந்தார். தனது நாட்டை விட்டுக் கொடுக்க மறுத்த ஜான்சி இராணி இலட்சுமிபாய், தனது படை வீரர்களை முன்னின்று வழி நடத்திச் சென்று பெரும் ஆற்றலுடனும் மிகுந்த துணிச்சலுடனும் போர் புரிந்தார். எனினும் மூன்று நாட்களின் பின்னர், ஆங்கிலேயர்களால் அத்துமீறி நுழைந்து நகரத்தைக் கைப்பற்ற முடிந்தது. கடுங்கோபத்திலிருந்த பிரித்தானியர், அரண்மனையைச் சூறையாடிப் பொருட்களைக் கொள்ளையடித்தனர்.

ஜான்சி இராணி 1858-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி இரவு நேரத்திலே தனது மகனுடன் மதிலிலிருந்து பாய்ந்து தப்பித்தார். அதிகம் பெண்களைக் கொண்ட பாதுகாவலர் படையணியின் பாதுகாப்புடன் ஜான்சி ராணி நகரத்தை விட்டு நீங்கினார். *இராணி இலட்சுமிபாய், தாமோதர் ராவுடனும் தமது படைகளுடனும் கல்பிக்குச் சென்று தாந்தியா தோபேயின் படையுடனும் ராவ் சாஹிப் பேஷ்வாவின் படையுடனும் ஏனைய புரட்சிப் படைகளுடனும் இணைந்து கொண்டார்.

இவர்கள் குவாலியருக்குச் சென்று குவாலியரின் மகாராஜா ஜயாஜிராவ் சிந்தியாவின் படையைத் தோற்கடித்து, குவாலியரின் கோட்டையொன்றைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.

வெள்ளையரின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. 1858-ம் ஆண்டு ஜுன் 17-ம் தேதி கோட்டாகி சேராய் என்ற இடத்தில் வெள்ளையரை எதிர்த்துச் ஜான்சி ராணி போரிட்டார். துரதிர்ஷ்டவசமாக இப்போரின்போது படுகாயமடைந்து அத்தினத்திலேயே வீரமரணம் அடைந்தார் இந்த வீரப் பெண்மணி. பிரித்தானியர் மூன்று நாட்களின் பின்னர் குவாலியரைக் கைப்பற்றினர்.

ஆங்கிலேயர்களின் படையை வழிநடத்திய ஹீ ரோஸ் வீரத்துக்காகவும் விவேகத்துக்காகவும் விடாமுயற்சிக்காகவும் குறிப்பிடத்தக்கவர் என்றும் அனைத்துப் புரட்சித் தலைவர்களிலும் மிகவும் ஆபத்தானவர் என்றும் இராணி இலட்சுமிபாயைப் புகழ்ந்து கூறினார்.

இவரது வீரதீரச் செயல்களும் ஆங்கிலேயரை எதிர்த்து இவர் புரிந்த போரும் இந்திய நாட்டில் இன்றும் நாட்டுப்புறப் பாடல்களாகவும் நாடகங்களாகவும் பலரால் போற்றப்படுகின்றன. அமரத்துவம் பெற்ற ஒரு வீராங்கனையாக என்றென்றும் இவர் பெயர் அழியாப் புகழ் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top