அரச மரம்:
அரச மரத்தினுடைய காற்று கர்ப்பத்தையே பலப்படுத்தக்கூடிய அளவிற்கு மருத்துவ சக்தி பெற்றது. அரச மரத்தில் ஒருவித மின் ஆற்றல்கள், பாசிடிவ் எனர்ஜி அளிக்கக் கூடிய மின் ஆற்றல்கள் அரச இலை போன்றவற்றில் இருக்கிறது.
அரசங்குச்சியில் இருந்து வரக்கூடிய புகை மூச்சுத் திணறல், சளித் தொந்தரவுகளை போக்கக் கூடியது. நரம்புகளை முறுக்கேற்றக் கூடியது. சோர்வு, களைப்பு, நரம்புத் தளர்ச்சியுடன் இருப்பவர்களுக்கெல்லாம் மிகவும் நல்லது.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால், விந்தணுக்களினுடைய எண்ணிக்கை அதிகப்படுத்தக்கூடிய பலப்படுத்தக்கூடியதெல்லாம் அரச பழத்தை பதப்படுத்தி உண்ணும் போது வருகிறது.
நம்முடைய மூதாதையர்கள், முன்னோர்கள் மருத்துவ குணங்களை சூசகமாக சொல்லிச் சென்றிருக்கிறார்களே தவிர, நேரடியாக அறிவியலாக அதை சொல்லாமல் சென்றுவிட்டார்கள். அதனால், பாதியில் வந்தவர்கள் இதெல்லாம் மூட நம்பிக்கை, அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
இதையே சிகாகோவில் இருக்கக் கூடிய பல்கலைக்கழகம், அரச மர இலையில் இவ்வளவு வீரியம் இருக்கிறது. அந்த மரத்திற்கு கீழ் உட்கார்ந்து அரை மணி நேரம் சுவாதித்தால் இத்தனை கலோரிகள் கிடைக்கிறது என்று அவர்கள் சொல்லும் போதுதான் மக்கள் நம்பப் போகிறார்கள்.
அதனால்தான், அரச, வேம்பு போன்றவைகளை பராமரிப்பது என்பது பரிகாரம் போன்றது என்று சொல்லியிருக்கிறார்கள். 4 அரச மரங்களை நட்டு அதற்கு கீழ் 4 பேர் உட்கார்ந்து மருத்துவ குணம் பெற்று உடல் நலம் தேறிச் செல்கிறார் என்றால், அந்தப் புண்ணியம் அந்த மரத்தை நட்டவரைப் போய்ச் சேரும்.
நொச்சி:
நொச்சி இலையை இடித்து சாறு பிழிந்து கட்டிகளின் மீது பூசி வர கட்டி கரையும். வீக்கம் குறையும்.
நொச்சி, தழுதாழை, மாவிலங்கம் ஆகியவற்றை சம அளவு எடுத்து சாறு பிழிந்து, ஒரு ஆழாக்கு எடுத்து அதில் 35 கிராம் பெருங்காயத்தை பொடித்துப் போட்டுக் காய்ச்சவும்.
அது குழம்பு பதத்தில் வந்ததும் அதில் ஒரு கரண்டி வீதம் எடுத்து தொடர்ந்து 10 நாட்கள் சாப்பிட குன்மம் எனப்படும் அல்சர் வயிற்றுவலி குணமாகும்.
நொச்சி மலர்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து இரண்டு சிட்டிகை அளவு எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட ரத்த பேதி, ரத்த வாந்தி குணமாகும்.
நொச்சி இலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி ஒத்தடம் இட, மூட்டுவலி, மூட்டு வீக்கம் குறையும்.
நொச்சிக் கொழுந்து, சுக்கு சேர்த்து அரைத்து, அதனுடன் சர்க்கரை, நெய் சேர்த்து லேகியம் போல கிண்டி ஒரு மண்டலம் உட்கொண்டு வர சீதக்கழிச்சலினால் ஏற்படும் கடுப்பு குணமாகும்.
வாகை மரம்:
வாகை மரத்தின் பிசின், மரப் பட்டை, பூ, விதை, இலை என அனைத்திற்கும் மருத்துவ குணங்கள் உள்ளன.
வாகையில் புரதச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
வாகை மரப்பட்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து குடித்து வர பசியை உண்டாக்கும்.
வாய்ப்புண் குணமாகும். வாகைப் பூவை சேகரித்து நீர்விட்டுக் காய்ச்சி பாதியளவாக வற்றியதும் வடிகட்டி குடித்து வர வாத நோய்களை குணமாக்கும்.
விஷங்களை முறிக்கும். வாகை இலையை அரைத்து கண் இமைகளின் மீது வைத்து கட்டி வர கண் சிவப்பு கண் எரிச்சல் குணமாகும்.
வாகைப் பட்டையை பொடி செய்து அரை கிராம் முதல் ஒரு கிராம் அளவு வரை வெண்ணெயில் கலந்து உட்கொண்டு வர உள்மூலம் ரத்த மூலம் குணமாகும்.
வாகை மரப்பட்டையை தூளாக்கி மோரில் கலந்து குடித்து வர பெருங்கழிச்சல் குணமாகும்.
வாகை மரத்தின் விதையில் இருந்து பெறப்படுகின்ற எண்ணெய், குஷ்ட நோய் புண்களை குணமாக்கும் தன்மை கொண்டது.
அடிபட்ட காயத்தின் மீது வாகை மரப்பட்டையை பொடித்து தூவ விரைவில் காயம் ஆறும்.
சந்தனம்:
தென் இந்தியாவில் இலையுதிர் காடுகளில் அதிகம் காணப்படும் சிறு மரம். சந்தன மரம் தமிழகக் காடுகளில் தானே வளரக்கூடியது.
இது துவர்ப்பு மணமும் உடையது. தமிழகத்தில் தனிப் பெரும் மரமாகும். மாற்றடுக்கில் அமைந்த இலைகளையுடைய மரம்.
இலைகளின் மேற் பகுதி கரும்பச்சை நிறமாயும் அடிப் பகுதி வெளிறியும் காணப்படும்.
கணுப்பகுதியிலும் நுனிப் பகுதியிலும் மலர்கள் கூட்டு மஞ்சரியாக காணப்படும். உலர்ந்த நடுக் கட்டை தான் நறுமணம் உடையது.
மருத்துவப் பயனுடையது. இதை காடில்லாத மற்ற இடங்களில் வளர்த்தால் அரசு அனுமதி பெற்றுத்தான் வெட்ட வேண்டும். இதன் விலை மிகவும் அதிகம்.
இது நன்கு வளர்வதற்கு பக்கத்தில் ஒரு மரம் துணையாக இருக்க வேண்டும். 2-3 ஆண்டுகளில் பழம் விட ஆரம்பிக்கும்.
இந்தப் பழத்தைப் பறவைகள் உட்கொண்டு அதன் எச்சம் விழும் இடத்தில் விதை மூலம் நாற்றுக்கள் பரவும். விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தான் முழுப் பலன் கிடைக்கும்.
சந்தனம் சிறு நீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயற்படும். வியர்வையை மிகுவிக்கும், வெண்குட்டம், மேக நீர், சொறி, சிரங்கைக் குணப்படுத்தும்.
சிறுநீர் தாரை எரிச்சல் சூட்டைத் தணிக்கும். விந்து நீர்த்துப் போதலைக் கெட்டிப் படுத்தும் குளிர்ச்சி தரும். உடல் வெப்பத்தை குறைக்கவும், தோல் நோய்களை நீக்கவும் நறு மணத்திற்காகவும் இதன் எண்ணெய் பயன்படுகிறது.
முகப்பூச்சு, நறுமணத் தைலம், சோப்புக்கள், ஊதுவத்திகள், அலங்கார பொருட்கள், மாலைகள் என மருத்துவம் சாராத பகுதிகளில் பயன் படுத்தப்பட்டாலும், கிருமி நாசினி செய்கை, உடல் அழற்சியை குறைக்கும் தன்மை உடையது.
கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்துத் தடவ முகப்பரு, தவளைச் சொறி, சொறி, படர் தாமரை, வெண்குட்டம், கருமேகம் வெப்பக்கட்டிகள், தீர்ந்து வசீகரமும் அழகும் உண்டாகும்.
பசும்பாலில் உரைத்துப் புளியங் கொட்டையளவு காலை, மாலை சாப்பிட்டு வர வெட்டைச் சூடு, மேக அனல், சிறுநீர்ப் பாதை ரணம், அலற்சி ஆகியவை தீரும்.
சந்தனத்தூள் 20 கிராம், 300 மி.லி. நீரில் போட்டுக் காய்ச்சி 150 மி.லி.யாக்கி வடிகட்டி 3 வேளையாக 50 மி.லி. குடிக்க நீர்க் கோவை, காய்ச்சல், மார்புத் துடிப்பு, மந்தம், இதயப் படபடப்பு குறையும். இதயம் வலுவுறும்.
சந்தனத் துண்டுளை நீரில் ஊற வைத்து மைய அரைத்து சுண்டைக்காயளவு பாலில் கலந்து இரவு மட்டும் 20 நாள் கொள்ள உடல் தேறி, நோய் தீரும்.
சந்தன எண்ணெய் தைலம் ‘எசன்ஸ்’ 2-3 துளி பாலில் கலந்து குடிக்க உடல் குளிர்ச்சி பெறும். நெல்லிக்காய்ச்சாறு, அல்லது கசாயம் 50 மி.லி.யுடன் அரைத்த சந்தனம் 5-10 கிராம் கலந்து 48 நாள் காலை, மாலை குடிக்க நீரிழிவு குணமாகும்.
கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.
திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவு கலந்த மருந்தாகும். இதனை எவர் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
குறிப்பாக ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள் இம்மருந்தினை காலை இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம்.
மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்தலாம்.
நூறு கிராம் கடுக்காய் சிலாசத்து பற்பம் 50 கிராம் இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
இதில் இரண்டு கிராம் அளவு காலை, இரவு சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும். நரம்புகள் முறுக்கேறும்.
கடுக்காய், கொட்டைப்பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்கு நூறு கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் பல் துலக்கி வர அனைத்து பல் வியாதிகளும் தீரும்.
கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல் புண் ஆகியன ஆறும்.
வேம்பு:
வைரஸை எதிர்க்கக்கூடிய ஆற்றல் வேம்புக்கு உண்டு. இதனால்தான் வீட்டில் ஒருவருக்கு அம்மை ஏற்பட்டவுடன், அடையாளச் சின்னமாக மாறி மற்றவருக்கு நோய் தொற்றாமல் காக்கிறது.
மேலும் அம்மையால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, தோலில் ஏற்படும் அரிப்பு, புண் ஆகியவற்றைக் குறைக்கும் அருமருந்தாகவும் பயன்படுகிறது.
(விஷக் காய்ச்சல்) உள்பட பல்வேறு காய்ச்சலுக்கு வேம்பு அருமருந்து. வேப்பம்பட்டையை கஷாயமாகக் காய்ச்சிக் குடிக்க காய்ச்சல் மறையும்.
வேப்பம்பட்டை சூரணத்தையும் (பொடி) சித்த மருத்துவர்கள் தருவது வழக்கமாக உள்ளது.
யானைக்கால் நோய்க்கான ஆரம்ப அறிகுறி தென்படும் நிலையில், கால் வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேம்புக்கு உண்டு.
மருத்துவரின் பரிந்துரைப்படி, வேப்பம்பட்டை கஷாயத்தை தினமும் காலையில் 48 நாள்கள் குடித்து வந்தால், யானைக்கால் நோய் காரணமாக ஏற்படும் கால் வீக்கம் குறையும்.
கரப்பான் போன்ற தோல் நோய்களுக்கு வேப்ப எண்ணெய் சிறந்த மருந்து. மாதவிடாய்ப் பிரச்சினைகளுக்கு வேப்ப எண்ணெய் உள் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.