ஒரு ஊரில் புகழ்பெற்ற துறவி ஒருவர் இருந்தார். அவரிடம் நிறைய மாணவர்கள் இருக்கின்றனர்.
ஒரு நாள் அவரைப் பார்க்க துறவியின் பழைய மாணவன் ஒருவன் பார்க்க வந்தான்.
அவரைப் பார்த்து எல்லாம் பேசியப் பின்னர், குருவிடம் “எனக்கு ஒரு குழப்பம்” என்று சொன்னான்.
குருவும், “என்ன?” என்று கேட்டார். அதற்கு மாணவன், “நான் உங்களிடம் படித்த தியானத்தை சரியாக கடைபிடிக்கிறேன். அவை எனக்கு மனஅமைதியையும், அறிவுக் கூர்மையையும் தருகின்றன. அதை நன்கு என்னால் உணர முடிகிறது” என்று சொன்னான்.
“சந்தோஷம். இதில் என்ன குழப்பம்?” என்று குரு கேட்டார். அதற்கு மாணவன் “நான் தியானம் செய்யாத நேரங்களில் நல்லவனாக இருக்கிறேன்.
ஆனால் மற்ற நேரங்களில் நல்லவனாக இருக்கிறேனா? என்ற சந்தேகம் இருக்கிறது. எனக்கே சில சமயங்களில் தவறுகளை செய்கிறேன் என்றும் தெரிகிறது.
தியானம் செய்யும் ஒருவன் இப்படி செய்வது சரிதானா? இதை நினைக்கும் போது என் உள்ளம் கஷ்டமாக இருக்கிறது” என்று கூறினான்.
குரு அதற்கு சிரித்துவிட்டு, “ஆகவே நீ தியானமும் செய்கிறாய், தவறுகளும் செய்கிறாய், அப்படித்தானே…?” என்று கேட்டார்.
அதற்கு அவனும் “ஆமாம், அது தவறில்லையா? என்று கேட்டான்.குரு அதற்கு ‘இல்லை. நீ தினமும் தியானம் செய், தினமும் தவறு செய்,
தினமும் தியானம் செய், தினமும் தவறு செய், கொஞ்ச நாளில் இவ்விரண்டில் ஏதேனும் ஒன்று நின்றுவிடும்!’ என்று கூறினார்.
உடனே அந்த மாணவன் “ஒரு வேளை என் தியானம் நின்றுவிட்டால்?” என்று வினவினான்.
குரு “அதுவும் நல்லது தான். அப்போது தான் உன் உண்மையான இயல்பு உனக்கு புரியும்” என்று கூறினார்.