கோவை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வாய்ந்தது மருதமலை முருகன் கோவில். அறு படை வீடுகளைக் கொண்டு குன்று தோறும் குமரன் எழுந்தருளி இருக்கும் இந்த மருதமலை 7-வது படைவீடு என பக்தர்களால் போற்றி வணங்கப்படுகிறது.
மருதமலை……… எழில் கொஞ்சும் இயற்கையான சூழலில் அமைந்திருக்கும் மருதமலை, அதன் மூன்று புறங்களிலும் மலை அரண்களால் சூழப்பட்டு உள்ளது. கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலைகளின் இயற்கை அமைப்போடு சேர்த்து பார்க்கும் போது மயில் தோகை விரித்தாற்போல் காட்சி அளிக்கிறது.
இதனால் முருகன் மயில் மீது அமர்ந்த தோற்றம் நம் கண் முன் தெரிகிறது. மருத மரங்கள் அதிகமாக காணப்படுவதால் இந்த மலை மருதமலை என வழங்கப்படுகிறது. மேலும் மருதமால்வரை, மருதவரை, மருதவெற்பு, மருதக்குன்று, மருதலோங்கல், கமற்பிறங்கு, மருதாச்சலம், வேள்வரை என்றெல்லாம் பேரூர் புராணத்தில் கூறப்படுகிறது.
தொன்மை சிறப்பு…….. மருதமலைக்கு முருகபக்தரான சித்தர் ஒருவர் வரும் போது, தாகம் மற்றும் களைப்பு ஏற்பட்டு மருதமரம் ஒன்றின் நிழலில் இளைப்பாறினார். அப்போது அந்த மரத்தடியில் இருந்து ஊற்று நீர் பீறிட்டுக் கிளம்பியது. இந்த அதிசயத்தைக் கண்ட சித்தர் மகிழ்ச்சி அடைந்தார்.
முருகன் திருவருளே இதற்கு காரணம் என மகிழ்ந்த சித்தர் முருகப் பெருமானை ‘மருதம்-சலம்’ ஆகியவற்றுக்கு தலைவா என வாழ்த்திப் பாடினார். அதுவே காலப் போக்கில் மருதா சலபதி என மருவி அழைக்கப்படுகின்றது என்பர். ‘அசலம்’ என்ற வட சொல்லுக்கு தமிழில் ‘மலை’ என்ற பொருளாகும்.
எனவே மருதமரங்கள் அடர்ந்த மலை என்ற பொருளில் மருதாச்சலம் என்ற பெயர் ஏற்பட்டது என்றும் கருதலாம். கி.பி.12-ம் நூற்றாண்டில் மருதமலைத் திருக்கோவில் அமைக்கப்பட்டது என்றும், கொங்கு நாட்டின் 24 பிரிவுகளுள் ஒன்றான ஆறைநாட்டின் எல்லையாக மருதமலை இருந்தது என்றும் அறியலாம். பேரூர் புராணம், காஞ்சிப்புராணம், அருணகிரிநாதரின் திருப்புகழ் முதலிய நூல்களில் மருதமலை சிறப்பித்துக் கூறப்பட்டு உள்ளது.
மூலிகை மரங்கள்………. மருதமலையை மருந்து மலை எனக் கூறத் தக்க வகையில் மக்களின் உடல்பிணியும், மனப்பிணியும் நீக்கும் மூலிகை மரங்கள் உள்ளன. அருமையான காற்று, அமைதியான சூழல் மனதுக்கு மகிழ்ச்சியை தருகிறது.
தவம் செய்வோர் மற்றும் அருளாளர்கள் இறப்பு இல்லாத பெருவாழ்வு அடைய காயகல்பம் தேடி இந்த மலையில் வந்து தங்கினார்கள். காமதேனு என்ற தெய்வீகப்பசு, இந்த மலையில் பசி நீங்க மேய்ந்து மருதமரத்தின் கீழ் நல்ல தண்ணீரை பருகியதாக வரலாறு கூறுகிறது.
தான்தோன்றி விநாயகர்………. இத்தகைய சிறப்பு பெற்ற மருதமலை அடிவாரத்தில் உள்ள படிக்கட்டு பாதையின் தொடக்கத்தில் தான் தோன்றி விநாயகர் கோவில் உள்ளது. இந்த விநாயகரின் இயற்கை அமைப்பு மிக்க அழகுடையதாகும். பிற தலங்களில் காண்பதற்கு அரியதாகவும் உள்ளது.
இந்த விநாயகரை வணங்கிச் சென்றால் சரியாக 18 படிகளைக் கொண்ட பதினெட்டாம் படி உள்ளது. சபரிமலைக்கு சென்று அய்யப்பனை வழிபட இயலாத பக்தர்கள் இந்த 18-ம் படிக்கு வந்து வழிபட்டு செல்வார்கள்.
கற்சிலையான திருடர்கள்……... இந்த படியை கடந்து மேலே சென்றால் மலைச் சாரலில் 3 கற்கள் மாறுபட்ட நிறத்துடன் இருப்பதை காணலாம். அதாவது இந்த மூன்று கற்களும் சிலையாகி போன திருடர்கள் என்பார்கள். ஒரு முறை முருகன் அடியார்கள் கோவில் திருப்பணி நடந்த போது பொன், பொருளை உண்டியலில் போட்டனர்.
இதைக் கண்ட 3 திருடர்கள் ஒரு நாள் இரவில் வந்து உண்டியலை உடைத்து பொன்னையும், பொருளையும் திருடி மலைச்சரிவு வழியாக சென்றனர். அப்போது முருகப் பெருமான் குதிரைவீரனைப் போல் சென்று அவர்களைப் பிடித்து ‘நீங்கள் கற்சிலைகளாக மாறுவீர்’ என சபித்தாராம். இதனால் அந்த திருடர்கள் 3 பேரும் கற்சிலைகளாக நிற்பதாக செவிவழிச் செய்தி கூறுகிறது.
இடும்பன் கோவில்……….. இந்த தலத்தில் அமைந்துள்ள இடும்பன் கோவிலில், இடும்பனின் உருவம் உருண்டை வடிவமாக பெரிய பாறையில் உள்ளது. காவடி யைச் சுமந்து கொண்டு இருக்கும் தோற்றத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இடும்பனை வணங்கினால் குழந்தை பேறு கிடைக்கும் என்பதால் பக்தர்கள் இடும்பனை வணங்கி செல்வார்கள்.
இடும்பனை வணங்கி சற்று மேலே சென்றால் குதிரைக்குளம்பு என்ற சுவடு உள்ளது. இதற்காக எழில்மிகு மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. முருகப்பெருமான் சூரர்களை வெற்றி கொள்ள புறப்படும் போது அல்லது வெற்றியுடன் திரும்பி வரும் போது குதிரைக் குளம்புகள் படிந்த இடம் எனக் கூறப்படுகிறது. உண்டியல் பொருட்களை திருடர்கள் திருடிச் செல்ல அவர்களை முருகப் பெருமான் தேடிச் சென்ற போது ஏற்பட்ட குதிரைக் குளம்படியாகவும் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது ஆதி
மூலஸ்தானம்……… படி ஏறி மலையை அடைந்தால் நேரில் ஆதி மூலஸ்தான சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதி அருவுருவத் திருமேனியாக லிங்க வடிவில் அமைந்துள்ளது. வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் மூவரும் லிங்க வடிவில் காட்சி தருகின்றனர்.
மூலஸ்தானமாகிய இங்குதான் களாக நிற்பதாக செவிவழிச் செய்தி கூறுகி முதலில் பூஜைகள் தொடங்குகிறது. இயற்கை அழகுமிக்க மலைகளுக்கு இடை யில் இதயம் போல் காட்சி அளிக்கும் அழகிய மலைக் கோவிலாம் மருதமலை மனதை கொள்ளை கொள்கிறது.
தீர்த்தம்……. இந்த கோவிலில் மருதமலையான் சிரசில் (தலை) கண்டிகையுடன், பின்பக்கம் குடுமியுடன், கோவணம் கொண்டு வலது திருக்கரத்தில் ஞானத்தண்டு ஏந்தி, இடது திருக்கரத்தை இடையில் அமைத்து வினைகளை வேரறுத்து எமன் பயம் தீர்த்து உண்மை அறிவை அறியச் செய்யும் நீண்ட வேலோடு உலகைக் காக்கும் மருதாச்சலமூர்த்தி அருள் பாலிக்கிறார்.
நமது நாட்டில் புனிதமாக விளங்கும் கிணறு, ஆறு, கடற்கரை இவையாவும் சிவமயத்தன்மை பெற்று இருக்கிறது. இதில் நீராடும் போது உடற்பிணி, பிறவிப்பிணி நீங்குகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மருதமலையில் மருதத்தீர்த்தம், கந்த தீர்த்தம், கன்னி தீர்த்தம் என்ற தெய்வீகத் தன்மை வாய்ந்த மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இந்த தீர்த்தங்களில் நீராடுவோருக்கு செல்வங்கள் பெருகும் எனவும், உடற்பிணி நீங்கும் எனவும் புராணங்கள் கூறுகிறது.
உச்சிப் பிள்ளையார்………... இந்த தலத்தின் மலை மீது வடக்காக சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உச்சிப்பிள்ளையார் அமைந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதற்காக சரியான உருவ பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு ஒவ்வொரு சதுர்த்தி நாளிலும் அபிஷேக பூஜைகள் நடை பெற்று வருகின்றன. பக்தர்கள் தங்களது துன்பங்கள் நீங்கி இன்பமானது இடைவிடாது கிடைக்க வினை தீர்க்கும் உச்சிப் பிள்ளையாரை வழிபட்டுச் செல்கின்றனர்.
பட்டீஸ்வரர் சன்னதி………. கோவிலில் பிரதான சன்னதிக்கு வலது புறமாக உள் பிரகாரத்தில் பட்டீஸ்வரர் சன்னதி, இடது புறம் மரகதாம்பிகை சன்னதி உள்ளது. மரகதாம்பிகை சன்னதிக்கு எதிரே நவக்கிரக சன்னதி யும், பிரதான சன்னதிக்கு எதிரே உள்ள அலங்கார மண்டபத்தின் இடது புறமாக வரத ராஜ பெருமாள் சன்னதியும் உள்ளது.
இதைத் தவிர மருத தீர்த்தக் கரையில் சப்த கன்னிமார் கோவில் உள்ளது. இதன் காரணமாக இங்கு உள்ள தீர்த்தத்துக்கு கன்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. கோவில் மகா மண்டபத்தின் தென் கிழக்கில் கொரக்கட்டை, இச்சி, ஆலமரம், வக்கணை மரம் மற்றும் ஒட்டுமரம் ஆகிய 5 மரங்கள் ஒன்றாக பின்னிப் பிணைந்து வளர்ந்த அழகிய பழமையான மரம் ஒன்று அமைந்துள்ளது.
இதன் மரத்தடியில் பஞ்சமுக விநாயகர் சிலை ஒன்று உள்ளது. இந்த மரத்தின் காற்று எல்லா நோய்களையும் தீர்க்க வல்லது என்றும் இந்த மரத்தில் பல முனிவர்கள் தவம் செய்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த மரத் தின் வயது கணக்கிடப்படவில்லை. மேலும் இந்த கோவிலில் ஸ்தல விருட்சமாக மருதமரம் உள்ளது.
ராஜகோபுரம்……… இத்தகைய சிறப்பு வாய்ந்த மருதமலைக்கு 7 நிலை கொண்ட ராஜகோபுரம் கட்டப்பட்டு அதன் கும்பாபிஷேக விழா வருகிற 18-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. மருதமலை முருகன் கோவில் கோவை மாநகருக்கு மேற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல கோவில் நிர்வாகம் சார்பில் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மருதமலையில் பாம்பாட்டி சித்தர்……… 18 சித்தர்களுள் ஒருவராக போற்றப்படும் பாம்பாட்டி சித்தர் முருகனின் அருள் பெற்று மருத மலையில் வாழ்ந்தவர். காடு, மலை மற்றும் வனாந்திரங்களை வாசஸ்தலமாககொண்டு சுற்றித் திரிந்தவர். பாம்பாட்டி சித்தர் ஒரு முறை இறந்து போன மன்னன் உடலில் கூடு விட்டு கூடு பாயும் வித்தை மூலம் புகுந்தாராம்.
இதே போல் இறந்த பாம்பை ஆட்டு வித்ததால் இவர் பாம்பாட்டி சித்தர் என்று அழைக்கப்பட்டார். முருகன் இந்த பாம்பாட்டி சித்தரிடம் அருள் விளையாட்டுக்கள் செய்துள்ளார். மருதமலையில் பாம்பாட்டி சித்தரை வழிபடும் பக்தர்களுக்கு விஷத்தினால் வரக்கூடிய தோஷங்கள் நிவர்த்தி அடைவதுடன், சரும ரோகங்களும் தீர்க்கப்படுகின்றன. அமைதி இல்லாத மனதுடன் வந்து வழிபடும் பக்தர்களுக்கு அமைதி கிடைக்கிறது.
வாதம், வைத்தியம், ஞானம் கைகூட வேண்டும் என்று விரும்பும் பக்தர்கள் பாம்பாட்டி சித்தரை தரிசனம் செய்து விட்டு சென்றால் அவர் பக்தர்களுக்கு பல ரூபங்களில் வந்து அருள் புரிவதாக ஐதீகம். பாம்பாட்டி சித்தர் மருதமலையில் இன்றும் அருள் வடிவாக இருப்பதால், முருகனின் அருளைப் பெருக்கி பக்தர்களை ஈர்க்கும் சக்தியாகவும் விளங்குகிறார்.
இந்த மலையில் பாம்பாட்டி சித்தர் தவம் செய்து முருகனை வழிபட்ட இடம் ஸ்தல விருட்சத்துக்கு நேர் எதிரில் அமைந்துள்ளது. கோவிலின் தெற்கு பகுதியில் உள்ள படிக்கட்டுகள் வழியாக கீழ் இறங்கி கிழக்கு திசை நோக்கி சென்றால் அங்கு பாம்பாட்டி சித்தர் சன் னதி உள்ளது.
அங்கு உள்ள பாறையானது பாம்பு போன்ற அமைப்பில் இயற்கையாகவே அமைந்துள்ளது. இவர் இந்ததலத்தில் தங்கி சுரங்கப்பாதை மூலம் ஆதி மூலஸ்தானத் தில் உள்ள வள்ளி,தெய்வானை மற்றும் முருகப்பெருமானை வழிபட்டதாக கூறுகின்றனர்.