பசுவும், காளையும் உழவர்களின் நண்பன் மட்டுமல்லாது ஆன்மிக முக்கியத்துவமும் கொண்டவை. ரிஷபம், நந்தி, பசு ஆகியவற்றை எப்போதும் வழிபடச் சொல்கின்றது, இந்துமதம். பசுக் குலத்தையே நந்த குலம் என்றழைப்பர். காளையை நந்தி என்றும், பசுவை நந்தினி என்றும் அழைப்பர். கிருஷ்ணன் பசுவை (கோ) மேய் த்ததாலே கோபாலன் ஆனான். பசுக்களை மேய்த்த இடையர்கள் நந்தகோபர்கள் ஆனார்கள். ஈசனின் கருவறைக்கு நேரேயுள்ள காளையை ரிஷபம் என்கிறோம்.
காளையின் வடிவில் கால்மடக்கி அமர்ந்திருக்கும் இவரே ரிஷப தேவர். இவரைத்தான் நாம் நந்தி என்கிறோம். ரிஷபத்தின் மீதேறிதான் ஈசன் வருவார். அதனாலேயே சிவனை இடப வாகனன் என்கிறோம். நந்தியின் உருவ அமைப்பே தத்துவக் குவியல் தான். முன்பக்கத்து வலது கால் சற்றே உயர்ந்திருக்கும். அது ஞானமார்க்கத்தை குறிக்கும். சரியை, கிரியை, யோகம் என்ற மூன்று கால்களையும் மடித்து ஒடுக்கிக் கொண்டு நாலம் பாதமாகிய ஞானப்பாதத்தினால் பரம்பொருளைக் கண்டு கொண்டிருக்கிறது என்கிறது ஆகம நூல்கள்.
நந்துதல் என்ற வேர்ச்சொல்லிலிருந்துதான் நந்தி என்ற சொல் வந்தது. நந்துதல் என்றால் மேலேறிச் செல்லுதல் என்று பொருள். ஒரு யோகி, பத்மாசனத்தில் அமர்ந்து மூலாதாரக் கனலை எழுப்பும் அமைப்பு நந்தியிடம் உண்டு. ஔவையார்கூட விநாயகர் அகவலில் ‘மூலாதாரத்தின் மூண்டு ஏழு கனலைக் காலால் எழுப்பும் கருத்து அறிவித்து’ எனும் வரி, ரிஷபத்தைத்தான் குறிப்பிடுகிறது. நந்தியின் துணையால் மேலேறி ஈசனைக் காணவேண்டும் என்பதே முழுப்பொருள். நந்தியின் அருளில்லாது ஈசனைக் காண இயலாது என்கின்றன சைவ ஆகமங்கள்.
ஈசன் நந்திமீதேறி வருவான் என்பதை ‘வெள்ளை எருதேறி’, ‘விடையேறி’ என்றெல்லாம் திருமுறைகள் கூறுகின்றன. தேவாரம் ‘நந்தி நாமம் நமசிவாய’ என்றும், திருமந்திரம், ‘நங்கள் நாதனாம் நந்தி’ என்றும் பேசுகின்றன. ஆகவே, நந்தியும், சிவமும் வெவ்வேறல்ல என்பது தெளிவு. கோயில்களில் விழா நடக்கும்போது நந்திக் கொடியை பறக்க விடுவர். ரிஷப தேவருக்கும், நந்தியம் பெருமானுக்கும் வேறுபாடுகள் உள்ளன. கருவறைக்கு நேரேயுள்ள ரிஷபதேவர் என்ற நந்தி வேறு; நந்தியம் பெரு மான் வேறு.
நந்தியம் பெருமானுக்கு மனித முகம், காளையின் தோற்றம் கொண்டு இரண்டு கால்களோடு காட்சி தருவார். நந்திதேவர் வெ ண்ணிறம், முக்கண், நான்கு கரங்களைக் கொண்டவர். ஜபமாலை, சூலம், அபயவரதம் தரித்திருப்பார். நந்தித்தேவரின் நாத ஒலியால் உண் டானதே நந்திநாதோற்பவம் என்ற நதி. இது காசியில் இருக்கிறது. ஆவுடையார் கோயில் தலத்தில் கருவறையில் சிவபெருமான் அருவமாக, ஆத்மநாதராக அருள்கிறார். அதேபோல ரிஷபதேவரும் அருவமாக அமைந்துள்ளார். திருவண்ணாமலைக்கு அருகேயுள்ள செங்கம் தலத்தில் ரிஷபபுரீஸ்வரராகவே அருள்கிறார்.
கும்பகோணம் – ஆடுதுறைக்கு அருகேயுள்ள திருலோக்கியில் ரிஷபத்தின் மீது ஈசனும் உமையும் காட்சி தரும் சிற்பம் அற்புதமானது. மதுரைக்கு அருகே காளையார்கோயில் என்றே ஒரு தலம் உள்ளது. இங்கு சுந்தரருக்குப் பெருமான் காளை வடிவில் காட்சியளித்தார். வேதங்களும், சாஸ்திரங்களும் பசுவிற்குள் எல்லா தெய்வங்களும் உறைவதாக உறுதியாகக் கூறுகின்றன. அது, மகாலட்சுமியின் பூரண அம்சம். பசுவின் குளம்படி தூசுகள் பாவத்தைப் பறக்கடிக்கும். ‘‘யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை’’ என்று திருமூலர் வேண்டுகோள் விடுக்கிறார்.
இறைவன் எடுக்கும் எல்லா அவதாரங்களோடும், பசுக்கள் நெருக்கம் கொண்டிருப்பதை புராணங்கள் தெரிவிக்கின்றன. இன்று நாம் வணங்கும் பெரும்பாலான கோயில்களில் உறையும் தெய்வங்களை ஆதிநாட்களில் பசுக்கள்தான் அடையாளம் கண்டறிந்தன. பசுக்களே அனுதினமும் பூசித்து மகிழ்ந்த கோயில்களும் பசுவின் பெயராலேயே ஈசன் விளங்கும் ஆலயங்களும் நிறைய உள்ளன. அவை பசுபதீஸ்வரர், தேனுபுரீஸ்வரர் என்றெல்லாம் வழங்கப்படுகின்றன. மாட்டுப் பொங்கலன்று நாம் ஆவினங்களை தொழுவது மட்டுமல்லாது மற்ற நாட்களிலெல்லாம் கூட பசுக்கள் பூஜித்த தலங்களுக்குச் சென்று பசுக்களின் பக்தி நெறியினையும், அது காட்டும் மார்க்கத்தையும் அறிந்து கொள்வது அவசியம்.
பசுவின் திருமுகமே தெய்வீகமானது. அதன் கண்களில் சூரிய சந்திரரும், முன் உச்சியில் சிவபெருமானும் உறைகின்றனர். சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் புனிதநீர் வெளியேற்றும் வாயிலாகவே கோமுகம் உள்ளது. கோமுகம் அத்தனை பவித்ரமானது! பெரிய வேள்விகளில் நெய் வெளியேறும் பகுதியை பசுவின் முகத்தைப்போன்ற அமைப்பில் வைத்திருப்பர். பாரத தேசம் முழுவதுமே கோமுகி, தேனு தீர்த்தம், பசுவின் குளம்பால் உண்டான தீர்த்தம் என்று எண்ணற்ற புனித தீர்த்தங்கள் அமைந்துள்ளன.
தஞ்சாவூர் – திருவையாற்றை சுற்றி சப்த ஸ்தானங்கள் எனப்படும் ஏழு கோயில்கள் உள்ளன. இவை யாவும் நந்தியம் பெருமானின் திருமண நிகழ்வோடு தொடர்பு கொண்டவை. திருவையாறு, திருப்பழனம், திருவேதிக்குடி, திருச்சோற்றுத்துறை, திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், தி ருக்கண்டியூர் ஆகிய இந்த ஏழு ஊர்களில், நந்தியம்பெருமானின் திருமண நிகழ்வை முன்னிட்டு ஈசனும், அம்மையும் திருவுலா வந்து இறுதியில் திருமழபாடியில் திருமணத்தை நடத்துவர். பார்வதி தேவியே பசு உருவில் திருவாடுதுறை ஈசனை வழிபட்டு முக்தி பெற்றதால், கோமுக்தீஸ்வரர் எனும் திருப்பெயரில் ஈசன் அருள்கிறார்.
கரூர் ஈசன், காமதேனுவால் பூசிக்கப்பட்டவர். அதனாலேயே அவர் பசுபதீஸ்வரர் என்றும் ஆநிலையப்பர் எனவும் அழைக்கப்படுகிறார். கும்பகோணம் – திருப்பனந்தாள் தலத்திற்கு அருகேயுள்ள பந்தணைநல்லூரில் ஈசன் பசுபதீஸ்வரராக காட்சி தருகிறார். வசிஷ்டரின் சாபத் தைப் பெற்ற காமதேனு பூசித்த முக்கிய தலமாக ஆவூர் விளங்குகிறது. ‘ஆ’ எனும் பசுவின் பெயராலேயே இத்தலம் விளங்குவது கூடுதல் சிறப்பாகும். இது தசரதர் வணங்கிய கோயிலும் ஆகும். வசிஷ்டரால் வாஜபேயம் என்கிற யாகம் இங்கு நிகழ்த்தப்பட்டது.
இத்தலம் கும்பகோணத்திற்கு 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதேபோல திருவண்ணாமலைக்கும் விழுப்புரத்திற்குமிடையே ஆவூர் எனும் தலம் உள்ளது. தஞ்சாவூர் – அய்யம்பேட்டைக்கு அருகேயுள்ள பசுபதிகோயிலில் இறைவன் பசுபதீஸ்வரர் ஆவார். தஞ்சைக்கு அருகே தென்குடித்திட்டையில் காமதேனுவால் பூசிக்கப்பட்ட இறைவன் பசுபதீஸ்வரர் என்றழைக்கப் படுகிறார். அஷ்ட மங்கலச் சின்னங்களில் ஒன்றாகவே ரிஷபம் திகழ்கிறது. முக்கிய ஹோமங்களில் யாக குண்டல த்தைச் சுற்றிலும் வைக்கப்படும் மங்கலச் சின்னங்களில் இதுவும் ஒன்று.
மாடுகளைக் கட்டி வைக்கும் கொட்டிலுக்கு பட்டி என்றும் பெயர் உண்டு. இதையொட்டியே நிறைய ஊர்கள் பட்டி என்று அறியப்படுகின்றன. கும்பகோணத்திற்கு அருகிலுள்ள பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரராக ஈசன் அருள்கிறார். இவர் காம தேனுவால் பூசிக்கப்பட்டவர். கொங்கு நாட்டிலுள்ள பெரும்பாலான சிவால யங்கள் காமதேனுவால் வணங்கப்பட்டவை. அவற்றில் முக்கியமாக பேரூர், ஆதிபட்டீஸ்வரம் என்றழைக்கப்படுகிறது. ஈசன், பட்டீஸ்வரர். கும்பகோண பட்டீஸ் வரத்தையும், பேரூரையும் தனித்தனியே அடையாளம் காட்ட இத்தலத்தை ஆன்பட்டீஸ்வரம் என அழைத்தனர்.
பசுக்கள் ஈசனை நோக்கி வழிபட்டு தங்களை தற்காத்துக் கொள்ள கொம்பை பெற்றன. அப்படி தவமி ருந்து கொம்பு பெற்ற ஊரே திரு ஆமாத்தூர் என்ற திருவாமாத்தூர். விழுப் புரத்திற்கு அருகிலுள்ள இத்தலத்தை பசுக்களின் தாய்வீடு என்பர். திருவாரூர், நன்னிலத்திற்கு அருகே உள்ளது, கொண்டீச்சரம். பார்வதி தேவிக்கும், காமதேனுவின் மகளுக்கும் கொண்டி என்ற பெயர் உண்டு. இந்த கொண்டியான அம்பிகை பசுவடிவத்தில் சிவனை வணங்கியதால், அவர் பசுபதீஸ்வரர் ஆனார்.
சென்னை – குன்றத்தூருக்கு அருகே உள்ள கோவூர், பசு வழிபட்டதாலேயே அவ்வாறு அழைக்கப்படுகிறது. கோமளம் என்றால் கறவைப்பசு என்றும் பொருளுண்டு. இப்படி கறவைப் பசுவால் வழிபடப்பட்ட கோமளேஸ்வரர் திருக்கோயில் சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் அமைந்துள்ளது. சென்னை – மாடம்பாக்கத்திலுள்ள ஈசனை பசு பூஜிக்க, அவர் தேனுபுரீஸ்வரர் ஆனார். பொள்ளாச்சிக்கு அருகே களந்தை தலத்தில் கருவறையில், அம்பிகை பசுவோடு சேர்ந்து எழுந்தருளியிருக்கிறாள். நாகப்பட்டினத்திற்கு அருகேயுள்ள சிக்கல் முருகன் தலத்தில் உறையும் ஈசன், வெண்ணெய்ப்பிரான் ஆவார்.
இந்தத் தலத்தில் காமதேனுவின் பால் குளமாகத் தேங்கி வெண்ணெயாக மாற, வசிஷ்டர் அதை லிங்கமாக்கி வழிபட்டார். தேனு என்று ஊரின் பெயரோ, ஈசனின் திருப்பெயர் இருந்தாலோ அவையெல்லாமுமே பசு பூஜித்த தலங்களாகும். மேல்மருவத்தூர் -அச்சிறுப்பாக்கத்திற்கு அருகே தேன்பாக்கத்தில் பசுபதீஸ்வரர் ஆலயம் உள்ளது. கபிலா என்றும் பசுவிற்கு ஒரு பெயர் உண்டு. இப்படி கபிலையால் பூஜிக்கப்பட்ட தலமாக திருப்பதி மலையடிவாரத்தில் கபிலேஸ்வரர் ஆலயம் உள்ளது.
நெல்லை -சங்கரன் கோவிலில் அம்பிகை பசு வடிவில் தேவர்கள் சூழ ஈசனை வணங்கினாள். கோ எனும் பசுவாக வழிபட்டதால் கோமதி என்றே இன்றும் அன்னை வணங்கப்படுகிறாள். கோமாதாவை வணங்கினால் கோடி புண்ணியம் கிடைக்கும். கோசாலை என்கிற பசுக் கொட்டிலின் அருகே நின்றால் மனம் அமைதியாவதை உணரலாம். அதனால்தான் பெரியோர்கள் கோசாலையில் அமர்ந்து நாம ஜபம் செய்வதென்பது கோடி மடங்கு பலன் தரும் என்று சொல்லி வைத்தார்கள். எங்கேனும் பசுவைப் பார்த்தால் மனதுக்குள் வணங்குவோம், அதனால், அனைத்துக் கடவுள்களையும் வணங்கியோராவோம்.