பாரத மக்களின் ஆதாரம் வயலோடு இயைந்த வாழ்வாகவே இருந்து வருகிறது. வயல் செழிப்புற மாடு, வாழ்க்கை சிறப்புற சூரியன் என்று வைத்திருந்தனர்; இவை இரண்டையும் நாள்தோறும் வணங்கவும் செய்தனர். கண்ணுக்குத் தெரியும் முதல் கடவுள், சூரியனே. எனவே, நம் முதல் இறைவழிபாடே சூரிய நமஸ்காரம் என்பதிலிருந்துதான் தொடங்குகிறது. சிவச் சூரியன், சூரிய நாராயணர் என்றெல்லாம் போற்றி வழிபடுகிறோம். சகல ஆலயங்களிலும் சூரியனுக்கு சிலை வைத்து வழிபடுகின்றனர். ஆலயத்தின் தென் கிழக்குப் பகுதியில் மேற்கு நோக்கியவாறு சிவ சூரியன் எழுந்தருளியிருப்பார்.
ஆடுதுறை அருகேயுள்ள சூரியனார் கோயில் தலத்தில் சூரிய நாராயணர் மூலவராகவே எழுந்தருளியிருக்கிறார். அவரைச் சுற்றிலும் நவகிரகங்களுக்கு சிறு சிறு கோயில்கள் உள்ளன. பல பெருங்கோயில்களில் உஷா-பிரத்யுக்ஷா தேவியரோடு சூரியன் எழுந்தருளியிருப்பார். இந்த சூரிய பகவானை வணங்குவதே பொங்கல் பண்டிகையின் தனி முக்கியத்துவமாகும். இதே நாளில் சூரியன் வணங்கிய ஈசனை நாம் வணங்குவது இன்னும் சிறப்பானதாகும். கும்பகோணத்திற்கு அருகேயுள்ள சூரியனார் கோவில் அனைவரும் அறிந்ததே. அதே கும்பகோணத்திலுள்ள சக்ரபாணி கோயிலும் சூரியன் வழிபட்டதுதான்.
இங்கு எழுந்தருளியிருக்கும் சக்ரத்தாழ்வாரை சூரிய தேவன் வழிபட்டார். துவாதச ஆதித்யர்கள் எனப்படும் பன்னிரண்டு சூரியர்கள் உள்ளனர் என்று புராணங்கள் கூறுகின்றன. வைகர்த்தன், விவச்சுதன், பகன், மார் த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகப்பிரகாசன், லோகசாக்ஷி, திருவிக்ரமன், ஆதித்தன், திவாகரன், அங்கிசமாலி ஆகியோரே அவர்கள். இந்த பன்னிரெண்டு ஆதித்யர்களும் கூடி வழிபட்டவைதான் செங்கல்பட்டுக்கு அருகேயுள்ள திருக்கழுக் குன்றமும், மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள செம்பனார்கோயிலும். ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சூரியன் வருவார்.
அவரை அந்தந்த மாதத்தின் முதல்நாளில் வழிபடுகிறோம். சூரியனுக்கே உலாத் திருமேனியாக விளங்கும் சோமாஸ்கந்தர் அல்லது சந்திரசேகர மூர்த்திக்கும் மாதத்தின் முதல் நாள் அபிஷேக அலங்காரமெல்லாம் செய்வர். மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள திருச்செங்காட்டங்குடி தலத்து ஈசனை இந்த துவாதச ஆதித்யர்கள் வழிபட்டனர். எனவே, இத்தலத்திலுள்ள ஒரு வீதியை துவாதச ஆதித்ய வீதி என்றழைக்கின்றனர். சிலப்பதிகார காப்பியப்படி, பூம்புகாரில் உச்சிக்கிழான் கோட்டம் எனும் பெயரில் சூரியனுக்கு கோயில் இருந்தது.
காவிரிப் பூம்பட்டிணம் என்கிற அந்த நகரம் மாபெரும் கடல் கோளால் விழுங்கப்பட, கோயிலும் அழிந்து விட்டது. கள்ளக்குறிச்சி அருகேயுள்ள வீரசோழபுரத்தில் சூரியநாராயண மூர்த்தி அருள்பாலிக்கிறார். தஞ்சாவூர், ஒரத்தநாடுக்கு அருகே பரிதியப்பர் கோயில் என்றே சூரியனின் பெயர்கொண்ட தலமும் அமைந்துள்ளது. இத்தல ஈசனுக்கு பாஸ்கரேஸ்வரர் என்று பெயர். சென்னை-விழுப்புரம் பாதையில் விக்கிரவாண்டிக்கு அருகே பனையபுரம் எனும் தலம் உள்ளது. இங்கு நேத்ரோத்தாரகேஸ்வரராக ஈசன் அருள்கிறார்.
மயிலாடுதுறை, திருவாடுதுறைக்கு அருகேயுள்ள பேராவூர் தலத்தில் ஆதித்தேஸ்வரர் காட்சி தருகிறார். ஆடுதுறைக்கு அருகேயுள்ள திருமங்கலக்குடியில் நவகிரகங்களுக்கும் சக்தி கொடுத்த பிராணநாதேஸ்வரரை தரிசிக்கலாம். இதே சூரியனார்கோயிலை அடுத்துள்ள திருக்கோடிக்காவல் ஊருக்கு அருகேயுள்ள பாஸ்கரராயபுரத்தில் பாஸ்கரேஸ்வரரும், அ ருகில் கீழசூரியமூலை எனும் தலத்தில் சூரிய கோடீஸ்வரரும் கருணையோடு அருள்பாலிக்கிறார்கள். சென்னை, பொன்னேரிக்கு அருகேயுள்ள ஞாயிறு என்றே ஒரு தலம் உள்ளது. இங்கு புஷ்பரதேஸ்வரர் எனும் திருப்பெயரில் சூரியன் அருளை அள்ளித் தருகிறார்.
சென்னை – வியாசர்பாடியில் ரவீஸ்வரராக கம்பீரமாக வீற்றிருக்கிறார். கும்பகோணம், அரித்துவாரமங் கலத்திற்கு அருகே பயரி தலத்தில் கோடி சூரியப் பிரகாசர் எனத் திருநாமம் பூண்டு அருள்பாலிக்கிறார். திருச்சி, முசிறிக்கு அருகேயுள்ள ஆமூர் தலத்தில் ரவி ஈஸ்வரராக ஈடிணையற்று விளங்குகிறார். இன்றும் பல்வேறு சிவாலயங்களில் சித்திரை, வைகாசி மாதங்களில் சூரியன் தமது கிரணங்களால் ஈசனை வழிபடுகிறார். சரியாக அந்த நேரங்களில் சூரியக் கிரணங்கள் லிங்க மூர்த்தியின்மீது படருவதை பல தலங்களில் தரிசிக்கலாம். சூரியனுடைய திருப்பெயரில் தீர்த்தங்களும் அமைந்துள்ளன. இந்த தீர்த்தத்தில் நீராடி ஈசனை தரிசிக்க, தீராத நோயெல்லாம் தீருகிறது.
மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள திருமீயச்சூர். மேல்மருத்துவத்தூருக்கு அருகேயுள்ள அச்சிறுப்பாக்கம், திருவெண்காடு புதன் ஸ்தலம், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில், சங்கரன்கோயில், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, திருவாடானை என்று பல தலங்களில் சூரிய தீர்த் தம் அமைந்துள்ளது. சூரியன் வழிபட்டுப் பேறு பெற்ற ஏழு திருமுறைத் தலங்களை திருவேதிக்குடி தலபுராணப் பாடலொன்று சுட்டிக் காண்பிக்கிறது:
‘கண்டியூர் வேதிகுடி நற்குடந்தைக் கீழ்க்கோட்டம்
பண்பரிதி நன்றியமம் பாங்கார் தெளிச்சேரி
பொற்புற வார்பனங்காட்டூர் நெல்லிக் காவேழும்
பொற்பரிதி பூசனை செய்யூர்’
திருவையாறைச் சுற்றியுள்ள திருக்கண்டியூர் மற்றும் திருவேதிக்குடி, கும்பகோணம் கீழ்க்கோட்டம் என்கிற நாகேஸ்வரர் கோயில், ஒரத்த நாட் டிற்கு அருகேயுள்ள பரிதியப்பர் கோயில், காரைக்கால் அருகேயுள்ள தெளிச்சேரி என்கிற கோயில்பத்து, விக்கிரவாண்டிக்கு அருகேயுள்ள பனங்காட்டூர், திருவாரூருக்கு அருகேயுள்ள திருநெல்லிக்கா போன்ற தலங்கள் சூரியன் ஈசனை பூஜித்த முக்கியத் தலங்களாகும். சூரிய வழிபாட்டிற்கு அடுத்ததாக மாட்டுப் பொங்கல் மனிதர்களின் வாழ்வினூடே ஒன்றாகிவிட்ட, ஆவினங்களை ஆராதிக்கும் திருநாளாகும்.