முனிவரின் நான்கு விதமான புதிரான ஆசிர்வாதங்கள்
ஒருமுறை ஒரு அரசவைக்கு ஒரு முனிவர் வருகை புரிந்தார். அங்கே அவர் பலருக்கும் ஆசிர்வாதங்களை வழங்கலானார். அங்கிருந்த இளவரசனைப் பார்த்தார்,
“ராஜ புத்திர சிரஞ்சீவஹ் [மன்னரின் மைந்தனே நீ சாகாமல் சிரஞ்சீவியாக வாழ்வாயாக]” என ஆசிர்வதித்தார்.
அடுத்து, அங்கே ஒரு தவசியின் மைந்தனைக் கண்டார்.
“ரிஷி புத்ர மா ஜீவ [தவசியின் மைந்தனே, உடனே நீ மாண்டுபோ]” என்றார்.
அடுத்து ஒரு தூய பெருமாள் பக்தனைக் கண்டார்,
“ஜீவோ வா…… மரோ வா [நீங்கள் வாழ்ந்தாலும் சரி, மாண்டாலும் சரி ]” என ஆசிர்வதித்தார்.
அடுத்து ஒரு கசாப்பு கடைக்காரரைக் கண்டார்,
“மா ஜீவ… மா மர [நீ வாழாதே, சாகவும் வேண்டாம்]”
முனிவர் சொல்வதை மன்னரால் புரிந்துகொள்ள இயலவில்லை. [என்றைக்கு அவங்க புரிஞ்சுக்கிற மாதிரி எளிதாக பேசியிருக்காங்க!!] அவர் சென்ற பின்னர் தனது மதி நிறைந்த அமைச்சர்களை அழைத்து முனிவரின் வார்த்தைகளை விளக்கும்படி கேட்டுக் கொண்டான். அவர்கள பின்வருமாறு விளக்கினர்.
அரசே, தங்கள் மகன் ஒரு ஊதாரி, செல்வாக்கு நிறைய இருப்பதனால் செய்யக் கூடாத செயல்கள் அத்தனையும் செய்து வந்துள்ளான் அவன் செத்தால் நரகம் தான். ஆகையால் சாகாமல் சிரஞ்சீவியாக இருக்கக் கடவது என்றார்.
அடுத்து தவசியின் மைந்தன், அவனது நற்செயல்களால் இறைவனை அடையும் பக்குவ நிலைக்கு வந்துவிட்டான், மேலும் வாழ்ந்து சம்சாரத்தில் சிக்கி அதிலிருந்து விலகி விடாமல் தற்போதே இந்த உடலை விட்டால் இறைவனை அவன் சேர்வது உறுதி, அதனால் நீ மாண்டு போ என்றார்.
தூய பக்தர், வாழும் போது பகவான் சேவையில் இருக்கிறார் மறைந்தால் இறைவன் இருப்பிடத்திற்க்கோ, அல்லது மண்ணுலகில் வேறெங்கு இறைவன் விரும்புகிறானோ அங்கே சென்று மீண்டும் இறைச் சேவையில் ஈடுபடப் போகிறார், ஆகையால் அவர் வாழ்வதும் மறைவதும் ஒன்றே.
கசாப்புக் கடைக்காரன் தினமும் எண்ணிலடங்க உயிர்களைக் கொன்று வருகிறான், தொடர்ந்து வாழ்ந்தால் அவனுடைய பாவச் செயல்கள் மேலும் வளரும். ஒரு வேலை மாண்டால், இதுவரை செய்த பாவத்திற்கு கொடிய தண்டனை காத்திருக்கிறது, எனவே வாழவும் வேண்டாம், சாகவும் வேண்டாம் என்று ஆசிர்வதித்தார்.
இதைக் கேட்ட பின்னர் மன்னனுக்கு முனிவரின் அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் விளங்கியது, உங்களுக்கு?!!