கடவுளை அடைய முயன்ற கதை.
ஒருமுறை நாரதமுனி வைகுந்ததிற்க்கு நாரயணரைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தார், வழியில் வேதங்கள் அனைத்தையும் பயின்ற ஒரு பண்டிதரை சந்தித்தார்.
நாரதரை வணங்கிய பண்டிதர், “தாங்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என அடியேன் அறிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார்.
அதற்க்கு, “நிச்சயமாக, நான் என் தலைவன் ஸ்ரீமன் நாராயணனைப் பார்க்கச் சென்று கொண்டிருக்கிறேன்!!” என பதிலுரைத்தார்.
“அப்படியா, மிக்க மகிழ்ச்சி!! எனக்கு ஒரு உதவி தங்களிடமிருந்து வேண்டுமே?”
“தாரளமாக என்னவென்று சொல்லுங்கள், என்னால் இயன்றால் செய்கிறேன்!!”
“தாங்கள் ஸ்ரீமன் நாராயணனைப் பார்க்கும் பொது, அடியேன் எப்போது வீடு பேரு அடைவேன் என்று கேட்டுச் சொல்கிறீர்களா?”
“நிச்சயமாக” என்று நாரதர் பதிலளித்துவிட்டு அங்கிருந்து பயணத்தை மேலும் தொடர்ந்தார்.
சற்று தொலைவு சென்ற பின்னர், ஒரு ஆலமரத்தடியில் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியைச் சந்தித்தார். நாரதர் எங்கு செல்கிறார் என்பதையறிந்த அவரும் அதே வேண்டுகோளை விடுக்க நாரதரும் சம்தித்து அங்கிருந்து வைகுந்தம் செல்கிறார்.
வைகுந்தத்தில் ஸ்ரீமன் நாராயணனைச் சந்தித்த நாரதர் முதலில் தனது அலுவல்கள் குறித்து பேசிவிட்டு இறுதியாக தான் அன்று சந்தித்த இருவரைப் பற்றி கூறி, அவர்கள் எப்போது வீடுபேறு அடைவார்கள் என வினவினார்.
சற்று யோசித்த பெருமாள், “அந்த செருப்பு தைக்கும் தொழிலாளி இப்பிறவி முடிந்ததும் பிறவிக் கடலை நீந்தியவராவர், அந்த பண்டிதன் இப்போதைக்கு வீடு பேரு பெரும் சாத்தியம் இல்லை, இன்னும் பல பிறவிகள் காத்திருக்க வேண்டும்” என்று இயம்பினார்.
இதைக் கேட்ட நாரதருக்கு அதிர்ச்சி கலந்த வியப்பு!! பெருமாளை நோக்கி, “ஐயனே, வேதங்களை நன்கு கற்றறிந்த பண்டிதன், ஆச்சாரமாக வாழும் ஒருவனை விட ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி விரைவாக பிறவிக்கடல் தாண்டி வீடு பேரு அடைவது எப்படி என்று எனக்குப் புரியவில்லை, சற்றே ஏன் சந்தேகத்தை தீர்த்து வைப்பீர்களா?” என வினவினார்.
அதைக் கேட்டு புன்னகைத்த பெருமாள், ஒரு ஊசியை நாரதரிடம் கொடுத்து, “நீ நேராக சென்று அவர்களை சந்திப்பாயாக, அவர்கள் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் எனக் கேட்டால், இந்த ஊசியின் காது வழியாக ஒரு யானையை நுழைக்க முயன்று கொண்டிருந்தேன் என்று சொல், அதற்க்கு அவர்கள் எந்த மாதிரி பதில் தருகிறார்கள் என்று பார், உன் சந்தேகம் தீரும்” என அனுப்பி வைத்தார்.
நாரதரும் அவ்வாறே திரும்ப வந்து, வழியில் சந்தித்த பண்டிதன் மீண்டும் கண்டார். அவரைக் கண்டதும் மகிழ்ந்த அந்தணர், “நாராயணரைச், சந்தித்தீர்களா? அவர் என்ன செய்து கொண்டிருந்தார்?” என வினவினார்.
நாரதர் பெருமாள் சொன்னபடி, ” ஊசியின் காது வழியாக ஒரு யானையை நுழைக்க முயன்று கொண்டிருந்தார்” என்றார்.
அதற்க்கு பண்டிதர், ” சுவாமி, தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள், ஆனாலும் இதை என்னால் நம்ப முடியவில்லை, ஊசியின் காதில் எப்படி யானை நுழையும்? ” என்றார். புன்னகைத்த நாரதர், அடுத்து செருப்பு தைக்கும் தொழிலாளியைச் சந்தித்து அதையே சொன்னார்.
அதைக் கேட்டதும், “ஆஹா, என் இறைவன் எல்லாம் வல்லவன், அவனால் இது நிச்சயம் முடியும்” என்று துள்ளிக் குதித்தார்.
இதைப் பார்த்த நாரதருக்கோ பெருத்த ஆச்சரியம். “ஐயா, நான் சொல்வதை அப்படியே நம்புவதா? எதை வைத்து யானையை ஊசியின் காதில் நுழைக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?” என்று வினவினார்.
அதைக் கேட்ட அந்த தொழிலாளி, “ஐயா யானை என்ன பெரிய யானை, அதை விட பல மடங்கு பெரியதைக் கூட ஊசியின் காதை விட சிறிய துளையிலும் என் இறைவனால் நுழைக்க முடியும்” என்றார்.
மேலும் வியந்துபோன நாரதர் “எப்படி?” என வினவினார்.
கீழே குனிந்து அங்கே கொட்டிக் கிடந்த ஆயிரக்கணக்கான ஆலமரத்தின் பழங்களில் ஒன்றை எடுத்து அதிலிருந்த கடுகினும் சிறிய விதையைக் காண்பித்த அந்த தொழிலாளி “இதோ நான் தினமும் வந்து உட்காரும் இந்த இடத்திலுள்ள ஆலமரத்தைப் பாருங்கள், இவ்வளவு பெரிய மரத்தையே இவ்வளவு சிறிய விதையினுள் வைக்க முடிந்த இறைவனுக்கு, யானையை ஊசியின் காதில் நுழைப்பதென்ன பெரிய விஷயமா?” என்று கேட்டார்.
இதைக் கேட்ட நாரதரின் சந்தேகம் தற்போது முற்றிலும் தீர்ந்தது!!