முல்லா ஒரு கிளையை அறுக்கலாம் என்று ரம்பத்துடன் மரத்தின் மீதேறினார்.
அந்தப் பக்கமாகப் போன ஒருவர், நன்கு கவனியுங்கள்!உட்கார்ந்திருக்கும் கிளையையே நீங்கள் அறுக்கிறீர்கள்.கிளையோடு நீங்களும் கீழே விழுந்து விடுவீர்கள். என்று முல்லாவைப் பார்த்து அவர் சத்தம் போட்டார்:
“நீங்கள் சொல்வதை நம்புவதற்கு நானென்ன முட்டாளா; அல்லது எதிர்காலத்தை எனக்குச் சொல்லக்கூடிய ஞானியா நீங்கள்?’ என்று எதிர்ப்புக் குரல் கொடுத்தார் முல்லா.
சொல்லி முடித்தவுடனேயே கிளையோடு தரையில் விழுந்தார் முல்லா.
தன்னுடன் பேசிய மனிதனைப் பார்க்க அடித்துப் பிடித்து ஓடினார் முல்லா.
“நீங்கள் சொன்னது பலித்து விட்டது! இப்போது சொல்லுங்கள், நான் எப்படி இறப்பேன்?’
தான் முக்காலமும் உணர்ந்த ஞானியல்ல என்று அந்த மனிதன் முல்லாவிடம் எவ்வளவுதான் எடுத்துச் சொல்லியும் முல்லா சமாதானமாகவில்லை.
கடைசியில் அந்த மனிதன் பொறுமையிழந்து எரிச்சலில் சொன்னான்: “நீங்கள் இப்போதே கூட இறக்கலாம்.‘
அந்த வார்த்தைகளைக் கேட்டவுடனேயே தரையில் விழுந்து ஆடாமல் அசையாமல் கிடந்தார் முல்லா.
அருகிலிருந்தவர்களெல்லாம் முல்லா அப்படிவிரைத்து கிடப்பதைப் பார்த்து அவரை சவப்பெட்டிக்குள் வைத்தனர்.
புதைக்கும் இடத்திற்கு போய்க் கொண்டிருக்கும் போது எந்த வழி சுருக்கமாமன வழி என்பதையொட்டி அவர்களுக்குள் பெருத்த சர்ச்சை வந்தது.
பொறுமையிழந்து போன முல்லா மெதுவாக தன் தலையை சவப் பெட்டியிலிருந்து வெளியே நீட்டிச் சொன்னார்:
“நான் உயிருடனிருந்த போது வழக்கமாக இங்கிருந்து இடது புறமாய் திரும்புவேன் அதுதான் விரைவாகப் போகும் வழி.”