மாரீச வதம் இது எந்த வகை தர்மம்..?
அத்யாத்ம ராமாயணம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே
தர்மத்தை நிலை நிறுத்துவதற்காக நான் யுகங்கள் தோறும் தோன்றுகிறேன் என்றார் பகவான்.
பகவான் அவதாரம் செய்துவிட்டால், அவர் செய்யும் காரியங்கள் அனைத்தும் ஏதாவதொரு தர்மத்தை நிலைநிறுத்துவதற்காகவே அமைய வேண்டும்.
இராவணனின் கட்டளைப்படி மான் வடிவமெடுத்தான் மாரீசன். பஞ்சவடியில் சீதாதேவியின் முன்பாக வந்து விநோதங்கள் காட்டி விளையாடுகிறான். அந்த மான் உண்மையில் அரக்கனென்று ராமனுக்கு நன்றாகத் தெரியும்.
அந்த மாரீசனால் ராமனுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு தீங்கும் நேரவில்லை. மாரீசன் கொடியவனுமல்ல. ஆனாலும் மாரீசன் ராமனால் கொல்லப்படுகிறான். மாரீசவதத்தில் பகவானின் செய்கையும், ஒரு தர்மத்தை நிலைநிறுத்துவதாகவே அமைகிறது.
முதன்முதலில் சுபாகு மாரீசன் இருவரும் ராமன் முன்பு தோன்றுவது, விஸ்வாமித்திரரின் யாகத்தைக் காக்க ராமன் வந்த சமயத்தில்.
சுபாகுவை ஒரே பாணத்தினால் கொன்றுவிட்ட ராகவனுக்கு, மாரீசனைக் கொல்வது ஒரு பொருட்டல்ல.
ஆனால் ராமன் மாரீசனை நூறு யோஜனை தூரத்திற்கு அப்பாலுள்ள சமுத்திரத்தில் அழுத்தினாரே தவிர, மாரீசனை அப்போது கொல்லவில்லை. ராமபாணத்தினால் சுபாகு பஸ்மமானது அற்புதமில்லை. மாரீசன் உயிர் தப்பியதுதான் அற்புதம். இது எந்த தர்மம்?
அயோத்தியா காண்டத்தில் ஒரு சம்பவம். ராமனும் சீதாதேவியும் ஏகாந்தமாக அரண்மனையில் அமர்ந்திருக்கும்போது தேவரிஷி நாரதர் அங்கு வருகிறார். சீதா, ராமனை வணங்கிவிட்டு ராமனைப் பார்த்து;
ப்ரபோ, தேவகாரியத்திற்காக அல்லவோ தாங்கள் பூலோகத்தில் அவதரித்தீர்கள். தங்கள் தந்தை தசரதர், வசிஷ்டர் போன்ற மகரிஷிகளைக் கலந்தாலோசித்து, தங்களுக்கு ராஜ்ய பட்டாபிஷேக ஏற்பாடுகளைச் செய்துவருகிறார்.
தாங்கள் ராஜ்யபரிபாலனம் செய்வதாக ஒப்புக்கொண்டுவிட்டால், இராவணவதம் நடைபெறுமா தேவகாரியம் பூர்த்தியாகுமா என்று எனக்கு சந்தேகம் என்றார்.
இதைக்கேட்டு சிரித்த ராமன், நாரதரே, என் பிரதிக்ஞையைப் பற்றி ஞாபகப்படுத்தவேண்டிய அவசியமே இல்லை. ஒரு காரியம் செய்யவேண்டு மானால் அதற்கொரு நியதியுண்டு.
அந்த நியதியின்படி நான் ஒவ்வொரு ராட்சதனாக வதம்செய்து என் பிரதிக்ஞையை நிறைவேற்றத்தான் போகிறேன்.
இந்த பாரதமோ கர்ம பூமி.
கர்மங்கள் என்றால் கர்மபலனும் உண்டு.
ஸஞ்சிதம், ஆகாமி, பிராரப்தம் என்று அவை மூவகைப்படும்.
முற்பிறவிகளில் செய்த கர்மங்கள் ஸஞ்சிதம்.
ஞானம் ஏற்பட்ட பிறகு இந்தப் பிறவியில் செய்யும் கர்மங்கள் ஆகாமி.
முற்பிறவிகளில் செய்த கர்மங்களில் பலன் கொடுக்க ஆரம்பித்தவை பிராரப்தம் எனப்படும்.
என்னுடைய ஸ்வரூப ஞானம் ஸஞ்சித கர்மாக்களையும், இனி செய்யப்போகும் ஆகாமி கர்மாக்களையும் ஒழித்துவிடும். ஆனால் பிராரப்தம்- அதன் காலத்தை செலுத்தியே தீரவேண்டும். அந்தபிராரப்தம் முடிந்து க்ஷீண தசையை அடைந்த பிறகுதான் ஞானிக்கும் கூட தேக சம்பந்தம் நீங்கமுடியும்.
எனவே நான் அவதாரம் செய்துவிட்டவுடனே ராட்சத வதமென்ற காரியத்தை முடித்துவிடுவது தர்மமல்ல. அந்த அந்த ஜீவனின் பிராரப்தம் முடிந்தபிறகுதான் நான் எனது காரியத்தைச் செய்வது தர்மம் என்று நாரதருக்கு பதிலளிக்கிறார் ராமன்.
விஸ்வாமித்திரரின் யாகம் காக்கும் காலத் திலேயே மாரீசனைக் கொல்லாமல்விட்டது, அவனது பிராரப்தம் எஞ்சியிருந்த காரணத் தால்தான்.
இந்த தர்மத்தை ராமர் நிலைநிறுத்தியதால் தான் மாரீசன் அன்று முதலில் உயிர் தப்பியது அற்புதமாக இருந்தது என்று கவி கூறுகிறார்.
ராம சிந்தனையிலேயே உயிர்விடுபவன் பிராமணனாக இருந்தாலென்ன, ராட்சதனாக இருந்தாலென்ன, பாவியாக இருந்தாலென்ன, தார்மீகனாக இருந்தாலென்ன?
ராம நாமஸ்மரணமே மோட்ச மார்க்கம் என்ற உண்மையான தர்மம் இங்கே நிலைநாட்டப்படுகிறது.
ராமநாமத்தின் உயர்வையும் பெருமையும் உணர்ந்து, ராமநாமம் சொல்லி அருளைப் பெறுவோம்.