Home » படித்ததில் பிடித்தது » சங்குகளின் வகைகள்!!!
சங்குகளின் வகைகள்!!!

சங்குகளின் வகைகள்!!!

சங்குகளில் இரண்டு வகைகள் உண்டு. இடப்பக்கம் சுழிந்து செல்லும் சங்குகள் உலகில் எளிதாகக் கிடைக்கும். வலது பக்கம் சுழியுடைய வலம்புரிச் சங்குகள் (clock wise whorls) அபூர்வமாகவே கிடைக்கும். வலம்புரிச் சங்குகளை இந்துக்கள் மிகவும் புனிதமாகக் கருதுகின்றனர்.

Conch (சங்கு) என்னும் ஆங்கிலச் சொல் ‘சங்க’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து வந்ததே!
பூஜை செய்யும் சங்குகளைத் தரையில் வைக்ககூடாது என்பதால் அதற்கு வெள்ளி அல்லது தங்கத்தில் அழகான ‘ஸ்டான்ட்’ செய்துவைக்கின்றனர்.

வலம்புரிச் சங்குகள் பற்றிச் சமய நூல்களில் நிறைய விஷயங்கள் கிடைக்கின்றன. கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு 1008 சங்குகளை வைத்து அபிஷேகம் செய்வது பல கோவில்களில் நடைபெறுகிறது.

கோவில்களிலும் போர்க்களங்களிலும் அரசர் நிகழச்சிகளிலும் சங்கநாதம் முழங்கும். பஞ்ச பாண்டவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சிறப்பான சங்கை வைத்திருந்தனர். அதற்குத் தனியான பெயரும் உண்டு. கிருஷ்ணனின் சங்கின் பெயர் ‘பாஞ்சஜன்யம்’; பஞ்ச பாண்டவர்களின் சங்குகளின் பெயர்கள் பின்வருமாறு: தர்மன்- ‘அநந்த விஜயம்’ ,பீமன்- ‘பௌண்டரம்’ , அர்ஜுனன்-‘தேவதத்தம்’, நகுலன்- ‘சுகோஷம்’ , சகாதேவன்- ‘மணிபுஷ்பகம்’.
திருவாங்கூர் மகாராஜா கொடியிலும் கூட சங்கு இடம்பெற்றது.

தமிழ்ச் சங்க இலக்கியத்தில் பல இடங்களில் வலம்புரிச் சங்கு பற்றிப் புலவர்கள் பாடுகின்றனர். அரண்மனைகளிலும் போர்க்களங்களிலும் எப்படி ஒலித்தது என்பதை பின்வரும் இடங்களில் படிக்கலாம்:

அக.201, 350; ஐங்குறு.193; கலி.135; திரு.23, 127; நெடு. 142, பதி. 67, பரி. 3-88, 13-44, 15-59; புற225, 397;பெரு.35; முல்லை.2
தருமி என்னும் ஏழைப் பிராமணப் புலவருக்குச் சிவபெருமான் பாட்டு எழுதிக் கொடுத்து அவன் ஆயிரம் பொன் பரிசு பெறும் தருணத்தில் அதை பாண்டியப் பேரரசின் தலமைப் புலவர் நக்கீரர் எதிர்த்தார். உடனே நக்கீரருக்கும் சிவபெருமானுக்கும் இடையே பெரிய வாக்குவாதம் வெடித்தது. அப்போது “சங்கு அறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்?” என்று சிவபெருமானின் குலத்தையே கிண்டல் செய்தார் நக்கீரர். இதிலிருந்து வேளாப் பார்ப்பான் ( அக்கினி வளர்த்து யாகம் செய்யாத பார்ப்பனர்கள்) சங்கு வளையல் செய்து விற்றுவந்தது தெரிகிறது. இதற்குப் பின்னர் சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்து நக்கீரனை வாட்டிய போதும் “நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று தமிழுக்காக வீர முழக்கம் செய்தார் சங்கு அறு தொழிலில் ஈடுபட்ட நக்கீரன்.

இவ்வளவு இடங்களில் வலம்புரிச் சங்கைக் குறித்துப் புலவர்கள் பாடுவதே அதன் மகிமையை உணர்த்தும்.

வங்காளிகள் இன்றும் கூட திருமணத்தில் சங்கு வளையல்கள் கொடுக்கின்றனர். வாழ்நாள் முழுதும் அணியும் புனிதப் பொருள் என்று கருதுகின்றனர்.

சங்குகளில் வளையல், மோதிரம், மாலை முதலியன செய்து அணிவது இந்துக்களிடையே அதிகம் காணப்படுகிறது சிவஸ்ரீ பாலசுந்தரக்குருக்கள் எழுதிய கட்டுரை ஒன்றில் பின்வரும் விஷயங்களைத் தருகிறார்: சங்க ஒலி ஓம்கார ஒலியைக் குறிக்கும். வைதீக சைவர்கள் ஆத்மார்த்தமாகவோ பரமார்த்தமாகவோ செய்யும் பூஜைகளில் சங்கு பூஜை முக்கிய இடத்தைப் பெறுகிறது. நத்தார்படையின் மகிமை சொல்லுதற்கரியது. சங்குப் படைக்கு மத்தியில் அதன் அதி தேவதைகளான கங்கா தேவியும் வருணனும் வசிக்கின்றனர். சங்கின் முன்பாகத்தில் கங்கை, சரஸ்வதியும் பின்பாகத்தில் பிரஜாபதியும் வசிக்கின்றனர்.

“ ஏ, பாஞ்சஜன்யமே ! நீ முன்னர் திருப்பாற் கடலில் உதித்தனை. மஹாவிஷ்ணுவினால் கையில் தரிக்கப்பட்டு எல்லா தேவர்களாலும் பூஜிக்கப்பட்டனை. தேவர் தம் பகைவராகிய அசுரர்களின் மனைவியரின் கருக்களை எல்லாம் உன் பேரொலியினால் ஆயிரம் தூள் தூளாகினை. உனக்கு வணக்கம் “ என்ற மந்திரத்தினால் சங்கில் தீர்த்தத்தை நிரப்பவேண்டும்.
சங்கு, ஹரியின் இருப்பிடம். பணத்தைக் கொண்டுவரும். சங்கு தீர்த்தம் பற்றி பத்ம புராணம் விரிவாகக் கூறுகிறது. சங்கில் பாலை நிரப்பி இறைவனை நீராட்டினால் ஆயிரம் யாகங்கள் செய்த பலனை அடையலாம். கங்கை நீரை நிரப்பி அபிஷேகம் செய்தால் பிறவிப் பிணியை அறுக்கலாம் என்றும் புராணங்கள் கூறும்.”
தட்சிணாவர்த்த(வலம்புரிச் சங்கு) சங்கு கொண்டு அர்ச்சிப்போன் ஏழு பிறவிகளில் செய்த வினைகளயும் நீக்கலாம் என்று ஸ்காந்தம் கூறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top