ஒரு பணக்காரர் வீட்டில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு அறுசுவை விருந்து ஒன்று நடைபெற்று. விருந்தில் அந்த ஊர் பிரமுகர்கள் பலரும் சாப்பிட்டவாறு அரட்டையடித்துக் கொண்டிருந்தனர்.
விருந்துண்ணுவோர் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார்.
பிரமுகர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஆள் தங்கள் வீரப்பிரதாபங்களைக் குறித்துப் பொய்யும் புனை சுருட்டுமான பவ நிகழ்ச்சிகளைத் தாங்கள் சாதித்தாகக் கூறி ஏதோ பெரிய சாகசக்காரர்கள் போல் தற்பெருமையடித்துக் கொண்டிருந்தார்கள்.
முல்லா எல்லாவற்றையும் தலை குனிந்து கேட்டுக் கொண்டிருந்தார்
உடனே அவர் அங்கிருந்த பிரமுகர்களை நோக்கி “உங்களுக்கு நான் செய்த வீரசாகசம் ஒன்றைச் சொல்லட்டுமா?” என்று கேட்டார்.
“முல்லாவினால் கூட வீரசாகசங்கள் செய்ய முடியுமா?” என்று கூறி கலகலவென ஏளனமாகச் சிரித்த பிரமுகர்கள்” எங்கே உமது வீரசாகசத்தை கூறும் பார்ப்போம்” என்று கேட்டனர்.
“ஒரு தடவை ஒரு நடுக்காட்டில் பத்துப் பதினைந்து கொள்ளைக்காரர்களை நான் விரட்டி அடித்தேன் என் விருப்பம் போல் ஆட்டிப் படைத்தேன். நான் செல்லுமிடங்களுக்கெல்லாம் அவர்கள் நாய்களைப் போல என்னைப் பின்தொடர்ந்து ஒடிவந்தார்கள்” என்றார் முல்லா.
“அப்படியா? இது உண்மையிலேயே பெரிய விஷயந்தான். உம் பின்னால் அவர்கள் ஒடி வருவதற்கு அப்படி என்ன மந்திர மாயம் செய்தீர்?” என்று பிரமுகர்கள் வியப்போடு வினவினார்.
“அது அப்படியொன்றும் பெரிய விஷயம் அல்ல. அவர்களைக் கண்டதும் நான் பயந்து ஒடினேன். என்னைப் பிடிப்பதற்காகஅவர்கள் துரத்திக் கொண்டு வந்தார்கள்” என்றார் முல்லா.