யானைகள் பற்றிய தகவல்கள்:-
நிலத்தில் வாழும் விலங்குகளுள் மிகப் பெரியவை யானைகள். யானை பாலூட்டி வகையைச் சார்ந்த ஒரு தாவர உண்ணி விலங்காகும். இவை கூட்டமாக வாழும் தன்மை உடையவை. மூத்த ஆண் யானை ஒன்று, கூட்டத்தினை தலைமை தாங்கி நடத்திச் செல்லும்.
இவற்றின் வாழ்நாள் சுமார் 70 ஆண்டுகள் ஆகும். மனிதர்களைத் தவிர்த்து விலங்குகளில் யானைகளே அதிக நாட்கள் வாழும் விலங்கு ஆகும். இவை மிகவும் வலிமையானவை. கொடிய விலங்குகளாகிய சிங்கம், புலி முதலியனவும் நெருங்க அஞ்சும். மிக அபூர்வமாக பல சிங்கங்கள் ஒன்றாக சேர்ந்து, தனியாக வரும் களைத்த அல்லது இளைத்த யானையைக் கொல்லும்.
யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன. அவை ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டுயானைகள் மற்றும் ஆசிய யானைகள் ஆகும்.
ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளை விட உருவத்தில் பெரியவை. பெரிய காது மடல்களைக் கொண்டுள்ளன. ஆப்பிரிக்க யானைகளில் ஆண் பெண் இரண்டுக்கும் தந்தங்கள் உண்டு. ஆனால், ஆசியப் பெண் யானைகளுக்கு தந்தம் அரிதாகவே காணப்படுகிறது.
ஆப்பிரிக்க யானைகளின் முதுகுப்புறம், தலைக்கு அடுத்து சற்று உள்நோக்கி வளைந்தும் புடைத்த நெற்றி மேடுகள் இல்லாமல் சமனாகவும் இருக்கும். இவற்றின் துதிக்கை நுனியில் இரண்டு இதழ்கள் இருக்கும்.
முன்னங்கால்களில் நான்கு அல்லது ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் மூன்று நகங்களும் இருக்கும். ஆசிய யானைகளின் முதுகு சற்று உயர்ந்து மேடாக இருக்கும். நெற்றியில் இரு மேடுகளும், காது மடல்கள் சிறியனவாக இருக்கும். துதிக்கை நுனியில் ஒரே ஒரு இதழே இருக்கும். முன்னங்கால்களில் ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் நான்கு நகங்களும் இருக்கும்.
யானையின் மூளை சுமார் ஐந்து கிலோ எடை உடையது. யானைகள் நினைவாற்றல் மிக்கன. யானைகள் மிகச்சிறந்த கேட்கும் திறனையும் மோப்பத்திறனையும் பெற்றுள்ளன. யானையின் கண் சற்று கிட்டப்பார்வை கொண்டது.
இவற்றின் தும்பிக்கையும் உணர்திறன் மிக்கது. இவற்றின் காதுகள் மட்டுமன்றி தும்பிக்கை, பாதங்கள் போன்றவையும் மிகக் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளையும் உணர வல்லன.