பறவைகள் பற்றிய தகவல்கள்:-
செங்கால் நாரைகள் அல்லது வர்ண நாரைகள் நீர்நிலைகளிலும், குளங்களிலும், காயல்களிலும் (உப்புநீர்) காணப்படும் பறவை ஆகும்.
வெள்ளை நிற செங்கால்நாரையின் அலகு மஞ்சள் நிறத்தில் நீண்டும், நுனி சிறிது கீழ்நோக்கி வளைந்தும் காணப்படும். சிறகின் நுனியில் நீண்ட ஊதா நிற சிறகுகள் காணப்படும். இதன் நாக்கு பனங்கிழங்கின் உள்குருத்து போன்றிருக்கும். இதன் முகமும், தலையின் முன்பகுதியும் இறகுகளற்று காணப்படும். தூரப்பார்வையில் இது கறுப்பாக தெரிந்தாலும், இது அடர்ந்த ஊதா நிறமே. இரண்டு தோள்பட்டைகளின் நடுவிலும், முதுகின் பின்பகுதியில் வாலுக்கருகிலும் பளிச்சென்ற சிவப்புநிற இழை இறகுகள் சிதறியதுபோல் காணப்படும். மார்பில் இரண்டு சிறகுகளுக்கிடையில் ஊதாநிறப்பட்டை காணப்படும். வயிற்றின் பிற பகுதிகள் வெண்மை நிறத்தில் காணப்படும். வால் முக்கோண வடிவத்தில் ஊதா நிறத்தில் காணப்படும். கால்கள் சிவப்பு நிறத்திலும், சில சமயங்களில் இளம் ஊதா நிறத்திலும் காணப்படும்.
எங்கெல்லாம் வாழும் சூழ்நிலை காணப்படுகிறதோ அங்கு சென்று இரைதேடும். நீரில் நடந்துசெல்ல வசதியாக இறகுகளற்ற நீண்ட கால்கள், முன்னால் மூன்று விரல்களுடனும், பின்னால் ஒரு விரலுடனும் காணப்படும். விரலிடைச் சவ்வு தேய்ந்து காணப்படும்.
இவற்றின் சிறகுகள் மிகவும் அகலமானது. பூமியின் வெப்பத்தால் மேலெழும் வெப்பக்காற்றில் பறப்பதால், எளிதாக பறந்துசெல்லும். எனவே, நாரைகள் பகலில்தான் இடம்பெயர பறந்துசெல்லும். பறக்கும்போது கழுத்தைச் சுருக்காது நீட்டி வைத்திருக்கும். கூட்டமாக, நேராக பறக்கும். நீர்நிலைகளில் இறங்கும்போது படிப்படியாக உயரத்தைக் குறைத்து வட்டமிட்டவாறே இறங்கும். மேலெழும்பும் போதும் வட்டமிட்டவாறே மேலெழும்பும்.
இவற்றின் ஆபத்தை உணரும் ஆற்றல் வியப்பிற்குரியது. யாரால் ஆபத்துவரும்? யார் பாதுகாப்பு தருவார்கள் என்பதை நாரைகள் எளிதில் உணர்ந்து கொள்ளும்.
பெப்ரவரி, மார்ச் மாதங்களில் உடை மரங்கள், புளியமரங்களில் கூடுகட்டும். கூடுகள் நடுவில் குழியுடைய அகன்ற மேடை போன்று காணப்படும். கூடு கட்ட 30 நாட்கள் எடுத்துக்கொள்ளும். ஒரு மரத்தில் 30 கூடுகள் வரை காணப்படும். வெள்ளை நிறத்திலான 2 அல்லது 4 முட்டைகளை இடும். இவை அடைக்காக்கும் நாட்கள் 21 ஆகும். குஞ்சுகள் முழுவளர்ச்சியடைய ஓராண்டு ஆகும். ஓராண்டுவரை ஒலி எழுப்பும். அதன்பிறகு குரல்பை செயலற்று விடும். அலகுகளை மோதி கட் கட் என்ற ஒலியை எழுப்பும். கூட்டிலிருந்து சுமார் 60 கி.மீ. வரை உள்ள நீர்நிலைகளில் மேய்ந்துவிட்டு தொண்டையில் உணவைச் சேமித்துவைத்து கூட்டிற்குவந்து குஞ்சுகளுக்கு ஊட்டுகிறது.
நீரில் கூட்டமாக இரைதேடிச் செல்லும். அப்போது அலகைப் பிளந்தவாறே நீரில் தலையை நுழைத்து, இரு பக்கமும் அசைத்து மீனைப் பிடித்து அலகால் நசுக்கி கொன்று விழுங்கும். இதன் உணவுகள் மீன்கள், தவளைகள், பாம்புகள், பெரிய வெட்டுக்கிளிகள் முதலியனவாகும்.
குஞ்சுகளின் வெப்பத்தைத் தணிக்க சிறகுகளில் நீரை ஈர்த்து, கூடுகளின் மீது உதறும். சூரிய வெப்பம் குஞ்சுகளைத் தாக்காதவாறு காலையில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கியும், மாலையில் அதற்கு எதிராகவும், நண்பகலில் கூட்டிற்கு மேலேயும் நின்று பாதுகாக்கும்