மூன்று முட்டையால் கிடைத்த நட்பு!…..
சூடான் நாட்டு அரசனுக்கு அழகான மகன் பிறந்தான். அவனுக்கு அனந்தா என்று பெயர் சூட்டினர்.
அரசனுக்கிருந்த குடிப்பழக்கம் காரணமாக மகன் பிறந்த சிறிது நாட்களிலேயே அவன் நோய் வாய்ப்பட்டு இறந்துபோனான்.
இளவரசன் அனந்தாவை ராணி நல்ல திறமையான வீரனாக வளர்த்து வந்தாள். இருப்பினும், அவள் தன் கணவனைப் போலவே தன் மகனும் தீய நண்பர்களுடன் சேர்ந்து குடி மற்றும் தீய பழக்கங்களைக் கற்றுக் கொண்டு விடக் கூடாது என்று கவனமாக இருந்தாள்.
அவள் ஒரு நாள் மகன் அனந்தாவை அழைத்து “மூன்று முட்டை மந்திரம்” ஒன்றைச் சொன்னார்.
இந்த மூன்று முட்டை மந்திரத்தைப் பயன்படுத்தித்தான் நட்பு கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினாள். அதாவது, யாரிடம் நட்பு கொள்ள விரும்புகின்றாயோ, அவர்களை அழைத்து மூன்று அவித்த முட்டைகளை விருந்தாகக் கொடுக்க வேண்டும். அவர்கள் அந்த முட்டையை எப்படி உண்கிறார்களோ அதன்படி அவர்களை நண்பர்களாக ஏற்றுக் கொள்ளலாம் என்றார்.
அனந்தாவுடன் மந்திரி ஒருவரின் மகன் நெருங்கி பழகினான். ஒன்றாக போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டனர். எனவே, அனந்தா ஒரு நாள் அவனை அழைத்து மூன்று முட்டைகளைக் கொடுத்தான்.
அவன் ஒரு முட்டையைச் சாப்பிட்டுவிட்டு, இரண்டு முட்டைகளை அனந்தாவிடமே திருப்பிக் கொடுத்தான்.
இதை அவன் அம்மாவிடம் தெரிவித்தான்.
உடனே அவள், “உன்னிடம் நல்ல பெயர் வாங்க, உனக்கு இரண்டு முட்டைகளைக் கொடுத்துள்ளான். இவன் நெருங்கிய நட்பு உனக்கு வேண்டாம்” என்றார்.
சில வாரங்கள் கழித்து, கணக்கு வழக்குகளைப் படிக்கும் போது வணிகர் மகன் ஒருவனின் நட்பு கிடைத்தது.
அனந்தா, அவனிடம் மூன்று முட்டைகளை கொடுத்தான்.
அவன் மூன்று முட்டைகளையும் வாங்கி முழுதாகச் சாப்பிட்டு விட்டான்.
இதைப் பற்றி அனந்தா தாயிடம் தெரிவித்தான்.
அவன் தாய், “மகனே, அவனுக்கு உன் மீது சுத்தமாக அக்கரை இல்லை. இவன் நட்பு வேண்டவே வேண்டாம்” என்றார்.
அடுத்து இன்னொரு மந்திரி மகனின் நட்பை விரும்பி அவனிடம் மூன்று முட்டைகளைக் கொடுத்தான் அனந்தா.
ஆனால் அவனோ, அந்த மூன்று முட்டையும் அவனிடமே திருப்பி அளித்தான்.
இதைத் தாயிடம் தெரிவித்த போது, “மகனே, அவன் உன்னை முழுமையாக மதிக்கவேயில்லை… அவன் நட்பை வேண்டாம் என்று ஒதுக்கி விடு” என்றாள்.
அனந்தா ஒரு நாள் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான்.
அவன் வேட்டையாடிவிட்டு அரண்மனை திரும்புவதற்குள் இருட்டி விட்டது. அதனால் காட்டிலே இருக்கும் விறகுவெட்டியின் வீட்டில் தங்க நேர்ந்தது. அங்கு விறகு வெட்டியின் மகன் விநோதன் இவன் வயதுடையவன். இருவரும் இரவு நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.
மறுநாள் அனந்தாவோடு விநோதனும் வேட்டையாடச் சென்றான்.
அனந்தா விநோதனை அரண்மனைக்கு அழைத்தான் .
அவனுக்கும் மூன்று முட்டைகளைத் தட்டில் வைத்தான்.
விநோதன் எழுந்து மேஜை மீது இருந்த கத்தியை எடுத்து ஒரு முட்டையை சரிபாதியாக வெட்டி இருவரும் ஒன்றரை ஒன்றரை முட்டையாகச் சாப்பிடலாம் என்றான்.
அனந்தா விநோதனின் செயலைத் தாயிடம் தெரிவித்தான்.
தாய் மகிழ்ந்தாள். பின்னர், “மகனே, அவன் விறகு வெட்டியின் மகனாக இருந்தாலும், உன்னைச் சமமாக நினைத்ததன் மூலம் உன்னை நண்பனாக ஏற்றுக் கொண்டுள்ளான். எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அவன் உன்னிடம் நட்பு பாராட்டுகிறான். இது தான் நட்பின் முக்கியத் தேவை. அவனுடைய நட்பை உடனடியாக ஏற்றுக் கொள்” என்றார்.
இளவரன் அனந்தாவுடன் விநோதனுக்கும் அனைத்துக் கல்வி, போர் முறைகளையும் கற்றுக் கொடுக்க ராணி உத்தரவிட்டாள். இருவரும் அனைத்திலும் தேர்ச்சி பெற்றனர். பின்னர் அனந்தா அரசனானான். விநோதன் அந்நாட்டின் அமைச்சராக நியமிக்கப்பட்டான். இருவரும் இணைந்து நாட்டில் நல்லாட்சி வழங்கினர்.