Home » உடல் நலக் குறிப்புகள் » உடலில் ஏற்படும் கொழுப்பு கட்டிகள்!!!
உடலில் ஏற்படும் கொழுப்பு கட்டிகள்!!!

உடலில் ஏற்படும் கொழுப்பு கட்டிகள்!!!

மனித உடலில் ஏற்படும் கொழுப்பு கட்டிகள் பற்றிய தவல்கள்:-

கொழுப்புக் கட்டிகள் – லைப்போமா (lipoma) எனப்படும் இவை ஆபத்தற்றவை. புற்று நோய் என்ற கலக்கத்திற்கு இடமே இல்லை. இவை சருமத்திற்குக் கீழாக வளர்கின்றன. தசை, சவ்வு எலும்புகள் போல ஆழத்தில் இருப்பதில்லை. மேற்புறத்தில் மட்டுமே இருக்கும். ஒன்று முதல் பல கொழுப்புக் கட்டிகள் ஒருவரில் தோன்றக் கூடும்.

பொதுவாக கட்டிளம் பருவத்திலேயே ஆரம்பித்தாலும், நடுத்தர வயதில் வெளிப்படையாகத் தெரியும். ஆண்கள் பெண்கள் என வித்தியாசம் இல்லாமல் இருபாலாரிலும் தோன்றும்.

காரணம் உண்டா?

இவை தோன்றுவதற்கான காரணம் தெரியாது. பொதுவாக குடும்பத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர்களில் அவதானிக்கப்படுவதால் பரம்பரைக் காரணிகள் இருக்கலாம் என நம்பப்படுகிறது. வெளிப்டையான காயங்கள் இல்லாத ஊமைக் காயங்கள் அல்லது கண்டல் காரணங்களால் ஏற்படக் கூடும் எனவும் நம்பப்படுகிறது.

அறிகுறிகள்

திடீரெனத் தோன்றும் நோயல்ல. படிப்படியாக பல வருடங்களின் பின்னர் அதுவும், தொட்டால் தெரியுமளவு வளர்ந்த பின்னரே ஒருவர் அவதானிப்பார். வெளிப்படையாகத் தெரிய மேலும் காலம் எடுக்கும்.

பொதுவாக மென்மையானதாக இருக்கும். குழைத்த மாப் போல அல்லது ரப்பர் போல இருக்கும்.

தோலுக்குள் கீழாக நளுநளுவெனத் தோலுடன் ஒட்டாது நழுவிச் செல்வது போலிருப்பது இதன் முக்கிய அறிகுறியாகும்.

இதன் வடிவம் கும்பிபோல அல்லது முட்டைபோல நீள் வட்டமாக இருக்கும். அளவில் பெரு வேறுபாடுகள் இருக்கலாம். 2-10 செமி வரை வளரலாம். ஆனால் அதனிலும் பெரிதாகவும் நாம் காண்கிறோம்.

தோள், கழுத்து முதுகு, வயிற்றுப் புறம், கை போன்ற இடங்களில் காணப்;படுகிறது. ஆனால் சருமத்தில் கொழுப்பு உள்ள இடமெங்கும் தோன்றுவதற்கு வாய்ப்பு உண்டு.

கண்ணில் படுவதைத் தவிர இந்தக் கொழுப்புக் கட்டிகள் வேறெந்த அறிகுறிகளையும் காண்பிப்பதில்லை.

தொட்டால் கூட வலிப்பதில்லை. ஆயினும் சில மட்டும் இறுக அழுத்தினால் சற்று வலியை ஏற்படுத்தும். அவ்வாறு வலிப்பவை பொதுவாகச் சற்று குருதியோட்டம் அதிகமான கொழுப்புக் கட்டிகளாகும். இவற்றை அஞ்சியோ லைப்போமா என்பார்கள். அவையும் ஆபத்தானவை அல்ல என்பது குறிப்பி;த்தக்கது.

புற்றுநோயாக மாறுமா?

கொழுப்புக் கட்டிகள் உடனடியாக ஆபத்தானவை அல்ல என்றாலும் இவை எதிர்காலத்தில் புற்றுநோயாக மாறுமா என்ற பயம் ஏற்படுவது இயல்பே. ஆனால் அவ்வாறு மாறுவதில்லை.

ஆயினும் லைப்போ சார்க்கோமா என்ற ஒருவகை கொழுப்புப் புற்றுநோய் இருக்கிறது. தோலில் அல்லாது சற்று ஆழத்தில் கண்ணில் படாதவாறு இருக்கும் சில கொழுப்புக் கட்டிகள் திடீரென பருமனடைந்து வலியையும் கொடுக்குமாயின் மருத்துவரிடம் காண்பிப்பது அவசியம். ஊசி மூலம் சிறு துளியை எடுத்து ஆராய்ந்து (biopsy) பார்ப்பார்கள்.

சிகிச்சை

பொதுவாக எந்தச் சிகிச்சையும் தேவைப்படாது. ஓரளவு காலத்தின் பின் அது வளர்ச்சியடைவது தானாகவே நின்றுவிடும். ஆயினும் மறையாது. அது இருப்பதால் அருகில் உள்ள தசைகளின் இயக்கத்திற்கு பிரச்சனை இருக்குமாயின் அகற்ற நேரிடும். சத்திர சிகிச்சை மூலம் அன்றி உறிஞ்சி எடுப்பதன் (Liposuction) மூலம் அகற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top