காசி யாத்திரையின் முக்யத்துவம் என்ன?
கங்கை என்ற ஒரு நதியே பூஉலகில் இல்லாத காலம்.
அப்போது நமது பூலோகத்தை ஆண்டு வந்த மன்னன் பகீரதனுக்கு ஒரு பெரிய சோதனை வந்தது.
அது என்ன தெரியுமா?
அந்த மன்னனது காதில் ஒரு பேரிரைச்சல் ஒலிக்க ஆரம்பித்தது.
அவனால் அந்த இரைச்சலை சகித்துக்கொள்ளவோ, தாங்கவோ முடியவில்லை. எந்த வேலையும் செய்யமுடியவில்லை. மிகவும் துன்பப்பட்டான். நாட்கள் சென்றன, மாதங்கள் சென்றன, வருடங்கள் உருண்டோடின .
இப்போது அந்த இரைச்சலை புரிந்து கொள்ள தெரிந்து கொண்டான் மன்னன். ஒரே ஓலமாக இருந்த இரைச்சலில் வார்த்தைகள் இருப்பதை உணர்ந்தான் பகீரதன்.
கூர்ந்து கேட்டதில் அந்த ஒலிகள் “ எங்களுக்கு நல்ல வழி காட்டு எங்களை இங்கிருந்து விடுதலை செய்து விடு” என்பதுதான் அந்த வார்த்தைகள்.
ஒன்றும் புரியவில்லை பகீரதனுக்கு. இதென்ன, எங்களுக்கு நல்ல வழி காட்டு எங்களை இங்கிருந்து விடுதலை செய்து விடு என்றால் யாரை எங்கிருந்து விடுவிப்பது, யாருக்கு நல்ல வழி காட்டுவது? என்றாலும் யார் இவர்கள் ,ஏன் என்னிடம் இதைக் கேட்கவேண்டும் என்று பலவாறாக எண்ணி திகைத்துப்போய் செய்வதறியாது தடுமாறிய வேளையில் நாரத மகரிஷி அவ்விடம் வருகின்றார்.
அவரிடம் சென்ற பகீரதன் தனது நிலைமையை அவரிடம் மிகவும் பணிவாக சொல்லி என்னசெய்வது என்று தெரியாமல் இருக்கின்றேன் தேவரீர் உபாயம் சொல்லவேண்டும் என பவ்யமாக கைகட்டி நின்றான்.
அவனது பணிவும் வேண்டுகோளும் நாரத மகரிஷியை மிகவும் கவர்ந்தது. அவர் சொன்னார், மன்னா பகீரதா, அது வேறு யாரும் இல்லை, உன்னுடைய மூதாதையர்கள்தான் உன்னை நோக்கி குரல் எழுப்புகிறார்கள், உன்னால் ஆகவேண்டிய கார்யம் ஒன்று பூலோகத்தில் உள்ளது. அதற்கான வேளை வந்துவிட்டதாக தெரிகிறது என்றார்.
மகரிஷி, என்னால் ஆகவேண்டிய காரியமா அது என்ன? என்று கேட்க,
நாரதர் சொல்லத் தொடங்கினார்,
பாகீரதா , ஆகாயத்தில் உள்ள கங்கையை (ஆகாய கங்கை) மனிதஇனத்தின் பாப, புண்ணியங்கள் தீர்க்கும் பொருட்டு பூலோகம் கொண்டுவர வேண்டிய காலம் கனிந்து விட்டதாக அறிகிறேன். அதற்கு சரியான ஒருவரை தேர்ந்தெடுக்க இப்போதுதான் பரமன் சித்தமாகியிருப்பதையே உன்னுள் ஒலிக்கும் குரல்களை நீ அறிந்தது காட்டுகிறது என்றார்.
மகரிஷிஅவர்களே, ஆகாயகங்கையை பூமிக்கு கொண்டுவந்து என்னசெய்வது? அதனால் என்ன பயன் ? என்று பகீரதன் வினவ, மன்னா, கங்கையில் மூழ்கி உன் மூதாதையர்களுக்கு திதி போன்றவைகளை தந்தால் அவர்களின் பாப புண்யம் களையப்பட்டு அவர்கள் இறைவனோடு கலந்துவிடும் சாயுஜ்ய நிலையை அடைவார்கள் .
அது இதுவரை நடக்காததால்தான் இதுவரை இறந்துபோன ஆன்மாக்கள் உன்னிடம் கூக்குரல் எழுப்பினார்கள். உன்னால்தான் ஆகாயகங்கையை பூலோகம் கொண்டுவரமுடியும் என்பதை அவர்கள் அறிந்துள்ளார்கள்.
ஆகவே தான் உன் காதில் அந்த கூக்குரல் கேட்டுள்ளது. ஏனென்றால் பல்லாயிரம் ஆண்டுகளாக அவர்கள் ஓலமிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதுவரை யாரும் எந்த குரலையும் கேட்டதாக என்னிடமோ, வேறு யாரிடமோ கூறவில்லை என்றார் மகரிஷி.
அப்படியா! என்று ஆச்சர்யப்பட்ட பகீரதனைப் பார்த்து, நாரதர் மேலும் சொன்னார். ஆம், மன்னா! நீதான் ஆகாய கங்கையை புவிக்கு கொண்டுவர இறைவனால் தீர்மானிக்கப் பட்டவன் என்பது உறுதியாகிவிட்ட நிலையில் அதற்குண்டான பணிகளை துவக்கு என்றார்.
நான் என்ன செய்வது என்று ஒன்றும் புரியாதவனாக கேட்ட பகீரதனைப் பார்த்து,
தவம் இயற்று! மன்னா தவம் இயற்று!! இனி உன் பணியே தவமியற்றுவதுதான், என்று துரிதப்படுத்தினார்.
ஸ்வாமீ , யாரை நோக்கி நான் தவமிருப்பது என்று கேட்ட பகீரதனைப் பார்த்து நாரதமகரிஷி எது என்ன கேள்வி ஆகாயகங்கையை நோக்கித்தான், நீ தவமிருந்து கங்கை அன்னை தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டால், அன்னையே நீ பூமிக்கு எழுந்தருள வேண்டும் என்று கேள் என்று சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
அன்றே இமயமலைச் சாரலில் அமர்ந்து தவமியற்றினான் மன்னன் பகீரதன். Part-2
ஆண்டுகள் பல நூறு கடந்த நிலையில் ஒருநாள் பகீரதனின் கடும் தவம் கண்ட கங்கை அன்னை அவன் முன் தோன்றி, பகீரதா, உன் கடும் தவத்தின் காரணம் என்ன? என வினவினாள்,
அம்மா, உன் தாழ்பணிந்தேன் என்னை ஏற்றுக்கொள் தாயே, என கதறி வீழ்ந்து அடிபணிந்தான் பகீரதன்.
மகனே, உனக்கு என்ன வேண்டுமோ கேள் என்றாள் அன்னை.
அன்னையே, நீ பூமிக்கு எழுந்தருள வேண்டும் தாயே என மிகவும் பவ்யமாக கூறினான் மன்னன்.
பூமிக்கா என கேட்டதும் நகைத்தாள் கங்கையன்னை.
ஏனம்மா ? ஏன் நகைக்கின்றீர்கள் என ஒன்றும் புரியாதவனாக கேட்டவனை பார்த்து,
அன்னை சொன்னாள், மன்னா, ஒரு துளி மழை நீர் விண்ணில் இருந்து பட்டென்று விழுந்தாலே மனிதனால் தாங்க முடியாதே, நான் ஆகாயத்திலிருந்து வீழ்ந்தால் பூமி தாங்குமா? தனது அச்சிலிருந்து பூமி கழன்று விடாதா? நான் எப்படி பூமிக்கு வருவது? வழியைத் தெரிந்து கொண்டபின் என்னை அழை, நான் பிறகு வருகிறேன் என்று சொல்லி மறைந்தாள்.
இது என்ன புது சிக்கல் என்று குழம்பிய நேரத்தில் அங்கே வந்து சேர்ந்தார் நாரத மகரிஷி.
அவரிடம் நடந்த எல்லாவற்றையும் கூறி இப்போது என்ன செய்வது அன்னை இவ்வாறு சொல்லி விட்டார்களே ! என்று கவலையுடன் நின்றான் பகீரதன்.
மன்னா, அதைரியப்படாதே, அன்னை வரமாட்டேன் என்று சொல்ல வில்லையே, தான் வருவதற்கு ஒரு வழியை காட்டு என்று தானே சொன்னார்கள், அப்படி என்றால் ஏதோ வழி இருக்கிறது நாம் கண்டுபிடிக்கிறோமா என்று அன்னை பூடகமாக நாடகம் நடத்துகிறாள் என்று அர்த்தம்.
அன்னை பூமிக்கு வந்தால் அவளின் அந்த வேகத்தை கட்டுப்படுத்தும் ஒரே சக்தி எம்பெருமான்தான் அவரால்தான் அன்னை மாபெரும் நீர்சக்தியாக பூமி நோக்கி பாயும் போது ஏற்று தடுத்தாண்டு கொள்ளமுடியும்.
அதனால் பகீரதா நீ உடனே சிவபெருமானை நோக்கி தவமியற்று என்று சொல்லி சிவனை நோக்கி பகீரதனை தவமியற்ற பணித்து விட்டு மறைய,
மன்னன பகீரதன் சிவபெருமானை நோக்கி தவமியற்ற துவங்கினான்.
பல ஆண்டுகள் ஒடிமறைந்தன. எம்பெருமானின் கருணை விழி மலர பெருமான் பகீரதனின் முன் தோன்றி “ பகீரதா உன் பக்தி எம்மை உன் பால் ஈர்த்தது என்ன வேண்டும் கேள் என பணித்தார்.
காதில் கூக்குரல் கேட்டதில் இருந்து அன்னை கங்காதேவி சொன்னது வரை ஆதியோடந்தமாக பணிவாக எம்பெருமானிடம் எடுத்துரைத்தான் பகீரதன்.
அமைதியாக அனைத்தையும் கேட்ட எம்பெருமானார், பகீரதா, உன் மூதாதையர் மீது உனக்கிருக்கும் பரிவான அன்பை மெச்சினோம், நீ எம்மை எப்போது தேவையோ அப்போது நினைப்பாயாக யாம் அங்கே தோன்றுவோம் என்று அனுக்ரஹம் செய்து மறைந்தார்.
ஆனந்தம் தாங்கவில்லை பகீரதனுக்கு அன்றே கங்கை பூமிக்கு வந்து விட்டதைப்போல கூத்தாடினான் , கொண்டாடினான்.
நாராயண நாராயண என்றவாறே அங்கே வந்து சேர்ந்தார் ஸ்ரீ நாரதர். அவரிடம் எல்லாம் சொன்னான் மன்னன் பகீரதன்.
மன்னா நானும் எல்லாவற்றையும் அறிவேன், நீ இனியும் தாமதிக்காமல் அன்னை கங்காதேவியை எண்ணி தவம் செய் என்று சொல்லி அவனுக்கு உற்சாகமூட்டினார். Part-3
மீண்டும் தவமியற்றத் துவங்கினான் பகீரதன். அன்னை கங்கா அவன்முன் தோன்றினாள், அன்னையிடம் நடந்ததை சொல்லி எம்பெருமான் எப்போது அழைத்தாலும் வருவேன் என்று சொன்னதையும் கூறி அம்மா நீங்கள்தான் எனக்கு ஒரு வழிகாட்டி அருள வேண்டும் என பணிந்து வேண்டினான்.
அன்னை சொன்னாள், மகனே பகீரதா, உன் அன்புக்கு அளவே இல்லை, மூதாதையரின் ஆன்ம சாந்திக்காக நீ மேற்கொள்ளும் இந்த முயற்சி பாராட்டப்படவேண்டியது.
நீ, ஒரு நல்ல நாள் பார்த்து அழைத்தவுடன் நான் உடனே வந்து நிற்பேன் எனக் கூறி வாழ்த்தி மறைந்தாள்.
உடனே பகீரதன் ஸ்ரீ நாரதரை நினைத்து அழைத்தான், நாராயண நாராயண என்று உடனே வந்தார் மகரிஷி.
நடந்த எல்லாவிஷயமும் சொல்லி ஒரு நல்ல நாள் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டான் மன்னன் பகீரதன்.
நாரத மகரிஷி குறித்துக் கொடுத்த நன்னாளில் மீண்டும் தவமியற்றி சிவபெருமானையும் , அன்னை கங்காதேவியையும் வர வழைத்தான் மன்னன் பகீரதன்,
எம்பெருமான் மகாஸ்ரேஷ்ட விஸ்வருபம் எடுக்க, விண்ணிலிருந்து பூமி நோக்கி பாய்ந்தாள் அன்னை கங்காதேவி. நேரே அதனை தனது சிரமேந்தினார் கங்காதரன். அன்னை கங்கா எம்பெருமானின் திருமேனி தழுவி மகிழ்ந்து சிரசிலிருந்து ஒரு சிறு நீர் கீற்றாக பூமிக்கு நீர் வார்த்து அனுக்கிரகித்தாள்.
அந்த இடம்தான் இன்று நாம் காணும் கங்கோத்ரி எனும் இடம். அங்கிருந்துதான் அன்னை புறப்படுகிறாள், சுமார் இரண்டாயிரம் கிலோ மீட்டர்கள் அதிவேகமாக ஓடி வங்காள விரிகுடாவில் இரண்டறக் கலக்கிறாள்.
தனது தவம் நல்லமுறையில் நிறைவேறியதால் எம்பெருமானையும், கங்காதேவியையும் தண்டனிட்டு வணங்கி என் மூதாதையர் கடன் தீர்க்க எனக்கு வழங்கிய இந்த அருட்கொடை உலக மாந்தர் அனைவருக்கும் பயன்பெற அருளவேண்டும் ஸ்வாமீ என கண்ணீர் மல்க வேண்டி நின்றான் பகீரதன்.
அவனை அன்பாக பார்த்த அன்னையும், தந்தையும், புவி மன்னா பகீரதா, உன் கடுமையான தவம் இந்த பேரதிசயத்தை நிகழ்த்தி இருக்கிறது. இனி இது உன் விருப்பப்படியே பூமியில் ஓடி மனிதகுல மேன்மைக்கு பயன்படும். இந்த ஆகாய கங்கையில் நீராடி உலக மாந்தர்கள் அனைவரும் சகல பாபமும் நீங்கி நலம் பெறுவீர்கள்.
மேலும் நீ பலமுறை மிகவும் கடுமையான தவமியற்றி கடும் பிரயத்தனத்தினால் இந்த ஜெயம் அடைந்ததினால் மிகவும் கடுமையான எந்த கார்யமும் பகீரதப் பிரயத்தினம் என்று பெயர் பெற்று இந்த நிகழ்வையும் சொல்லும், என்று ஆசி கூறி மறைந்தனர்.
நாரதரின் துணையுடன் தனது மூதாதையருக்கு ஈமக்கடன்கள் செய்து அவர்கள் பலகோடி பேரையும் இறைஉலகு அனுப்பி வைத்து, தான் பிறந்ததின் நோக்கம் முடித்தான் மன்னன் பகீரதன்.