கொசுத் தொல்லை ஒழிய…
கொசுத்தொல்லைக்கு குட்நைட் போன்றவற்றை பணம் செலவழித்து வாங்க முடியாதவர்கள். வீட்டில் அருகே வளரும் தும்பைச் செடியை அரைத்து இரவில் பூசிக்கொண்டு படுத்தால் கொசுக்கள் கடிக்காது. தும்பைச் செடி உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.
ஈ மொய்ப்பதை தடுக்க…
சமையலறை, டைனிங் டேபிள் ஆகிய இடங்களில் ஈ மொய்த்தால் ஒரு குவளை நீரில் 2 டீஸ்பூன் உப்பு கலந்து அந்த இடங்களில் தெளித்து விட்டால் ஈ மொய்க்காது.
பல்லியை விரட்ட…
வீட்டில் பல்லிகள் நடமாடும் இடத்தில் பாச்சை உருண்டை ஒன்றிரண்டை போட்டு வைத்தால் பல்லி எட்டியே பார்க்காது. நாமும் பல்லி பற்றிய பயமின்றி நிம்மதியாக வீட்டு வேலைகளைக் கவனிக்கலாம்.
எறும்புகள் வராமல் தடுக்க…
எறும்பு பவுடர் போடும் போது அதை அப்படியே தூவி வைத்தால் மின்விசிறி சுற்றும்போது காற்றில் பறந்து சாப்பாட்டில் கூட கலந்து விடலாம். அதனால் எறும்பு பவுடரை மண்ணெண்ணெயில் குழைத்து பூசி விட்டால் எறும்பும் வராது. அதிகப் பவுடரும் ஆகாது.
கரப்பான் பூச்சிகளை ஒழிக்க…
கரப்பான் பூச்சிகள் இருக்குமிடத்தில் வெள்ளைப்பூண்டை நசுக்கி சிறு, சிறு துண்டுகளாக்கி சிதறி இருக்கும்படி போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் ஒழிந்து விடும்.
மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க…
தேங்காய் எண்ணெய்யில் கற்பூரத்தை கலந்து அதை பிரஷ் ஒன்றினால் எடுத்து வீட்டிலுள்ள மரச்சாமான்களின் மீது தடவி வந்தால் மூட்டை பூச்சிகள் ஒழிந்து விடும்.
விஷக்கடி
விஷ வண்டுகள் கொட்டினால் அந்த இடத்தில் துளசி இதழ்களை கசக்கித் தேய்த்தால் விஷம் முறிந்து, வலி குறையும்.
பூச்சிக்கடி, உடல் அரிப்பு
பூச்சிக்கடி ஏற்பட்டால் உடனே 3 கிராம்பை வாயில் போட்டு சுவைத்துச் சாப்பிட வேண்டும். அரிப்பு நிற்கும். தேனீ , குளவி கடித்து பெரியதாக வீங்கினாலும் சரியாகி விடும். கடிபட்ட இடத்தில் சுண்ணாம்பு தடவ வேண்டும்.
தேள் கொட்டுதல்
தேள் கொட்டினால், கொட்டிய இடத்தில் சுண்ணாம்பை தடவ வேண்டும். 3 கிராம்புகளை மென்று சாப்பிட்டால் விஷம் இறங்கிவிடும். கொட்டின இடம் வீங்கினாலும் வற்றிவிடும். மஞ்சளையும் சுண்ணாம்பையும் கலந்து கடிவாயில் தடவினால் வலியும் வீக்கமும் மறைந்துவிடும்.
வேர்க்குரு, அரிப்பு
குளித்த பிறகு ஈரம் போக துடைத்து, மருதாணி எண்ணைய் தடவி வந்தால், அரிப்பு நின்று புண் ஆறி பரிபூரண குணம் கிடைக்கும்.
வேப்பிலையை சுத்தம் செய்து, கழுவி நிழலில் உலர வைத்து, அரைத்து உடம்பிற்கு தேய்த்துக் குறித்தால் சரும நோய்கள் வராது.
பாசிப்பயறுடன் பொடுதலை இலையையும் சேர்த்து அரைத்துத் தேய்த்துக் குளித்தால் உடம்பு பளபளப்புடன் இருப்பதுடன் தேகத்தில் சொறி , சிரங்கு, படை போன்ற சரும நோய்கள் வராது.
இயற்கை முறைக்கு மாறுவோம்!ஆரோக்கியமாக வாழ்வோம்!