சத்தான உணவைத் தேர்வு செய்து சாப்பிடுவது மட்டுமல்ல அதைச் சாப்பிடும் விதமும் முக்கியம். ஆப்பிள் போன்ற பழங்கள் முதல் கடலை வகைகள் வரை தோலை நீக்கிச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது.
புரதத்துக்காக கால்நடைகளிலிருந்து கிடைக்கும் வெண்ணை, பால், இறைச்சி, பாலாடைக்கட்டி, முட்டை போன்றவற்றை அதிகம் சார்ந்திருக்காமல் இருப்பது நல்லது. தாவர புரதங்களைப் போலில்லாமல் இவை செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றன.
அசிட்டிக் உணவுகளான சர்க்கரை, பால், பால் பொருட்கள், செயற்கைக் குளிர்பானங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பதும், ஆல்கலைன் உணவு வகைகளான பழங்கள், காய்கறிகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்வதும் நல்லது.
உங்களால் தினசரி பால் சாப்பிடாமல் இருக்க முடியாது என்றால் சோயா பால் அல்லது பாதாம் பால் சாப்பிடலாம். அதிலும் தற்போது பெரும்பாலும் பால் பொருட்கள் கலப்படமாக வருகின்றன என்று சந்தேகிக்கப்படும் நிலையில் அவற்றைத் தவிர்ப்பதே நல்லது என்கின்றனர் வல்லுநர்கள்.
எண்ணையில்லாமல், ஆரோக்கியமான முறையில் சமைப்பதற்குச் சற்றுக் கூடுதல் நேரமாகும். ஆனால் அவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டாலும் நன்மையே. கட்லட் போன்றவற்றை நிலக்கடலை மாவு போட்டு ரோஸ்ட் செய்யலாம். அதற்கு சற்று கூடுதல் நேரமானாலும், நிலக்கடலையில் இருந்தே போதுமான எண்ணை கிடைத்து விடும்.
பெரும்பாலான உணவுப் பொருட்களில் சத்துக்களும், மணமும் அவற்றின் தோலில்தான் இருக்கிறது. நீங்கள் தோலை உரிக்கும்போது சத்துகள் அதனுடன் போய்விடுகின்றன. நீங்கள் தோலை உரிக்கும்போது அதனுடன் மணத்தையும் அகற்றி விடுகிறீர்கள்.
காய்கறிகள், பழங்கள், தானியங்களை தண்ணீரில் அலசுவது நல்லது தான். ஆனால் அதுவே அதிகமாகி விட வேண்டாம். அப்படிச் செய்தால் அனைத்துச் சத்துகளையும் இழக்க நேரிடும்.
காய்கறிகளை தண்ணீரில் வேகவைப்பதை விட ஆவியில் அவியுங்கள். அதற்குத் தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் என்பதுடன் சத்துகளையும் இழக்காது இருக்கலாம். காய்கறிகளை வெட்டியபிறகும் அலச வேண்டாம்.
உணவுடன் பழங்கள் சாப்பிட வேண்டாம். மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது பழங்கள் வேகமாக ஜீரணமாகின்றன. அவை சர்க்கரைத் தன்மையைக் கொண்டுள்ளதால் உங்கள் வயிற்றில் நொதிக்கின்றன. அது பொதுவாக நல்லது தான். ஆனால் நீங்கள் நிறைய உணவு சாப்பிட்டபின் பழங்கள் சாப்பிட்டால் ஜீரணம் மெதுவாக நடைபெறுகிறது.
நீண்ட நேரம் நொதித்தல் நடைபெற்று வாயுப் பிரச்சினை, வயிற்றுப் பொருமல் போன்றவற்றை ஏற்படுத்தலாம். சாறாக இல்லாமல் முழுப் பழமாகச் சாப்பிடுவதும் நல்லது. பழச்சாறில் கலோரிகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால் பழமாகச் சாப்பிடும் போது அதிக நார்ச்சத்தைப் பெறலாம்.