ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் என்பவர், நம் இந்தியாவின், தமிழ்நாட்டில் இருக்கும் மிகப்பழமையான, திருச்சிக்கு அருகிலுள்ள கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள கல்லணை என்ற இந்த அணையை பலகாலம் ஆராய்ச்சி செய்து பல உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் நம் தமிழின மன்னனின் பெரும் சாதனையைப் போற்றி, பெரிதும் வியந்து அதனை, ’ பிரம்மாண்டமான அணைக்கட்டு ‘ என்று புகழ்ந்துள்ளார். இதன் பிறகு நம் கல்லணையின் புகழ் பாரெங்கும் பரவியது! இதைக் கட்டியது யார் என்று தெரியுமா?
சங்க காலத்தில் கரிகாலன் என்ற சோழ மன்னன் தான் இந்த கல்லணையைக் கட்டினான். இன்றுவரை புழக்கத்தில் இருக்கக்கூடிய மிகப் பழமையான அணையும் இதுதான். கரிகாலன் கி.பி. 2ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ மன்னன், இவன் தந்தையின் பெயர் இளஞ்செட்சென்னி. சோழர் குலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து மாற்றி காஞ்சி முதல் காவிரி வரை பரவச்செய்த பேராற்றல் பெற்றவன். கரிகாலன் சிறுவனாக இருந்த போது தீ விபத்திலிருந்து தப்பியதால் அவனது கால் வெந்து கருகியதால் கரிகாலன் எனப் பெயர் பெற்றான் என்று பண்டைய தமிழ் வரலாறு கூறுகிறது.
காவிரியில் அடிக்கடி பெரும் வெள்ளம் வந்ததால் மக்கள் மிகவும் வேதனைக்குள்ளானார்கள். மக்களின் வேதனையைப் போக்க வேண்டியது அரசனின் கடமையல்லவா? அதற்காக கரிகாலன் கட்டிய, மிகப் பழமையான நீர்ப்பாசனத் திட்டம் கொண்ட இந்த கல்லணை காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளிற் பாய்ச்சிச் செழிப்பை உண்டாக்கியது. இதனை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்கு சோழக் கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் உறுதிபடுத்துகின்றன. இந்தக் கல்லணை கட்டிடக் கலையின் பெரும் சாதனையாகக் குறிப்பிடப்படுகிறது. காரணம், மணலில் அடித்தளம் அமைத்துக் கட்டியுள்ள பழந்தமிழரின் தொழில்நுட்பம் வியத்தகு சாதனையாகவே இருக்கிறது.
1080 அடி நீளமும், 66 அடி அகலமும், 18 அடி உயரமும் கொண்ட, இந்த கல்லணை கிட்டத்தட்ட 1950 ஆண்டுகளாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்திக்கொண்டிருக்கிறது என்பது ஆச்சரியமான விசயம் தான். ஏன் தெரியுமா? இது இன்றைய நவீன தொழில்நுட்பம் போல் அல்லாமல், வெறும் கல்லும், களிமண்ணும் மட்டும் கொண்டு கட்டப்பட்டுள்ளது என்பதுதான். ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவது என்பது, தொழில்நுடபம் அதிகமாக வளராத அந்த காலகட்டத்தில் சாமான்ய காரியமல்லவே? அதற்கும் ஒரு வழியைக் கண்டார்கள் நம் முன்னோர்கள். ஆம், காவிரி ஆற்றின்மீது மிகப் பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள். பொதுவாக நீரின் அடியில் இருக்கும் மணல் அரித்துக்கொண்டே போகும் தன்மையுடையதுதானே. அதனால் அந்தப் பாறைகளும் கொஞ்சம், கொஞ்சமாக மண்ணுக்குள் போகும். அதன் பின் அதன்மேல் மற்றொரு பாறையை வைப்பார்கள். இடைஇடையே தண்ணீர்ல் கரையாத ஒருவித ஒட்டுக் களி மண்ணைப் பூசுவார்கள். இரண்டு பாறையும் நன்கு ஒட்டிக்கொள்ளும். இப்படித்தான் ஒன்றன் மேல் ஒன்றாக பாறையைப் போட்டு பெரிய அணையாக எழுப்பியிருக்கிறார்கள்!