கோடைகாலத்து உஷ்ணம் அழகை அதிகம் நேசிப்பவர்களுக்கு சிறிது அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான் வசதி வாய்ப்புள்ளவர்கள்,அதிக காலம் கோடை வாசஸ்தலங்களில் போய் தங்கிவிடுகிறார்கள். குளிர்பிரதேசங்களை தேடிப்போகாமலே, அழகை பராமரிக்க வாய்ப்பிருக்கிறது.
கோடைகாலத்தில் அதிக வியர்வை வழிவதும், சருமம் கறுப்பதும்தான் முக்கிய பிரச்சினைகளாக இருக்கின்றன. அதை சமாளிக்க இதோ வழி சொல்கிறோம்..
* வெயில்தாக்கத்தால் சருமம் கறுக்காதிருக்க சன்ஸ்கிரீன் பொருட்களை பயன்படுத்தவேண்டும். கிரீம் வகையிலான அதனை சருமத்தில் பூசிக்கொண்டால் அலட்ரா வயலெட் கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கலாம்.
* வெளியே செல்லும்போது உங்களுக்கு பிடித்தது போன்ற குடை ஒன்றை கூடவே வைத்துக்கொள்ளுங்கள். கறுப்பு நிற குடையைவிட, இளநிறத்திலான குடை நல்லது.
* வெளியே செல்லும்போது உடலை முழுவதும் மூடிக்கொள்வதுபோன்ற உடையை அணியுங்கள்.
* பத்து மணியிலிருந்து மூன்று மணிவரை அடிக்கும் வெயில் உடலில் படாத அளவுக்கு பார்த்துக்கொள்ளவேண்டும்.
* சருமம் வறண்டு போகாமல் அதன் ஈரத்தன்மையை பாதுகாக்க சம்மர் சென்டட் லோஷன் பயன்படுத்தலாம்.
* எந்த உணவையும் அதிக சூட்டில் சாப்பிடக்கூடாது. சூடான உணவை உட்கொண்டால் வியர்வை அதிகமாக வெளியேறும்.
* கோடை காலத்தில் செயற்கை இழை ஆடைகளை உடுத்துவதை தவிர்த்திடுங்கள். அவை வியர்வையை உறிஞ்சாது. அதனால் உடலில் அதிக உஷ்ணத் தன்மை தோன்றும். கோடை காலத்திற்கு பருத்தி ஆடைகளே ஏற்றது.
* அக்குள் மற்றும் உடலில் வியர்வை உருவாகும் பகுதிகளில் உள்ள தேவையற்ற ரோமங்களை எல்லாம் நீக்கி, உடலை சுத்தமாக வைத்திருங்கள்.
* அதிகமான வியர்வை மற்றும் வியர்வையால் உடலில் ஏற்படும் வாடை போன்ற வைகளை போக்க தினமும் இரண்டு முறை குளிப்பது நல்லது. குளித்து முடித்து சருமம் உலர்ந்ததும், அதிகமாக வியர்வை உருவாகும் பகுதிகளில் அதற்குரிய பவுடரை பூசிக்கொள்ள வேண்டும்.
* கால் மற்றும் உள்ளங்கைகளில் சிலருக்கு அதிக வியர்வை தோன்றும். அவர்கள் உப்பு கலந்த நீரில் கால் மற்றும் உள்ளங்கையை சிறிது நேரம் முக்கிவைக்க வேண்டும். பின்பு நன்றாக துடைத்துவிட்டு கலாமின் லோஷன் பூசவேண்டும்.
* கடைகளில் ஆன்டி பாக்டீரியல் சோப் கிடைக்கும். அவைகளை வாங்கி பயன்படுத்தினால், வியர்வையால் உடலில் ஏற்படும் வாடை நீங்கும்.
* ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு பிடி உப்பு கலந்து குளித்தால் உடலில் உஷ்ண கட்டிகள் தோன்றாது.