* தினமும் புழுங்கல் அரிசியுடன் சிறிது வெந்தயம் சேர்த்து கஞ்சியாக காய்ச்சிக் குடிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை அளிக்கும். அது மட்டுமல்லாமல், வறண்ட தலைமுடியையும் பளபளப்பாக்கும்.
* பழவகைகளும் கூந்தலுக்குப் பாதுகாப்பு கவசம் தான். மாதுளை, பப்பாளி, பால் மூன்றையும் மில்க் ஷேக் செய்து குடிக்கலாம். ஆப்பிள், கேரட், எலுமிச்சை சேர்த்துக் குடிப்பதுடன்… சப்போட்டா, தேங்காயத் துருவல் கலந்து சாப்பிட்டு வருவதும் கூந்தல் மலர்ச்சிக்கும், நெடுநெடுவென்ற வளர்ச்சிக்கும் துணைபுரியும்.
* ஒரு நாள் விட்டு ஒரு நாள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது கால் கப் நல்லெண்ணெயில் நாலு வேப்பந்தளிர், சிறிது ஓமம் சேர்த்துக் காய்ச்சி தலையில் தடவி, சீயக்காய் போட்டு அலசலாம். இதனால் உடம்பு குளிர்ச்சியாவதுடன் பேன், பொடுகுத் தொல்லையும் ஒழியும்.
* பாலூட்டும் தாய்மார்கள், அலுவலகம் செல்பவர்களாக இருந்தால்…. நேரம் கிடைப்பதே மிகவும் அபூர்வம் தான். இவர்கள் வாரம் ஒரு முறை இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய், ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் தலா அரை டீஸ்பூன், கடுகு எண்ணெய் கால் டிஸ்பூன் சேர்த்துக் கலந்து, தலைமைய நன்றாக மசாஜ் செய்து சீப்பினால் வார வேண்டும். பிறகு, சீயக்காயுடன், செம்பருத்தி இலையையும் அரைத்து அந்தச் சாறையும் சேர்த்து தலையை அலச வேண்டும்.
* இதில் சேர்க்கப்பட்டுள்ள நல்லெண்ணெய், தலைக்குக் குளிர்ச்சி மற்றும் பளபளப்பபைத் தரும். தேங்காய் எண்ணெய், முடி வளர்ச்சியைத் தூண்டும். விளக்கெண்ணெய், முடியை அடர்த்தி ஆக்கும். ஆலிவ் எண்ணெய், கூந்தலை கருகருவென வளரச் செய்யும். கடுகு எண்ணெய், கூந்தலில் வறட்சி இல்லாமல் பராமரிக்கும். செம்பருத்தி முடியை சூப்பராக சுத்தமாக்கிவிடும்.
* ஒரு நெல்லிக்காயில் உப்புத் தொட்டு சாப்பிட்டு அல்லது நெல்லிக்காய் ஜுஸில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை, அரை டீஸ்பூன் எலுமிச்சைக் சாறு சேர்த்து தினமும் பருகி வந்தால், நரையை நீண்ட நாட்கள் வரை தள்ளிப்போடலாம்!