மன்னர் ஒருவரை புகழ்ந்து பாடி பரிசு பெறச் சென்றார் ஒரு தமிழ்ப் புலவர்.
மன்னரும் அவரது பாடலைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்து,குதிரை லாயப் பொறுப்பாளரை அழைத்து,புலவருக்குஒரு குதிரையை பரிசாகக் கொடுத்து அனுப்பச் சொன்னார்.
அந்த பொறுப்பாளருக்கு, நல்ல குதிரை எதையும் புலவருக்குக் கொடுக்க மனதில்லை.
எனவே அவர் புலவருக்கு இருப்பதிலேயே வயதானதும்.தொத்தலுமான ஒரு குதிரையை தேர்ந்தெடுத்து புலவரிடம் கொடுத்தார்.
மறுநாளும் மன்னரைக் காண புலவர் அரண்மனைக்கு வந்தார்.ஆனால் அவர் நடந்தேவந்தார்.
மன்னர் புலவரைப் பார்த்து,”ஏன் நடந்து வருகிறீர்கள்?குதிரையில் வந்திருக்கலாமே?”என்று கேட்டார்.
புலவர்,”மன்னா,நீங்கள் பரிசாகக் கொடுத்த குதிரை சாதாரணக் குதிரை அல்ல.மிக வேகமாகப் பறக்கக் கூடிய குதிரை.வந்த ஒரே நாளில் மண்ணுலகிலிருந்து விண்ணுலகிற்குப் பறந்து விட்டது என்றால் அதன் வேகம் எவ்வளவு இருக்கும் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள்,” என்றார்.
ஆம்,குதிரை வந்த ஒரே நாளில் இறந்து விட்டதைத் தான் புலவர் அவருக்கே உரித்தான பாணியில் சொல்லிவிட்டார்.
நடந்ததை அறிந்த மன்னர் வருந்தி அவருக்கு வேறு பரிசுகள் கொடுத்து அனுப்பினார்.