Home » சிறுகதைகள் » டில்லி அரசரை வென்ற தெனாலி ராமன்!!!
டில்லி அரசரை வென்ற தெனாலி ராமன்!!!

டில்லி அரசரை வென்ற தெனாலி ராமன்!!!

ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார்.

கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து ” இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!” என்று எச்சரித்து அனுப்பினார்.

டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டான். பாபர் ராமன் சொல்லாமலேயே நின்று விட்டானே சரியான தோல்விதான் அவனுக்கு என மகிழ்ந்தார்.

ஒருநாள் பாபர் தன் மந்திரியுடன் உலாவச் சென்றார். வழக்கம்போல அரண்மனைச் சேவகன் ஒருவன் சில பொன்முடிப்புகளைச் சுமந்து வந்தான். மன்னர் குதிரையை மெதுவாக நடத்திச் சென்று கொண்டிருந்தார். பாதை ஓரத்தில் முஸ்லிம் கிழவர் ஒருவர் தள்ளாடியபடியே ஏதோ செடிகளை நட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவரருகே சென்று தன் குதிரையை நிறுத்தினார்.” பெரியவரே! இந்தத் தள்ளாத வயதில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?”

” நல்ல மாங்கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறேன்.” இதை அவர் மிகவும் சிரமப் பட்டுக் கூறினார்.

” ஏன் ஐயா! இந்தத் தள்ளாத வயதில் உமக்கு ஏன் இந்தத் தொல்லை! அத்துடன் இது காய்த்துப் பின் பழுத்து அந்தப் பழத்தை நீர் உண்ணப் போகிறீரா? ” என்று சிரித்தார்.

” அரசே! நாம் உண்ணும் மாங்கனிகள் நம் முன்னோர் நட்டதுதானே! அவர்கள் மரங்களை நட்டதால் தானே நாம் இன்று மாங்கனிகளை உண்ணுகிறோம்! அவர்கள் நடாமல் இருந்திருந்தால் நமக்கு ஏது மாம்பழங்கள்?

எனவே வரும் தலைமுறையினர் உண்ணவே இம்மரங்களை நான் நடுகிறேன்”

“ஆஹா! சரியான பதில். நல்லவிளக்கம். மிக்க மகிழ்ச்சி.” உடனே மந்திரியார் ஒரு பொன் முடிப்பைப் பரிசாக அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட கிழவர் சிரித்தார். ” அரசே! அல்லா பெரியவர். எல்லோருக்கும் மரம்

பழுத்தபிறகே பலன் தரும். ஆனால் பாபரின் ஆட்சியில் மரம் நட்டவுடனே பலன் கொடுத்து விட்டதே!”

பாபர் மனம் பெரிதும் மகிழ்ந்தது. “ஆகா! சரியாகச் சொன்னீர்கள் பெரியவரே!” என்றபடியே மந்திரியைப் பார்க்க அவர் இன்னொரு பொன்முடிப்பை அளித்தார். அதையும் பெற்றுக்கொண்ட பெரியவர், “அரசே! இந்த மாங்கனிகள் பழுத்துப் பின் பலனளிப்பது ஆண்டுக்கு ஒருமுறைதான். ஆனால் தங்களின் மேலான குணத்தினால் நட்டவுடனே இருமுறை எனக்குப் பலனளித்து விட்டது. என்னே அல்லாவின் கருணை?”

என்றார். “நன்றாகச் சொன்னீர்கள் பெரியவரே! ” என்று கூறியவர் மீண்டும் ஒரு பொன் முடிப்பையும் அளித்தார். பின் மந்திரியைப் பார்த்து “மந்திரியாரே! சீக்கிரம் இங்கிருந்து சென்று விட வேண்டும். இல்லையேல் சாதுர்யமாகப்பேசி நம் பொக்கிஷத்தையே காலிசெய்து விடுவார் இந்தப் பெரியவர்.” என்று வேடிக்கையாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார் பாபர்.

” சற்று நிற்க முடியுமா அரசே?” என்று சொன்ன பெரியவர் தன் தாடி மீசையைக் களைந்து விட்டுத தெனாலி ராமனாக நின்றார். பாபர் திகைத்தார். சற்று நேரத்திற்குள் மூன்று பரிசுகளைப் பெற்றவன் தெனாலி ராமனா?

தெனாலி ராமன் பணிவுடன் கூறினான். “அரசே, மன்னிக்கவேண்டும். எங்கள் மன்னர் கிருஷ்ண தேவ ராயர் தங்களிடம் நான் பரிசு பெற்று வரவேண்டும் எனக் கட்டளையிட்டு அனுப்பினார். இன்று அவரது கட்டளைப் படியே தங்களிடம் பரிசுகளைப் பெற்று விட்டேன். இனி ஊர் திரும்பத் தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும்.”

“தெனாலி ராமா! உண்மையிலேயே நீ திறமைசாலிதான். உங்கள் மன்னருக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவி. நாளைக்கு அரச மரியாதையையும் பெற்றுக் கொண்டு விஜயநகரம் செல்லலாம்.” என்றார் அரசர். பின் மகிழ்ச்சியுடன் அரண்மனைக்குத் திரும்பினார்..

வெற்ற்யுடன் ஊருக்கு வந்து சேர்ந்த தெனாலி ராமனைப் பார்த்த கிருஷ்ணதேவ ராயர் நடந்தவைகளைக் கேட்டறிந்தார். தான் சொன்னபடியே தெனாலி ராமனுக்குப் பல பரிசுகளையும் கொடுத்தார். தன் நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்றிய ராமனை மன்னரும் மக்களும் போற்றிப் புகழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top