தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மேல் ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின் கீழே இறங்கி அவன் அதைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள்இருந்த வேதாளம் எள்ளி நகைத்து, “மன்னனே, உன்னுடைய முயற்சி பாராட்டுக்குரியது. தனது லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக உயிரையும் பொருட்படுத்தாத உன்னைப் போல் வெகு சிலரே இருப்பர். ஆனால் உன்னுடைய லட்சியம் நிறைவேறுமா என்று தெரியவில்லை. லட்சியத்தை நிறைவேற்றக் கூடிய வாய்ப்பு இருந்தும் நீ அதைத் தவற விடுவாய் என சந்தேகம் ஏற்படுகிறது. இப்படி தவறவிட்ட தர்மராஜன் என்பவனது கதையை இப்போது சொல்கிறேன், கவனமாகக் கேள்,” என்றது.
ஓர் ஊரில் தர்மராஜன், விசுவநாதன் என்ற இரண்டு நேருங்கிய நண்பர்கள் இருந்தனர். அதே ஊரில் பூஷணம் என்னும் மோசடிக்காரனும் இருந்தான். போலிப்பத்திரங்கள் தயாரித்து ஊர் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பது அவனது வழக்கம்.
ஒருமுறை அவன் தர்மராஜன் தன்னிடம் நிலத்தை அடமானம் வைத்து மூவாயிரம் வராகன்கள் கடன் வாங்கியிருப்பதாக ஒரு போலிப் பத்திரம் தயாரித்து, உடனே வாங்கிய கடனை அடைக்காவிட்டால் தர்மராஜனது நிலம் தன்னுடமையாகும் என்று எச்சரிக்கை செய்து தர்மராஜனுக்குத் தகவல் அனுப்பினான். தர்மராஜன் நீதிபதியிடம் சென்று பூஷணத்தின் மோசடியைப் பற்றி முறையிட்டான். இரு தரப்பினரையும் விசாரித்த பின் நீதிபதி தர்மராஜனை நோக்கி “நீ உன்னுடைய நிலத்தை அடமானம் வைத்துக் கடன் வாங்கியிருப்பதாக இந்தப் பத்திரம் காட்டுகிறது. நீ மிகவும் நல்லவன் என்றும் பூஷணம் மோசக்காரன் என்றும் எனக்குத் தெரியும். ஆனால் அந்தப் பத்திரத்தை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது. அது போலி என்பதை தீவிர விசாரணைக்குப் பிறகு ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். இதற்கு நீ ஓராயிரம் வராகனும், உனக்கு யாராவது ஜாமீனும் கொடுக்க வேண்டும்,” என்றார்.
தர்மராஜனிடம் நீதிபதி கேட்டத் தொகை இல்லை. உடனே கிராமத்தில் தன் நண்பர்களிடம் உதவி கேட்ட போது, அனைவரும் கை விரித்து விட்டனர். அதனால் தர்மராஜன் தன் உயிர் நண்பனான விசுவநாதனிடம் உதவி கேட்டான். ஆனால் விசுவநாதன் அப்போது பணமுடையில் இருந்தான். அவனுடைய தந்தை நோய் வாய்ப்பட்டு இருந்ததால், அவரது சிகிச்சைக்குப் பணம் தேவைப்பட்டது. தவிர அவனது தங்கைக்குத் திருமணம் நிச்சயமாயிருந்ததால், அதற்கு வேறு ஏராளமான பணம் தேவைப்பட்டது. சாதாரண சமயமாகஇருந்தால் விசுவநாதன் உதவி செய்திருப்பான். இந்த சமயத்தில் பூஷணம் விசுவநாதனை அணுகி அவனுக்கு தான் கடன் உதவி செய்வதாகவும், தர்மராஜன் விஷயத்தில் தன்னுடன் ஒத்துழைக்கவும் கேட்டுக் கொண்டான்.
நட்பைவிடத் தன்னுடைய பண நேருக்கடியை மிக முக்கியமாக நினைத்து, விசுவநாதனும் தர்மராஜனிடம் தன்னால் பணம் தர இயலாதென்று கூறிவிட்டான். எங்குமே பணம் திரட்ட இயலாத தர்மராஜனுடைய நிலம் பூஷணத்துக்கு சொந்தமாகி விட்டது.
இந்த அக்கிரமத்தைக் கண்டு தர்மராஜனுக்கு பூஷணத்தைவிட, தக்க சமயத்தில் உதவ மறுத்தத் தன் நண்பன் மீதுதான் ஆத்திரம் வந்தது. முதலில் கண்மண் தெரியாமல் தனக்கு வந்த கோபத்தில், தன் நண்பனைக் கொன்று விடலாமா என்றே நினைத்தான். ஆனால் இப்படிச் செய்தால் தான் தூக்கில் தொங்க நேரிடும் என்பதால், தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டான்.
ஆனால் என்னதான் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாலும், அவன் மனம் எப்போதும் விசுவநாதனைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டேயிருந்தது. ஒருநாள் தர்மராஜனுக்கு ஊர் எல்லையிலிருந்த ஒரு சித்தரின் ஞாபகம் வந்தது. சித்தரை அணுகி தன்னுடைய நண்பனின் துரோகத்தைப் பற்றி விவரித்து, தான் அவனை எப்படியாவது பழி வாங்கத் துடிப்பதாகவும், அதை எப்படிச் செய்வது என்றும் அவரிடம் ஆலோசனை கேட்டான்.
“தம்பி, உனது மனநிலை புரிகிறது. எப்போது ஆபத்தில் உனக்கு உதவி செய்யவில்லையோ, அவன் உனது உண்மையான நண்பன் இல்லை. ஆனால் நீ அவனுக்குத் தீங்கு விளைவிக்க நினைப்பதால், நீயும் அவனது உண்மையான நண்பன் இல்லை,” என்றார். “சுவாமிகளே, நான் வேண்டுமென்றே தீங்கு செய்யப் போவதில்லை.
அவன் எனக்கிழைத்த துரோகத்துக்கு கூலி கொடுக்க விரும்புகிறேன்,” என்றான் தர்மராஜன். “பழி வாங்கும் எண்ணத்தை விட்டுவிட்டு, வேறு ஏதாவது உதவி கேள், செய்கிறேன்,” என்றார் சித்தர். “சுவாமி, என் மனதிலிருந்து பழி வாங்கும் உணர்ச்சியையாவது அகற்றி விடுங்கள்,” என்று கூறினான் தர்மராஜன்.
சற்று யோசித்த பின் சித்தர், “உன்னை நான் ஒரு விஷப் பாம்பாக மாற்றி விடுகிறேன். உன்னுடைய பழி வாங்கும் எண்ணம் விஷமாக உன்னுள் இருக்கும். அந்த விஷத்தை நீ பயன்படுத்தி வெளியே கக்கி விட்டால், உனது விஷமும் அகன்று விடும். அத்துடன் பழி வாங்கும் எண்ணமும் மறைந்து விடும்.
நீ பழைய படி தர்மராஜனாக மாறி விடுவாய். நீ பாம்பாக இருக்கும்போது, உன்னை யாராவது அடித்துக் கொன்று விட்டால், அத்துடன் நீயும் இறந்து விடுவாய் சம்மதமா?” என்று கேட்க, உடனே முன்பின் யோசிக்காமல் தர்மராஜன் சரியென்று சொல்லி விட்டான். சித்தரும் தர்மராஜனைப் பாம்பாக மாற்றி விட்டார்.
பாம்பாக மாறிய தர்மராஜன் வயல்கள் இருக்கும் பக்கம் சென்றான். அங்கு ஒரு விவசாயி ஒரு கம்பினால் குப்பைகளைத் தள்ளிக் கொண்டிருந்தான். அந்தக் கம்பு பாம்பின் வாலில் பட்டுவிட்டது. வலி பொறுக்காத தர்மராஜன் சீறியெழுந்து விவசாயியைத் தீண்ட முயல்வதற்குள், விவசாயி வெகுதூரம் நகர்ந்து சென்று விட்டான். தர்மராஜனைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு பாம்பு “எங்கே நீ அவனைத் துரத்திக் கொண்டே போவாயோ என்று பயந்தேன்! அவன் அந்தக் கம்பினால் உன்னை அடித்துக் கொன்றிருப்பான். நமது விஷத்தை தற்காப்புக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவனது கம்பு தெரியாமல் உன் மீது பட்டு விட்டதற்காக, அவனைப் போய் பழி வாங்க நினைப்பது அறிவீனம்,” என்றது.
“ஓகோ, மனிதர்களைப் போல் பழிவாங்கும் குணம் பாம்புகளுக்குக் கிடையாதா!” என நினைத்துக் கொண்ட தர்மராஜன் யார் கண்ணிலும் படாமல் விசுவநாதன் வீட்டுக்கு ஊர்ந்து சென்றான்.
தன் நண்பன் வீட்டுக்குள் நுழைந்ததும், விசுவநாதனின் ஆறு வயதுச் சிறுவனைக் கண்டான். இந்தச் சிறுவனைத் தீண்டி விடலாமா என்று ஒருகணம் தர்மராஜன் எண்ணினான். “சேச்சே, இந்தக் கள்ளம் கபடமற்ற குழந்தையைப் போய் ஏன் கடிக்க வேண்டும்! நமது எதிரி விசுவநாதன் தான்,” என்று ஊர்ந்து கொண்டே விசுவநாதனைத் தேடி பூஜைஅறைக்குள் நுழைந்து விட்டான். இதற்குள் அந்தச்சிறுவன் பாம்பினைக்கண்டு, “பாம்பு பாம்பு” என்று கத்த, எல்லோரும் அந்தச் சிறுவனுடன் பாம்பு சென்ற இடமான பூஜைஅறைக்குள் நுழைந்தனர். தர்மராஜன் பாம்பு உருவத்தில் படமெடுத்து நிற்கக் கண்டனர்
“நாகதேவதை நம் வீட்டுப் பூஜையறைக்கு வந்திருக்கிறாள். எல்லோரும் அவளை வணங்குங்கள். அவள் நமக்குத் தீங்கு எதுவும் செய்ய மாட்டாள்.
நமது நல்ல நண்பர் தர்மராஜன் ஒரு மோசடிக்காரனால் ஏமாற்றப்பட்டு மிகவும் கஷ்டப்படுகிறார். அவர் கஷ்டம் தீர வேண்டி அவருக்காக நாக தேவதையைப் பிரார்த்தனை செய்யுங்கள்.” என்று விசுவநாதனின் தாய் பக்தி பரவசத்துடன் சொல்ல, எல்லோரும் நாகதேவதையை விழுந்து வணங்கினர். கண்களை மூடிக்கொண்டு அனைவரும் பிரார்த்தனை செய்தனர்.
கண்ணை மூடிப் பிரார்த்தனை செய்யும் விசுவநாதன் தன் அருகில் இருந்தும் தர்மராஜனுக்கு அவனைப் பழி வாங்கத் தோன்றவில்லை. திடீரெனப் பழி வாங்கும் எண்ணமே மறைந்து விட்டது. தரையில் பலமாக ஒருமுறை கொத்தியவுடன், பாம்பின் விஷம் வெளியில் வந்துவிட, தர்மராஜன் தன் சுய உருவத்தை அடைந்தான். எல்லோரும் இன்னும் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கையில், தர்மராஜன் எழுந்து வந்து அவர்களோடு சேர்ந்து நின்று கொண்டான்.
விசுவநாதனின் தாய் கண் திறந்து பார்த்தபோது நாகதேவதை மாயமாக மறைந்திருந்தது. அதை அவள் அனைவருக்கும் தெரியப் படுத்த, அனைவரும் கண்களைத் திறந்தனர். அவர்கள் அருகில் தர்மராஜன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்ததும் அவர்கள் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. விசுவநாதன் மட்டும் குற்ற உணர்ச்சியுடன் தலையைக் குனிந்து கொண்டான். பழிவாங்கும் உணர்ச்சியை அறவே கைவிட்ட தர்மராஜன் அன்புடன், “நண்பா, நீ உதவ முடியாத சூழ்நிலையில் இருந்ததால், உன் மீது எனக்கு வருத்தம் இல்லை.
என் நிலம் போனால் போகட்டும். அதற்காக என் நண்பனை நான் இழக்க மாட்டேன்” என்றான். உணர்ச்சி வசப்பட்ட விசுவநாதன் தன் நண்பனை ஆரத்தழுவிக் கொண்டான்.
அது மட்டுமல்லாது பூஷணத்தின் மனதை மாற்றி, தர்மராஜனுக்கு அவனுடைய நிலத்தையும் மீட்டுக் கொடுத்தான்.
கதையைக் கூறிய வேதாளம் விக்கிரமனிடம், “மன்னா, தனக்கு தக்க சமயத்தில் உதவாமல் ஏமாற்றிய விசுவநாதனைப் பழிவாங்க அருமையான வாய்ப்பு கிடைத்தும் அதை தர்மராஜன் ஏன் பயன்படுத்தவில்லை? இதற்கு சரியான விடை தெரிந்திருந்தும் நீ சொல்லாமல் இருந்தால், உன் தலை வெடித்து சுக்கு நூறாகிவிடும்,” என்றது.
அதற்கு விக்கிரமன், “மனித உருவத்தில் விசுவநாதனைப் பழி வாங்கினால், அதற்கான தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற அச்சத்தில் இருந்த தர்மராஜன், சித்தர் பாம்பாக மாற்றுவதாகச் சொன்னஉடன் பாம்பாயிருந்தால் பழி வாங்கும் எண்ணம் நீடித்திருக்கும் என்றும், விசுவநாதனைக் கொன்றாலும் பாம்பை யாரும் நீதி விசாரணை செய்து தண்டிக்க முடியாது என்றும் உடனே பாம்பாக மாற ஒப்புக் கொண்டான். ஆனால் விசுவநாதனைக் கொல்ல வாய்ப்பு கிடைத்த போது, அவனது தாய் கூறிய வார்த்தைகளினால் தர்மராஜனின் பழி வாங்கும் எண்ணம் மறைந்துவிட்டது.
விசுவநாதனுக்கு தனக்கு உதவ முடியாத சூழ்நிலை இருந்தது என்றும் தனக்கு வேண்டுமென்றே துரோகம் செய்யவில்லை என்றும், தெரிந்து கொண்ட பிறகு, முக்கியமாக தனது நன்மைக்காக அந்தக் குடும்பமே பிரார்த்தனை செய்வதையும் கண்ட பிறகு, பழைய பழி வாங்கும் எண்ணம் மறைந்து, அன்பும் நேசமும் தர்மராஜன் மனதில் உண்டாயின,” என்று பதிலளித்தான்.
விக்கிரமனது பதிலினால் அவனது மௌனம் கலையவே, அவன் சுமந்து வந்த உடலோடு வேதாளம் மீண்டும் முருங்க மரத்தில் ஏறிக்கொண்டது.