சுபாஷ் சிறைக்குள் இருந்த சமயத்தில் கல்கத்தா நகர மாநகராட்சிக்கு மேயர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. சிறைக்குள் சுபாஷ் தாக்கப்பட்ட விஷயம் அறிந்த வங்காள மக்கள் பிரிட்டிஷ் அரசின் மீது கடும்கோபத்தில் இருந்தார்கள். அரசை பழிவாங்கக் காத்திருந்த மக்களுக்கு இந்த மேயர் தேர்தல் நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது. சிறைக்குள் இருந்த சுபாஷை கல்கத்தா நகர மேயராக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். எனவே சிறைக்குள் இருந்த சுபாஷ் சார்பாக மக்களே ஒரு மனுவை சுபாஷ் சார்பில் தாக்கல் செய்தார்கள். தேர்தல் நடைபெற்றது. சுபாஷை எதிர்த்து போட்டியிட்டவர் படுதோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. மக்களின் பேராதரவோடு சிறைக்குள் இருந்த சுபாஷ் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று கல்கத்தா கார்ப்பரேஷனுக்கு மேயராக ஆனார். ஆனால் அரசு அவரை உடனே விடுதலை செய்யவில்லை. டிசம்பர் 1930-ல் தண்டனைக்காலம் முழுவதும் முடிந்த பின்னரே சுபாஷ் விடுதலை செய்யப்பட்டார்.
சுபாஷ் விடுதலை ஆகிறார் என்ற செய்தியை அறிந்த வங்கத்து மக்கள் பெரும் திரளாக வந்து சுபாஷை வரவேற்றனர். வங்கதேசத்தில் மல்தா எனும் ஒரு கிராமம் இருந்தது. அந்த கிராமத்தைச் சேர்ந்த காங்கிரஸ்காரர்கள். சிலர் சுபாஷை தங்கள் கிராமத்திற்கு அழைத்தார்கள். சுபாஷ் அவர்களது அழைப்பை ஏற்றார். ஆனால் அலிப்பூர் நகர அதிகாரி, சுபாஷ் மால்தா கிராமத்திற்குச் செல்லக்கூடாது என்று தடை உத்தரவு ஒன்றை வேண்டுமென்றே பிறப்பித்தார். ஆனால் 12.01.1931ல் சுபாஷ் தடையை மீறி மால்தா கிராமத்திற்குச் சென்றார். உடனே சுபாஷ் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
நீதிபதி சுபாஷிடம் விசாரணை நடத்தினார். சுபாஷ் தான் செய்தவற்றை மறைக்காமல் நீதிபதியிடம் தெரிவித்தார். தடையை மீற மால்தா கிராமத்திற்குச் சென்றேன் என்று தைரியமாய் நீதிபதியிடம் தெரிவித்தார். நீதிபதிக்கு சுபாஷின் தைரியம் பிடித்திருந்தது. ஆயினும் ஒரு வாரகாலம் சிறைதண்டனையை சுபாஷிற்கு விதித்தார்.
1932-ஆம் ஆண்டு சுபாஷ் மீண்டும் காரணம் ஏதுமின்றி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சுபாஷ் கல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டார். காசநோயால் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட சுபாஷ் 1933ல் சிறையில் மீண்டும் காசநோயால் தாக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார். சுபாஷை மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல அரசு தீர்மானித்தது. ஒரு வேன் மூலம் கல்கத்தா ரயில் நிலையத்திற்கு அவரை கொண்டு சென்றனர். அங்கிருந்து பம்பாய் வழியாக கப்பல் மூலம் வியன்னா நகருக்கு அழைத்துச் சென்று அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டது. வியன்னாவில் சில வருடங்கள் தங்க நேர்ந்தது. இக்காலகட்டத்தில் வியன்னா மருத்துவமனையில் சர்தார் வல்லபாய் படேலின் சகோதரர் விதல்பாய் படேல் காசநோய்க்காக சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருந்தார். இருவரும் இந்திய சுதந்திரப் போர் பற்றி விவாதித்து பிரிட்டிஷ் அரசிற்கு எதிராக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
ஆயுதம் தாங்கிப் போராடினாலொழிய இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சியை அகற்ற முடியாது என்றும், ஒத்துழையாமை இயக்கத்தினால் மட்டுமே இந்தியா சுதந்திரத்தைப் பெற்றுவிட முடியாது என்பதும் ஆயுதப்புரட்சிக்காக வெளிநாட்டினரின் உதவியை கேட்பது என்பதும் இருவரது கூட்டறிக்கையின் சாராம்சமாகும்.
இதற்கிடையில் விதல்பாய் படேலின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. விதல்பாய் படேல் தனக்குச் சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் இந்திய சுதந்திரப் போருக்கு செலவிடுமாறு சுபாஷிடம் கூறி சுபாஷ் பெயரில் ஒரு உயிலையும் எழுதி வைத்தார். பின்னர் விதல்பாய் படேல் காலமானார்.
1934ல் சுபாஷின் தந்தை ஜானகிநாத் போஸ் உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு காலமானார். வியன்னாவிலிருந்து இந்தியா திரும்பிய சுபாஷை பிரிட்டிஷ் அரசு வீட்டுக்காவலில் வைத்தது.