Home » சிறுகதைகள் » பரமார்த்தரும் அவரது ஐந்து சீடர்களும்
பரமார்த்தரும் அவரது ஐந்து சீடர்களும்

பரமார்த்தரும் அவரது ஐந்து சீடர்களும்

“குரு நாதா! இனிமேல் நாம் மருத்துவத் தொழில் செய்தால் என்ன?”

எனக் கேட்டான், முட்டாள்.

“அதனால் நமக்கு என்ன பயன்?” என்று பரமார்த்த குரு கேட்டார்.

“பணம் கிடைக்கும். அத்துடன் புண்ணியமும் கிடைக்கும்” என்றான், மூடன்.

“அப்படியே செய்வோம்” என்றார் குரு.

“மனிதர்களுக்கு மட்டும்தானா?” என்று கேட்டான் மண்டு.

“மனிதர்க்கும் வைத்தியம் செய்வோம்; மாட்டுக்கும் செய்வோம்; குழந்தைக்கும் செய்வோம்; குரங்குக்கும் செய்வோம்!” என்றான் மட்டி.

பரமார்த்தரும் அவரது ஐந்து சீடர்களும் மருத்துவம் செய்யும் செய்தி ஊர் முழுதும் பரவியது.

காய்ச்சலால் அவதிப்பட்ட ஒருவன் வந்தான். அவன் உடலைத் தொட்டுப் பார்த்த மடையன், “குருவே! இவன் உடம்பு நெருப்பாகச் சுடுகிறது!” என்றான்.

“அப்படியானால் உடனே உடம்பைக் குளிர்ச்சி அடையச் செய்ய வேண்டும்!”

என்றார் பரமார்த்தர்.

“அதற்கு என்ன செய்வது?” எனக் கேட்டான் முட்டாள்.

“இந்த ஆளைக் கொண்டுபோய்த் தொட்டியில் உள்ள தண்ணீரில் அழுத்தி வையுங்கள்.

ஒரு மணி நேரம் அப்படியே கிடக்கட்டும்” என்றார் குரு.

உடனே மட்டியும் மடையனும் அந்த நோயாளியைத் தூக்கிக் கொண்டு போய், தொட்டி நீரில் போட்டனர். முட்டாளும் மூடனும் மாற்றி மாற்றி அவனை நீரில் அழுத்தினார்கள்.

நோயாளியோ “ஐயோ, அம்மா!” என்று அலறியபடி விழுந்தடித்து ஓடினான்.

கொஞ்ச நேரம் கழித்து ஒரு கிழவி வந்தாள். “கண் வலிக்கிறது” என்றாள்.

“இப்போது நேரமில்லை. உண் கண்ணை மட்டும் தோண்டி எடுத்துக் கொடுத்து விட்டுப்போ. சரி செய்து வைக்கிறோம்!” என்றான் முட்டாள்.

கிழவியோ, “ஐயையோ” என்று கத்திக் கொண்டு ஓடினாள்.

சிறிது நேரம் சென்றது. “உடம்பெல்லாம் வெட வெட என்று நடுங்குகிறது

என்றபடி ஒருவன் வந்தான்.

“சும்மா இருப்பதால்தான் ஆடுகிறது. உடம்பு முழுவதும் கயிறு போட்டுக் கட்டி விடுங்கள்! அப்போது எல்லாம் சரியாகிவிடும்” என்றார் பரமார்த்தர்.

முட்டாளும் மூடனும், வந்தவனை இழுத்துக் கொண்டு சென்று தூணில் கட்டி வைத்தனர்.

கட்டி வைத்த பிறகும் அவன் உடம்பு நடுங்குவதைக் கண்ட மட்டி, “குருதேவா! இது குளிரால் வந்த நோய். இது தீர வேண்டுமானால், இவன் உடம்பைச் சூடாக்க வேண்டும்!” என்றான்.

அதைக் கேட்ட முட்டாள் தன் கையிலிருந்த கொள்ளிக் கட்டையால் நோயாளியின் உடல் முழுவதும் வரிவரியாகச் சூடு போட்டான்.

வலி தாங்காத நோயாளி சுருண்டு விழுந்தான்.

“பல் வலி தாங்க முடியவில்லை. என்ன செய்வது?” என்று கேட்டபடி வேறொருவர் வந்தார்

“வலிக்கிற பல்லை எடுத்து விட்டால் சரியாகி விடும்” என்றார் பரமார்த்தர்.

சீடர்களோ, ஆளுக்குக் கொஞ்சமாக எல்லா பல்லையும் கத்தியால் தட்டி எடுத்துப் பொட்டலமாகக் கட்டிக் கொடுத்தனர்!

“இனிமேல் உனக்குப் பல்வலியே வராது!” என்றார் பரமார்த்தர்

சற்று நேரம் கழிந்தது. யானைக்கால் வியாதிக்காரன் ஒருவன் வந்தான்.

“உலகிலேயே இதற்கு இரண்டு வகையான வைத்தியம்தான் இருக்கிறது. நன்றாக இருக்கிற காலை வெட்டிவிட்டு, அந்த இடத்தில் யானையின் காலை ஒட்டி விட வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் காலுக்குச் சமமாக இந்தக் காலில் உள்ள சதையைச் செதுக்கி எடுத்து விட வேண்டும்!” என்றார் பரமார்த்தர்

யானைக்கால் வியாதிக்காரனோ, “காலை விட்டால் போதும்” என்று தப்பினான்.

“ஐயா! ஒரே இருமல். தொடர்ந்து இருமிக் கொண்டே இருக்கிறேன்” என்றபடி வேறு ஓர் ஆள் வந்தார். வாயைத் திறப்பதால்தானே இருமல் வருகிறது. வாயை மூடிவிட்டால் என்ன? என்று நினைத்தார், பரமார்த்தர். “இவர் வாயை அடைத்து விடுங்கள்!”

என்று கட்டளை இட்டார்.

குருவின் சொல்படி, கிழிந்த துணிகளை எல்லாம் சுருட்டி, இருமல்காரனின் வாயில் வைத்துத் திணித்தான் மட்டி.

“என் ஆடு சரியாகத் தழை தின்னமாட்டேன் என்கிறது” என்றபடி ஒருவன் வந்தான். அந்த ஆட்டைக் கண்ட குரு, “தொண்டையில் ஏதாவது அடைத்துக் கொண்டு இருக்கும்” என்றார்.

“வாயைப் பெரிதாக ஆக்கிவிட்டால் போதும்” என்றான் மடையன்.

கத்தி ஒன்றைத் தூக்கிக் கொண்டு வந்தான், முட்டாள்.

அதைப் பிடுங்கி, ஆட்டை வெட்டப் போனான் மூடன்.

பயந்துபோன ஆட்டுக்காரன், ஆட்டை இழுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.

குருவும் சீடர்களும் வைத்தியம் என்ற பெயரில் கண்டபடி நடந்து கொள்வதைப்

பற்றி எல்லோரும் பேசிக் கொண்டனர்.

பஞ்சாயத்தார் ஒன்று கூடி, குருவும் சீடர்களும் “இனிமேல் இந்த ஊருக்குள்ளேயே நுழையக் கூடாது” என்ற தண்டனையை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top