அந்த வீட்டு வேலைக்காரி மாரியம்மாவுக்கு ராத்திரி தூக்கமே பிடிக்கலே. மறுநாள் ஊரிலிருந்து சின்னம்மா குடும்பத்தோட வாராங்க. ஏகப்பட்ட வேலை கெடக்குது.
“விடியரவரெ தூங்கிட்டிருந்திராதே. சின்னம்மா வர்றதுக்குள்ளே எல்லாவேலையும் முடிச்சுக்கணும் இல்லேன்னா உட்கார்ந்து பேசக்கூட நேரமிருக்காது. சாயிந்தரமே போனாலும் போயிருவாங்க “ன்னு படுக்கப் போகும் போதே சொல்லியிருக்காக. அப்புறமும் லேட்டா எந்திரிச்சா அவங்க மூஞ்சியக் காட்ற மாதிரி ஆயிடும்.
போனதடவை வந்தப்போ அடுத்த தடைவை வரும்போது பழைய சேலைகள் கொண்டுவருவதாகச் சொல்லியிருந்தாள். “பெரியம்மா சேலைகள் நமக்குத்தான் ஆகும். சின்னம்மா குடுத்தங்கன்னா ஊருக்குப் போறப்போ புள்ளைங்களுக்குக் கொண்டுபோய்க் குடுக்கலாம். அதுங்களும் ஆசைதீரக் கட்டிக்கும்”
இந்த எண்ணங்களுடன் படுத்திருந்த மாரியம்மா தூங்கியும் தூங்காமலும் காலை ஐந்து மணிக்கு முன்பாகவே எழுந்தாயிற்று. சமையலறை, உணவுக்கூடம், இவைதான் அவள் அனுமதியின்றி நடமாடக்கூடிய இடங்கள். இதுதவிர பின்புறக் கதவைத் திறந்து கொண்டு வீட்டுக்கு வெளியே உள்ள குளியலறை கழிப்பறை ஆட்டுக்கல், அம்மிக்கல் இவற்றில் வேலையிருந்தாலும் போகலாம். உணவுக் கூடத்துக்கும் வரவேற்பறைக்கும் இடையில் உள்ள கதவைத் தாளிட்டால் அவள் அனுமதிக்கப்பட்ட இடங்களைத்தவிர மற்ற அறைகளுக்குள் போகமுடியாது.
அவ்வப்போது சுத்தம் செய்வதற்கு மட்டுமே மற்ற அறைகளுக்குள் போகமுடியும். அவ்வப்போது டீ அல்லது பலகாரம் கொண்டு வந்து கொடுப்பதற்கும் தட்டுக்களையும் டம்ளர்களையும் எடுத்துச் செல்வதற்கும் மட்டும் வரவேற்பறைக்கு வரலாம்.
உணவுக்கூடத்தில் இருந்து பார்த்தால் முன் அறையில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டி தெரியும். அங்கு ஒரு ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு அவ்வப்போது தொலைக்காட்சி பார்ப்பதுண்டு.
ஐந்து மணிக்கு எழுந்தவள் பத்து நிமிடத்தில் வேலைக்குத் தயாராகிவிட்டாள். அவள் கழிப்பறைக்கும் குளியலறைக்கும் போவதெல்லாம் எப்போதென்று யாருக்கும் தெரியாது. குளியல் சோப்பிலிருந்து அவளுக்கு எல்லாமே தனி! மறைவாக வைத்திருப்பாள். அரை மணிநேரத்தில் வீட்டுக்கு வெளியே. பெருக்கிச் சுத்தம்செய்து தண்ணீர் தெளித்து… கோலம்போடுவது தான் பாக்கி. அதையும் அவளுக்குத் தெரிந்த மாதிரி போட்டு விடுவாள். அது இக்காலப் பெண்களுக்குப் பிடிக்காது. நீலவேணி வந்துதான் போடவேண்டும்.
“அம்மா! அம்மா!…எழுந்திருங்கம்மா! நேரமாச்சு!” நடுக்கதவுப் பக்கம் வந்து குரல் கொடுக்கிறாள். வெளியே வந்த நீலவேணி
“ஏய்! எதுக்கு இந்தக்கத்து கத்துனே! அடுத்த வீட்டுக்காரங்ககூட ஓடிவந்துருவாங்க உன் சத்தத்துலே!” நீலவேணியின் சப்தம்தான் அதிகம். இருந்தாலும் மாரியம்மா ஒன்றும் பேசவில்லை. இது தினமும் கேட்பதுதானே? இதுக்குமேலே மெதுவாக் கூப்பிட்டா, வாயிலென்ன வச்சிருக்கே சத்தமாக் கூப்பிடலாமில்லேம்பாங்க! எதுக்குத் தப்பிக்கிறது?
இருக்கிறவங்க நடக்கிறவங்க என்னவேணும்ணாலும் சொல்லலாம். நாம்பளோ முள்ளில்லாத மரம்! என்ன செய்ய முடியும்? இது மாரியம்மா தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் சமாதானம்.
நீலவேணி சமையல்அறைக்குள் போகும்போது பால் கூட தயாராய் இருந்தது. ஐந்து நிமிடத்தில் காப்பிரெடி! இரண்டு டம்ளர்களில் ஊற்றிக்கொண்டு படுக்கையறைக்குள் நுழைகிறாள். காபி குடித்துவிட்டு மீண்டும் படுத்துக்கொள்வது நீலவேணியின் வீட்டுக்காரர் வேலாயுதத்தின் பழக்கம்.
“இன்னக்கி லீவுநாள்ணு மத்தியானம் வரெ படுத்துகிட்டு இருக்காதீங்க! நேரத்துலெ போயி நல்ல கறியா பாத்து வாங்கிட்டு வாங்க. முட்டைபாக்ஸ் எடுத்துட்டுப் போங்க. அதுநெரைய வாங்கிக்கிங்க. பாமா வர்ரது ஞாபகம் இருக்கா இல்லையா?”
பேரக் குழந்தைகள் ஞபகத்திற்கு வரவே உடனே எழுந்து முதலில் காப்பியை வாங்கிக்கொண்டு கொட்டாவியும் விடுகிறார். இன்னும் கொஞ்சநேரம் விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
சமையலறையில் நுழைந்த நீலவேணி காலையுணவுக்கு சுருக்கமாக ஏதாவது செய்துகொள்ளலாம், அப்புறம் மதியம் சாப்பிட முடியாமப் போயிடும் என்று எண்ணியபடியே “ஏய் மாரி!” என்று கூப்பிடுகிறாள்.
மாரியம்மாவின் வசதிக்குறைவு அவளை மாரியாக்கி விட்டிருந்தது. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவள் என்பதும்கூட. அதையெல்லாம் கௌரவக் குறைவாக நினைக்குமளவு அப்படியொரு உணர்வு எப்போதும் ஏற்பட்டதே இல்லை.
“இதோ வந்துட்டேன்மா!” மாரியம்மா ஓடிவருகிறாள். “அவங்க என்ன பண்ணிட்டிருக்காங்க? எந்திரிச்சிட்டாங்களா? இந்தா அவங்களுக்கு எடுத்துப்போய்க் குடுத்துட்டு நீயும் குடி! “என்று மூன்று டம்ளர்களில் ஊற்றிவைத்திருந்த காப்பியைக் காண்பிக்கிறாள்.
வெளியே தனியறையில் இருக்கும் மாமனார் மாமியார்தான் அந்தஇருவர். அவர்களுக்கென்று தனிமுறையில் தயாரிக்கப்பட்ட காப்பியைக் காண்பிக்கிறாள்.
“சின்னம்மா வர்ரதுக்குள்ள வேலைகளை முடிச்சிட்டு பளிச்சுன்னு இருக்கணும். வேறெ துணி மாத்திக்க! காப்பி குடி. கடைக்குப் போயி கொஞ்சம் தக்காளி, மல்லித்தளை, இஞ்சி கருவேப்பிலை, பொதினா இதெல்லாம் வாங்கிகிட்டு ஓடிவா. யாராலுங்கிட்டே வாய்வளத்திகிட்டு இருக்காதே! வந்து வீடெல்லாம் தொடைக்கணும். மசாலா மிக்ஸியிலெ அரைக்கிறதெவிட கல்லுலெ ஆட்டுனாத்தான் கொழம்பு நல்லா இருக்கும்”
வேலையின் வேகத்தைக் கூட்ட அடுத்துள்ள வேலைகளை ஞாபகப்படுத்திக் கொண்டே இருப்பது இங்குமட்டுமல்ல எங்கும் உள்ள வழக்கம் தானே!
காப்பி சாப்பிட்ட கையோடு வேகவேகமாகக் கடைக்குப் போய் வந்துவிட்டாள்.
நீலவேணி காலையுணவு தயாரித்துக்கொண்டிருக்க மாரியம்மா வீடு முழுக்கத் துடைக்க ஆரம்பித்துவிட்டாள் “நேத்து நீ தொடைச்சது சுத்தமா இல்லே வரி வரியாத் தெரிஞ்சது. நல்லாப் பாத்துத் தொடெ!” உள்ளிருந்து குரல் வந்தது.
“சொல்லிட்டே இல்லேன்னா வேலை சுத்தம் இருக்காது. கூலிக்காரங்களோட கொணம் தெரிஞ்சதுதானே!” இது நீலவேணியின் எண்ணம்.
“எவ்வளவு நல்லா வேலெ செஞ்சாலும் இவங்களுக்கு மேவாது. ஆண்டவன் அவங்களெ அப்படிப் படைச்சிருக்கான் நம்மளை இப்படிப் படைச்சிருக்கான். இவங்ககிட்டெயெல்லாம் வாங்கித்தின்னு பொழைக்கணும்ணு நம்ம தலைலெ எழுதியிருக்கு. நாம்ம என்ன பண்ண முடியும்? ஆறு மாசத்துக்கு ஓருதடவெ ஊருக்குப் போகணும்ணு சொன்னாக்கூட மனசார சந்தோசமா அனுப்ப மாட்டாங்க. அதையும் சகிச்சுட்டுத்தான் காலத்தெ ஓட்டவேண்டியிருக்கு. இந்த எடம் வேண்டாம்ணு வேறெ பக்கம் போனா அவங்க மட்டும் சும்மாவா வெச்சு சோறு போட்டு சம்பளங் குடுக்கப் போறாங்க?”
இப்படியான எண்ணங்களோடு மாரியம்மா வீட்டைத் துடைத்து முடித்தாயிற்று.
அப்போது வீட்டு வாசலில் பைக் சத்தம் வரவே,”ஓடு! ஓடு! ஐயா வந்துட்டாங்க கேட்டெத் தெறந்துவிடு! பாவம் பசியோட இருப்பாங்க! எனக்கே நல்ல பசி. அவருக்கு எப்படி இருக்கும்?” என்ற நீலவேணி கணவர் உள்ளே வந்ததும்
“ஜலிதியாக் குளிச்சுட்டு வாங்க சாப்பிடலாம். ஏன் இவ்வளவு லேட்? பசியாகலியா?” எனக் கேட்டாள்.
“பசியா? பெருங்குடல் சிறுகுடலெச் சாப்பிட்டுட்டு இருக்கு. மொதல்லெ சாப்பிட்;டுத்தான் வேறெ வேலெ! கறிக்கடைலெ இன்னக்கி ஏக கூட்டம்!” கால் முகம் கழுவப் போனவர் என்ன நினைத்தாரோ குளித்துவிட்டே வந்துவிட்டார். சாப்பாட்டு மேசையில் காலையுணவு தயாராயிருக்க அவரும் நீலவேணியும் சாப்பிட்டனர். நீலவேணி,
“என்னங்க, ஒருநாள் ஒரு நேரம் லேட்டானதுக்கே எவ்வளவு பசி பாருங்க! அளவா சாப்பிடுங்க. மத்தியானம் சாப்பிட முடியாது” அக்கரையோடு சொல்கிறாள்.
அதேவீட்டில் வேறொரு மூலையில் வேலை செய்துகொண்டிருந்த மாரியம்மாவின் பசியைப்பற்றி யாருக்குக் கவலை?
“மாரி! மசாலாவுக்கு செலவுக எல்லாம் வணக்கி வச்சிருக்கேன். வெங்காயமும் தனியா வெச்சிருக்கு. அதையும் சேத்துக்க. நல்லா ஆட்டிட்டு வா பார்க்கலாம். தேங்கா துருவி வெச்செயில்லே அதையும் எடுத்துகிட்டுப் போயிரு! அதத் தனியா ஆட்டிட்டு வரணும்! சாப்பிட்டு போ!”
“சரீங்கம்மா!” என்றவள் இரண்டு பாத்திரங்களில் போட்டு வைத்திருந்த இட்லி தோசைகளை சட்னியோடு கொண்டு போய் தனிப்பகுதியில் இருந்த பெரிய ஜீவன்கள் இருவருக்கும் கொடுத்துவிட்டு வந்து அவளுக்கு வைத்திருந்ததை எடுத்துக் கொண்டாள்.
“இவ்வளவு வசதியான புள்ளகுட்டியப் பெத்தவங்களுக்கே இந்த நெலைமை! நாளைக்கு நமக்கு ஆண்டவன் என்னவழி விடறானோ!” மனதில் ஓடவிட்டவாரே சாப்பிட்டாள்.
“மணி பத்தரை ஆகிவிட்டது. கொஞ்ச நேரத்துலெ சின்னம்மா வந்துடுவாங்க. பக்கம் வந்துட்டாங்களாம். வர்ரதுக்குள்ளெ ஆட்டற வேலைகளெ முடிச்சுட்டா அவங்களோட ரெண்டு வார்த்தெ பேச நேரமிருக்கும். இல்லீன்னா அவதிப் பொழப்பாயிடும்”
எண்ணமிட்டபடியே மசாலாவை ஆட்டி முடித்துவிட்டு தேங்காயையும் தனியாக ஆட்டி வைத்துக் கொண்டாள்
“ஊருக்குப் போயிட்டு வந்து ஆறுமாசத்துக்கு மேலே ஆயிட்டுது. இன்னக்கி அம்மாகிட்டெ சொல்லணும். ஆண்டவன் புண்ணியத்துலெ அவங்க சரி சொல்லிட்டாங்கன்னா சின்னம்மா எரக்கப் பட்டாங்கன்னா அவங்க கார்லெகூடப் போயிரலாம். பஸ்ஸுக்காரனுக்குக் குடுக்கிற காசுக்கு புள்ளெ குட்டிகளுக்கு கொஞ்சம் சேத்தியே வாங்கிகிட்டுப் போலாம். இன்னக்கி செய்யற கரி சோறு பலகாரத்துலெ மிச்சம் மீதி இருக்கிறதெக் குடுத்தாங்கன்னா எல்லாஞ் சேந்து புள்ளெகுட்டீக ரெண்டு நாளைக்கு மனசாரச் சாப்பிட்டுக்கும்”
இப்படியொரு எண்ணம் வந்தவுடன் ஊரில் உள்ளவர்கள்மேல் ஞாபகம் மேலிட நெஞ்சு கனத்தது. துக்கமேலீட்டால் கண்கள் குளமாகி விட்டது.
மாரியம்மாவுக்கு சேலத்துப்பக்கம் ஒரு கிராமம்தான் சொந்தஊர். பாமா கணவரின் சொந்த ஊரும் அதுதான். மாமனார் மாமியார் இன்னும் அங்கேதான் இருக்கிறார்கள். அவர்கள் மூலமாகத்தான் மாரியம்மா கோயம்புத்தூரிலுள்ள நீலவேணி வீட்டுக்கு வேலைக்குச் சேர்த்து விடப்பட்டிருக்கிறாள். அவளுக்கு இரண்டு பெண்கள். இரண்டையும் பக்கத்திலுள்ள ஒரே ஊருக்குத்தான் கட்டிக் கொடுத்திருக்கிறான். இவளும் புருசனும் கூலிவேலைதான் செய்தார்கள்.
வயதாக ஆக விவசாயக்கூலிக்குப் போக முடியலே. “சும்மா உட்கார்ந்து சாப்பிடறதுக்கு நாம்ம என்ன உள்ள மகராசர் வயித்துலியா பொறந்திருக்கோம்? வயத்தக் கழுவரதுக்கு எதாச்சும் செய்துதானெ ஆகணும்”
என்ற தீர்மானப்படி மாரியம்மா இங்கு வீட்டுவேலைக்கு வந்து சேர அவள்புருஷன் ஒருமகள் வீட்டில் அவங்களுக்குப் பாரமாக இல்லாமல் ஆடுமேய்த்துப் பிழைத்துக்கொண்டுள்ளார்.
பெண்கள் இரண்டு பேருமே கூலி சீவனம்தான். ஒருத்திக்கு இரண்டு ஆண் பிள்ளைகள்;. இன்னொருத்திக்கோ இரண்டும் பெண் குழந்தைகள். சின்னப் பள்ளிக்கூடம்தான் போகிறார்கள்.
“இந்தத்தடவை போகும்போது பேரன்களுக்கு புதுத்துணிகளும் பேத்திகளுக்குக் கால் கொலுசும் வாங்கிக் கொடுத்தாக வேண்டும். அவர்களுக்கு நாம்ம செய்யாமெ வேறு யார் செய்வாங்க! அந்தப்பாவி மனுசன் ஒரு பொகையிலெ குச்சி வாங்கக்கூட புள்ளைங்க கையப் பாத்துட்டு இருப்பாரு. இந்தத்தடவெ அவருக்குங் கொஞ்சம் சாசு குடுத்துட்டு வரணும்” எண்ணி முடிப்பதற்குள் மசாலாவும் தயாராகிவ்ட்டது.
“மாரீ! இன்னும் எவ்வளவு நேரம் ஆட்டிட்டு இருக்கே?” உள்ளிருந்து குரல் வர, “முடிஞ்சதும்மா! கல்லெக்கூட கழுவியாச்சு. வந்துட்டேன்!”
வேகமாக உள்ளே கொண்டு போகிறாள்.
பத்து நிமிடம்தான் இருக்கும். வெளியே ஹார்ன் சப்தம் வருகிறது. எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு நீலவேணியும் வேலாயுதமும் வெளியே வருகிறார்கள். முதலில் இறங்கிய பேரனும் பேத்தியும் ஓடிவந்து தாத்தா பாட்டியைக் கட்டிப் பிடித்துக்கொள்ள பின்னாலேயே மகளும் மருமகனும் இறங்கி வருகிறார்கள்.
அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். ஊர்நலம் விசாரிக்கவும் இடையில் பேரக் குழந்தைகளைக் கொஞ்சவும் பலகாரம் கொடுக்கவும் அடுப்படிக்கு ஓடவும் அங்கு வந்த மகளிடம் மருமகனை வைத்துக்கொண்டு விசாரிக்க முடியாததை எல்லாம் விசாரித்து தெரிந்துகொள்ளவும் நீலவேணிக்கு ஒரே அரிபரி!
சாப்பாட்டு நேரமும் ஆயிற்று!
சாப்பிட்டு முடிந்தது. மாமனாரும் மருமகனும் டிவி பார்த்துக்கொண்டே பலதையும் பேசிக்கொண்டிருக்க மாரி பின்பக்க அறையில் இருந்த முதியவர்களுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு வந்து தானும் சாப்பிட மணி மூன்றாகி விட்டது. மருமகனும் பேரக் குழந்தைகளும் மாடியிலுள்ள படுக்கையறையிலும் வேலாயுதம் கீழே உள்ள அறையிலும் போய் தூக்கம் போட, நீலவேணியும் பாமாவும் வரவேற்பறையில் உள்ள சோபாவில் சாய்ந்தபடி பேசிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது பாமாவுக்கு மாரியம்மாவுக்காக ஊரில் இருந்து கொண்டு வந்திருந்த பழைய சேலைகள் ஞாபகத்துக்கு வரவே மாரியம்மாவை அழைத்து,
“இந்தா மாரி உனக்குச் சேலை கொண்டாந்திருக்கேன். கட்டிக்கோ!” என்றபடி பாமா பையில் இருந்து நான்கு பழைய சேலைகளை எடுத்தாள். அதைப்பார்த்த மாரியம்மாவுக்கு ரொம்ப சந்தோசம்.
“சின்னம்மா மனசு நல்ல மனசு! மகராசி! நாலுசேலை கொண்டாந்திருக்காக! ஆளுக்கு ரெண்டக் குடுத்தா எம்புள்ளைங்க எவ்வளவு நல்லாக் கட்டிக்குவாக!” பூரித்துப் போய்விட்டாள்.
அப்போது நீலவேணி அதைப் பாமாவிடமிருந்து வாங்கி,
“அடடே! எவ்வளவு நல்லதாக் கொண்டுவந்திருக்கே! நான் ரெண்டக் கட்டிட்டு மாரிக்கு ரெண்டக் குடுத்தர்ரேன்!” என்று சொல்லி நல்லது இரண்டைத் தான் எடுத்துக்கொண்டு மாரியம்மா கையில் சுமாரானது இரண்டைக் கொடுத்து, “மாரி! உனக்குத்தான் நல்லது ரெண்டக் குடுத்திருக்கேன். கட்டிக்கோ!” கையில் கொடுத்தாள். மாரிக்கு உயிரே போய்விட்டது மாதிரி ஆகிவிட்டது.
அவர்கள் போட்ட பிச்சையைவிட அதில் போட்ட மண் அதிகமாக இருந்தது!
பாத்திரங்கள் கொட்டிக்கிடந்தது. கழுவ வேண்டும். “இருக்கிற மகராசர் ஓய்வா இருக்கலாம். நாம்ம அப்படி இருக்கமுடியுமா?” என்று கண்ணீரை நெஞ்சிலே இறக்கிக்கொண்டு பாத்திரக் குவியலைக் கழுவப் போனாள். அம்மாவும் மகளும் பேசியது அவளுக்கும் அரைகுரையாகக் கேட்டது.
“ஏண்டி பாமா நீதானாகட்டும் ஒரேயடியா இத்தனை நாள் வராமெ இருந்துட்டா எங்களுக்கு உங்கமேலெ ஞாபகமா இருக்காதா? இல்லே குழந்தைகளத்தான் நெனைக்காமெ இருக்க முடியுமா? உனக்கு எப்படிடி எங்க நெனப்பே வராமப் போச்சு? நாங்க அடிக்கடி அங்கெ வந்தாலும் நீங்க இங்க அடிக்கடி ஒருதடவைக்கு ரெண்டுதடவையா வந்துபோறதுதானெ முறை! தம்பி அடிக்கடி வந்தாலும் பரவாயில்லே. பெங்களுருக்கு வேலைக்குப் போனாலும் போனான், சேர்ந்த புதுசுலெ அடிக்கடி லீவு போடமுடியாதுன்னுட்டான். நாங்க என்ன பற்று பாசமில்லாத மிருக ஜென்மங்களா? என்னடி இது! பெத்தமனம் பித்து புள்ளெமனம் கல்லுன்னு சும்மாவா சொன்னங்க?” புலம்பித் தீர்த்துவிட்டாள் நீலவேணி.
ஒரு வழியா அவளைச் சமாதானப் படுத்திய பாமா, “ஏம்மா மாரீம்மா ஒழுங்கா இருக்காளா? பரவா இல்லையா?” என்று கேட்கிறாள்.
“அவள் பரவாயில்லை! இந்தக் காலத்துலெ யார் இவ்வளவு ஒழுங்கா இருப்பாங்க? அவ இருக்கறதுனால தான். எனக்குத் துன்பம் இல்லே. இல்லென்னா கிழடுகளை யார் பாத்துக்குவாங்க? அவ குடும்பம் புள்ளெ குட்டி யாரையும் நெனைக்கிறதே இல்லே! நல்ல மனுஷி!” என்று மாரியம்மாளுக்குக் கேட்காமல் சொன்னவள், அவளுக்குக் கேட்கும்படி சப்தமாக,
“மாரிக்கு என்ன குறைச்சல்? உனக்குத்தான் ரொம்ப அக்கரை! அடுத்த மாசம் உங்க பெரிய அத்தை வர்ரேன்னு சொல்லீருக்கு. அதெப் பெரிசுகளப் பாத்துக்கச் சொல்லிட்டு நாங்க ஊருக்கு வருவோம். அப்போ மாரியையும் கூட்டகிட்டு வர்ரோம். அவ நல்லா இருக்கறா எந்தக் கொறையும் இல்லேன்னு அவ புள்ளைங்ககிட்டேசொல்லீரு!” என்று சொல்கிறாள்.
அங்கே ஒருத்தி விட்ட கண்ணீர் தண்ணீரில் கரைகிறது. பழைய சேலைகளும் பாத்திரங்களில் மிச்சம் இருந்த பலகாரமும் கறியும் சோறும் கேட்பாரற்றுக் கிடந்தது. கால் கொலுசும் புதுத்துணிகளும் கனவுகளாக நீண்டன. ஆடு மேய்க்கும் அந்தக் கிழவன்?………